‘குவாட் மாநாட்டில் மோடி, பைடனைச் சந்திப்பேன்’ - ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸ்!

‘குவாட் மாநாட்டில் மோடி, பைடனைச் சந்திப்பேன்’ - ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸ்!
ஆன்டனி அல்பனீஸ்

நேற்று நடந்த ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சியின் தலைவர் ஆன்டனி அல்பனீஸ் வெற்றிபெற்று அந்நாட்டின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்தச் சூழலில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் குவாட் மாநாட்டில், முந்தைய பிரதமர் ஸ்காட் மோரிஸனுக்குப் பதிலாக ஆன்டனி அல்பனீஸ் கலந்துகொள்ளவிருக்கிறார்.

முன்னதாக, தோல்வியை ஒப்புக்கொண்டிருக்கும் ஆன்டனி அல்பனீஸ், மே 24-ல் நடைபெறவிருக்கும் குவாட் மாநாட்டில் ஆஸ்திரேலியப் பிரதமர் எனும் முறையில் தானே கலந்துகொள்வதாகக் கூறியிருந்தார்.

எனினும், இந்தக் கூட்டத்தில் தானே கலந்துகொள்ளப்போவதாகப் புதிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் கூறியிருக்கிறார். குவாட் மாநாட்டில் பங்கேற்கச் செல்லவிருக்கும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோருடன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசவிருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மே 23-ம் தேதி பிரதமராகப் பதவியேற்கவிருப்பதாகவும் தன்னுடன் தனது அமைச்சரவை சகாக்கள் பதவியேற்பார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார். குவாட் மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் ஆஸ்திரேலிய அரசில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கும் செய்தியை உலகுக்கு உணர்த்தவிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இடதுசாரிக் கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவரான ஆன்டனி அல்பனீஸ், பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பிரச்சினைகளில் வலதுசாரியான ஸ்காட் மோரிஸனுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in