முதன்முறையாக டென்மார்க் சென்ற மோடி: திட்டம் என்ன?

கோபன்ஹேகன் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்கும் டென்மார்க் பிரதமர் மெட்டெ ஃப்ரெடெரிக்ஸன்
கோபன்ஹேகன் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்கும் டென்மார்க் பிரதமர் மெட்டெ ஃப்ரெடெரிக்ஸன்

இந்த ஆண்டின் முதல் வெளிநாட்டுப் பயணத்தின் ஒருபகுதியாக ஜெர்மனியிலிருந்து இன்று டென்மார்க் சென்றடைந்தார் பிரதமர் மோடி. டென்மார்க்கு அவர் செல்வது இதுவே முதல் முறை ஆகும்.

இந்தப் பயணத்தின் முதல் கட்டமாக, நேற்று காலை ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள பிராண்டென்பர்க் விமான நிலையத்தைச்சென்றடைந்த மோடி, அங்கிருந்து ஆல்டோன் கெம்பின்ஸ்கி ஓட்டலைச் சென்றடைந்தார். அங்கு அவரைச் சந்திக்க ஏராளமான புலம்பெயர் இந்தியர்கள் அவரைச் சந்தித்தனர்.

பின்னர் ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்திய மோடி, இந்தியா - ஜெர்மனி அரசுகளுக்கு இடையிலான ஆலோசனையின் 6-வது கூட்டத்தில் அவருடன் இணைந்து தலைமை வகித்தார். பயணத் திட்டத்தின் அடுத்த கட்டமாக டென்மார்க் புறப்படுவதற்கு முன்னர், "டென்மார்க் பிரதமர் மெட்டெ ஃப்ரெடெரிக்ஸனுடன் இருதரப்புக் கூட்டத்தில் பங்கேற்கிறேன். டென்மார்க் நாட்டுடனான பசுமை வியூகக் கூட்டுறவின் முன்னேற்றம் குறித்தும், இருதரப்பு உறவின் பிற அம்சங்களையும் மதிப்பீடு செய்வதற்கு இந்தச் சந்திப்பு வாய்ப்பளிக்கும்" என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

டென்மார்க் - இந்தியா இரு நாடுகளுக்கு இடையிலான பசுமை வியூகக் கூட்டுறவு, 2020 செப்டம்பரில் நடந்த மெய்நிகர்க் கூட்டத்தின்போது தொடங்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் டென்மார்க் பிரதமர் மெட்டெ ஃப்ரெடெரிக்ஸன் இந்தியா வருகை தந்தார். அதைத் தொடர்ந்து இந்தத் திட்டம் ஐந்தாண்டுத் திட்டமாக மாற்றம் கண்டது.

இந்நிலையில், இன்று டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனைச் சென்றடைந்த மோடியை, மெட்டெ ஃப்ரெடெரிக்ஸன் நேரில் சென்று வரவேற்றார். டென்மார்க் ஏற்பாடு செய்திருக்கும் இந்தியா - நார்டிக் இரண்டாவது உச்சி மாநாட்டிலும் மோடி கலந்துகொள்கிறார். 2018-ல் ஸ்வீடன் தலைநர் ஸ்டாக்ஹோமில் இதன் முதல் மாநாடு நடைபெற்றது. வடக்கு ஐரோப்பா மற்றும் வடக்கு அட்லான்டிக் நாடுகள் என அழைக்கப்படும் ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.

பெருந்தொற்றுக்குப் பிறகான காலகட்டத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுத்தல், பருவநிலை மாற்றம், கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அந்த மாநாட்டில் விவாதிக்கப்படும். இந்தப் பயணத்தின்போது டென்மார்க் அரசி இரண்டாம் மார்கரேட்டைச் சந்தித்துப் பேசுகிறார். அத்துடன் இந்தியா - டென்மார்க் வர்த்தக வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் மோடி, அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களுடனும் உரையாடவிருக்கிறார். டென்மார்க்கில், 16,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்துவருகின்றனர்.

இந்தியாவில் செயல்படும் 200-க்கும் மேற்பட்ட டென்மார்க் நிறுவனங்கள், மேக் இன் இந்தியா, ஜல் ஜீவன் திட்டம், டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட திட்டங்களில் பங்களிப்பை வழங்கிவருகின்றன. அதேபோல, டென்மார்க்கில் உள்ள 60-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் இரு தரப்பு வர்த்தக உறவை வளர்த்தெடுக்க உதவுகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in