மாலத்தீவின் புதிய அதிபராக பதவியேற்றார் முகமது மூயிஸ் - சீனா ஆதிக்கம் செலுத்துமா?

மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ்
மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ்

மாலத்தீவின் புதிய அதிபராக முகமது மூயிஸ் பதவியேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்றார்.

மாலத்தீவின் 8-வது அதிபராக முகமது மூயிஸ் (45) பதவியேற்றுக் கொண்டார். அந்நாட்டின் தலைமை நீதிபதி முதாசிம் அத்னான், முகமது மூயிஸுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணை அதிபராக ஹுசைன் முகமது லத்தீஃப் பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, வங்கதேச செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஹசன் மகமுத், பாகிஸ்தான் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் முர்தாஜ் சோலங்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ்
மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ்

2013 முதல் 2018 வரையில் அதிபராக இருந்த யாமீன் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டார். இந்தியாவுடனான நட்புறவை வலுப்படுத்திய அதிபராக முந்தைய அதிபர் இப்ராஹிம் முகமது சோலி திகழ்ந்தார். அவரை முகமது மூயிஸ் செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோற்கடித்தார். இதனால் சீனாவுக்கு ஆதரவாக முகமது மூயிஸ் செயல்படுவார் என்று கருதப்படுகிறது. எனினும், புதிய அதிபர் முகமது மூயிஸுடன் நட்புறவை வலுப்படுத்த இந்தியா தயாராக உள்ளதாக அந்நாட்டுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பதவியேற்புக்குப் பிறகு பேசிய முகமது மூயிஸ், 'மாலத்தீவின் இறையாண்மை, சுதந்திரத்தைப் பாதுகாக்க அந்நிய நாட்டு ராணுவம் இல்லாத மாலத்தீவாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இதை அவர் தேர்தல் வாக்குறுதியாகவும் அளித்திருந்தார். இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள மாலத்தீவில் இந்திய ராணுவம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூயிஸுடன் கிரண் ரிஜிஜு
மூயிஸுடன் கிரண் ரிஜிஜு

முன்னதாக, இந்தியாவின் நிதி மற்றும் கடன் உதவியுடன் மாலத்தீவில் செயல்படுத்தப்பட்டு வரும் இணைப்புத் திட்டப் பணிகள் குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆய்வு மேற்கொண்டார். மாபெரும் மாலி இணைப்புத் திட்டத்தின் கீழ் தலைநகரான மாலிக்கும் அதன் அருகே அமைந்துள்ள வில்லிங்கில், குல்ஹிபல்ஹு, திலாஃபூஷி உள்ளிட்ட தீவுகளை இணைக்க 6.74 கி.மீ. நீளத்திலான பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இத்திட்டத்துக்கு இந்தியா சாா்பில் 100 மில்லியன் டாலர் நிதியுதவியாகவும், 400 மில்லியன் டாலர் கடனுதவியாகவும் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதளத்தில், 'மாபெரும் மாலி இணைப்புத் திட்டத்தின் கட்டமைப்புப் பணிகளை ஆய்வு மேற்கொண்டதில் மகிழ்ச்சி அடைந்தேன். இந்திய அரசின் நிதி மற்றும் கடன் உதவியோடு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மாலி பிராந்தியத்தில் பொருளாதார வளா்ச்சி மேம்படும் என்று நம்புகிறேன்' எனப் பதிவிட்டார்.

மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது சோலி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரையும் கிரண் ரிஜிஜு சந்தித்துப் பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in