புதின் உடன் மோடி திடீர் தொலைபேசி உரையாடல்

புதின் உடன் மோடி திடீர் தொலைபேசி உரையாடல்

ரஷ்ய அதிபர் புதினை இந்திய பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். உக்ரைன் போர், ஜி-20 ஏற்பாடுகள், எல்லையில் சீனாவின் வாலாட்டல் என பல்வேறு முக்கிய அம்சங்களுக்கு மத்தியில், இரு நாட்டுத் தலைவர்களின் திடீர் தொலைபேசி உரையாடல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் உக்கிரமடைந்திருக்கிறது. மேற்கு நாடுகள் உட்பட சர்வதேசளவில் பெரும் எதிர்ப்பை ரஷ்யா சம்பாதித்திருப்பதன் மத்தியில், ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வது கண்டனத்துக்கும் ஆளாகியிருக்கிறது. இது தொடர்பாக உக்ரைன் தேசம் அதிகாரபூர்வமாக தனது ஆட்சேபத்தை பதிவு செய்தபோதும், இந்தியா தனது முடிவிலிருந்து மாறவில்லை. அதேபோல உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிராக இந்தியா திடமான நிலைப்பாடு எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் போருக்கு எதிரான முலாம் பூசிய வார்த்தைகளோடு இந்தியா அமைதி காக்கிறது,

அடுத்தபடியாக, அடுத்த ஆண்டு இந்தியா முன்னெடுக்கும் ஜி-20 உச்சி மாநாட்டில் அதன் நேச தேசமான ரஷ்யா கலந்துகொள்ளுமா என்ற ஐயம் எழுந்துள்ளது. இந்தோனேஷியாவில் அண்மையில் கூடிய ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் முடிவை கடைசி நேரத்தில் ரஷ்யா கைவிட்டது. ரஷ்யாவுக்கு அழைப்பு விடுக்கக்கூடாது என ஜி-20 மாநாட்டை நடத்திய இந்தோனேசியாவுக்கு, பிரிட்டன் மற்றும் சில ஐரோப்பிய தேசங்கள் நெருக்கடி அளிக்கவும் செய்தன. இந்த பின்னணியில் இன்றைய புதின் - மோடி சந்திப்பில் ஜி-20 குறித்தும் பேசப்பட்டதாக அகில இந்திய வானொலி உறுதி செய்தியிருக்கிறது.

மூன்றாவதாக, இந்தியா - சீன எல்லையில் பதட்டம் அதிகரித்து வருகிறது. இரு நாட்டு வீரர்கள் இடையிலான தவாங் மோதலை தொடர்ந்து, இந்திய எல்லை நெடுக சீனா ஓசையின்றி துருப்புகளை குவித்து வருகிறது. இந்தியாவும் ரஃபேல் போர் விமானம் உட்பட தனது நவீன படைகலன்களையும் தயார் நிலைக்கு உத்தரவிட்டிருக்கிறது. ஆனபோதும் அநாவசிய எல்லை பதட்டத்தையும், போர் மேகத்தையும் இந்தியா தவிர்க்க விரும்புகிறது. முதல் கட்டமாக ராஜாங்க பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்புகளை இந்தியா பரிசீலிக்கிறது. இந்தியா - சீனா என இரு தேசங்களுக்கும் தோழனான ரஷ்யாவின் உதவி தற்போது இந்தியாவுக்கு தேவைப்படுகிறது.

இப்படி மூன்று முதன்மையான அம்சங்களுக்கும் அப்பால், ரஷ்யாவுக்கான தனது பயணத்தை மோடி தவிர்த்திருப்பது தொடர்பாகவும் புதின் உடனான உரையாடலுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. கடந்தாண்டு டிச.6 அன்று ரஷ்ய அதிபர் இந்தியா வருகை தந்து, இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். அடுத்து இந்தியாவின் முறையாக, பிரதமர் மோடி ரஷ்யா செல்வது என அப்போதே முடிவு எட்டப்பட்டது.

இந்த டிசம்பரில் திட்டமிடப்பட்டிருந்த மோடியின் ரஷ்ய பயணம், உக்ரைன் போர் உள்ளிட்ட சில காரணங்களினால் தவிர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பொருட்டும் மரியாதை நிமித்தம் புதினுடன் மோடி பேசியிருக்கலாம் என்கிறார்கள். தற்போதைய இருதரப்பு பேச்சுவார்த்தையை க்ரெம்ளின் முதலில் உறுதி செய்தது. அடுத்து வெளியான இந்தியாவின் அதிகாரபூர்வ தகவலில், வழக்கம்போல வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் ராணுவ தளவாடங்கள் தொடர்பாக பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in