மீண்டும் வெளிநாடு செல்லும் மோடி: ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் பயணத்தின் பின்னணி என்ன?

மீண்டும் வெளிநாடு செல்லும் மோடி: ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் பயணத்தின் பின்னணி என்ன?
பிரதமர் மோடி

2022-ம் ஆண்டில் பிரதமர் மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம் அடுத்த மாதம் தொடங்குகிறது. மே 2 முதல் 4-ம் தேதிவரையிலான இந்தப் பயணத் திட்டத்தில் ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் செல்கிறார். இந்தத் தகவலை வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

ஜெர்மனியில்...

இந்தப் பயணத்தில், முதலாவதாக ஜெர்மனிக்குச் செல்கிறார் மோடி. தலைநகர் பெர்லினில் ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மோடி, இந்தியா - ஜெர்மனி அரசுகளுக்கு இடையிலான ஆலோசனையின் 6-வது கூட்டத்தில் அவருடன் இணைந்து பங்கேற்கிறார். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்தக் கூட்டத்தில், இரு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறை அமைச்சர்கள் பங்கேற்பார்கள். 2021 டிசம்பரில் ஜெர்மனியின் புதிய பிரதமராக ஓலாஃப் ஷோல்ஸ் பொறுப்பேற்ற நிலையில், இந்தக் கூட்டத்தில் அவரைச் சந்தித்துப் பேசவிருக்கிறார் மோடி.

இரு தலைவர்களும் இணைந்து வர்த்தகக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றவிருக்கிறார்கள். ஜெர்மனியில் வசிக்கும் இந்தியர்களுடன் மோடி கலந்துரையாடுகிறார்.

ஜெர்மனி பிரதமர்  ஓலாஃப் ஷோல்ஸ்
ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ்

இந்தியா - ஜெர்மனி ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவு தொடங்கி, 2021-ம் ஆண்டுடன் 70 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. 2000-ம் ஆண்டு முதல் இரு நாடுகளும் வியூக அடிப்படையிலான உறவில் இணைந்தன. இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் பல்வேறு தளங்களில் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டென்மார்க்கில்...

ஜெர்மனியிலிருந்து டென்மார்க் செல்லும் மோடி, தலைநகர் கோபன்ஹேனில் அந்நாட்டின் பிரதமர் மெட்டெ ஃப்ரெடெரிக்ஸனைச் சந்தித்துப் பேசுகிறார். டென்மார்க் ஏற்பாடு செய்திருக்கும் இந்தியா - நார்டிக் இரண்டாவது உச்சி மாநாட்டிலும் கலந்துகொள்கிறார். 2018-ல் ஸ்வீடன் தலைநர் ஸ்டாக்ஹோமில் இதன் முதல் மாநாடு நடைபெற்றது.

டென்மார்க் பிரதமர் மெட்டெ ஃப்ரெடெரிக்ஸன்
டென்மார்க் பிரதமர் மெட்டெ ஃப்ரெடெரிக்ஸன்

வடக்கு ஐரோப்பா மற்றும் வடக்கு அட்லான்டிக் நாடுகள் என அழைக்கப்படும் ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.

பெருந்தொற்றுக்குப் பிறகான காலகட்டத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுத்தல், பருவநிலை மாற்றம், கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அந்த மாநாட்டில் விவாதிக்கப்படும். இந்தியா - டென்மார்க் வர்த்தக அமைப்பின் கூட்டத்திலும் கலந்துகொள்ளும் மோடி இந்திய வம்சாவளியினர் மத்தியிலும் உரையாற்றுகிறார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானுடன் பிரதமர் மோடி
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானுடன் பிரதமர் மோடி

பிரான்ஸில்...

பின்னர் டென்மார்க்கிலிருந்து கிளம்பும் மோடி மே 4-ம் தேதி பிரான்ஸ் செல்கிறார். அந்நாட்டின் அதிபராக மீண்டும் தேர்வாகியிருக்கும் இம்மானுவேல் மெக்ரானைச் சந்தித்துப் பேசுகிறார். இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவு தொடங்கி 75 ஆண்டுகள் ஆகும் நிலையில், இரு நாடுகளின் தலைவர்கள் பிரான்ஸில் சந்தித்துப் பேசுவது முக்கியத்துவம் பெறுகிறது.

Related Stories

No stories found.