வெறுப்பேற்றிய விமானப் பயணிக்கு பலமான ‘பஞ்ச்’: புதிய சர்ச்சையில் மைக் டைசன்!

வெறுப்பேற்றிய விமானப் பயணிக்கு பலமான ‘பஞ்ச்’: புதிய சர்ச்சையில் மைக் டைசன்!

புகழ்பெற்ற ஹெவிவெயிட் குத்துச்சண்டை முன்னாள் சாம்பியனான மைக் டைசன், சர்ச்சைகளுக்குப் பேர்போனவர். சக குத்துச்சண்டை வீரர் ஹோலிஃபீல்டின் காதைக் கடித்தது, மனைவியைத் தாக்கியது, போதைப் பொருள் பயன்படுத்தியது, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது என அவரைப் பற்றிய சர்ச்சைகள் ஏராளம்.

இளம் வயதில் கேலி கிண்டல்களுக்கு உள்ளான மைக் டைசன், போதைப் பொருள் பயன்படுத்தியது உட்பட பல்வேறு குற்றங்களுக்காகச் சிறுவர் சீர்திருத்த முகாம்களில் நாட்களைக் கழித்தவர். பின்னாட்களில் குத்துசண்டை விளையாட்டில் உலகப் புகழ்பெற்ற பின்னரும் சர்ச்சைகள் குறையவில்லை.

மைக் டைசன், வெகு விரைவில் பொறுமையிழந்துவிடும் வெடித்துவிடும் தன்மை கொண்டவர் என்பது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல உலகுக்கே தெரியும்தான். ஆனாலும் பாவம், ஒரு பயணி விமானத்தில் அவரிடம் சளசளவென பேசித் தொந்தரவு செய்தததற்கான விலையைக் கொடுக்க நேர்ந்திருக்கிறது.

புதன்கிழமை அந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. சான் பிரான்சிஸ்கோவிலிருந்து புளோரிடாவின் ஃபோர்ட் லாடர்டேலுக்குச் செல்லவிருந்த ஜெட்ப்ளூ ஏர்வேஸ் விமானத்தின் முதல் வகுப்பில் உள்ள தனது இருக்கையில் மைக் டைசன் அமர்ந்திருந்தார். அப்போது அவருக்குப் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர் ஆர்வ மிகுதியில் அவருடன் பேச்சுக் கொடுத்தார். அந்த இளைஞருடனும் அவரது நண்பருடனும் நட்பார்ந்த முறையில்தான் டைசன் பேசினார். ஆனாலும், அந்த இளைஞர் அவருக்குப் பின்னே அமர்ந்தபடியும் எழுந்து நின்றபடியும் சளசளவெனப் பேசிக்கொண்டே இருந்தார். கூடவே, செல்போனில் அதைப் படம் பிடித்துக்கொண்டிருந்தவரைப் பார்த்து ரகசியமாகவும் ஏதேதோ பேசினார்.

காதுக்கு அருகே நின்றபடி கன்னாபின்னாவென பேசிக்கொண்டிருந்த அந்த இளைஞரால் பொறுமையிழந்த மைக் டைசன் அப்படிச் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். அப்படியும் அந்த இளைஞர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த டைசன், தனது இருக்கையிலிருந்து எழுந்து நின்று பின்னால் திரும்பி அவரது முகத்தில் பல முறை கையால் குத்தினார்.

இந்தக் காணொலி இணையத்தில் வைரலாகியிருக்கிறது. பலத்த ‘பஞ்ச்’ வாங்கிய அந்த இளைஞர் தனது முகத்தில் ஏற்பட்ட ரத்தக் காயத்தைக் காட்டுவதும் காணொலியில் பதிவாகியிருக்கிறது.

அந்த இளைஞர் மைக் டைசனைக் கிண்டல் செய்ததாகவும் அவர் மீது தண்ணீர் பாட்டிலை வீசியதாகவும் மைக் டைசன் தரப்பு தெரிவித்திருக்கிறது. அந்த இளைஞரை விமான நிலைய மதுக்கூடத்தில் பார்த்ததாகவும், அப்போதே அவர் உரக்கப் பேசிக்கொண்டிருந்ததாகவும், சச்சரவு செய்யக்கூடியவராகத் தென்பட்டதாகவும் அந்த விமானத்தில் பயணம் செய்த சாரா பர்ச்ஃபீல்ட் எனும் பயணி தெரிவித்திருக்கிறார்.

விமானம் சான் பிரான்சிஸ்கோ சென்றடைந்த நிலையில், மைக் டைசனிடமும் அந்த இளைஞரிடமும் அந்நகரப் போலீஸார் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். இதுவரை வழக்கு ஏதும் பதிவுசெய்யப்படவில்லை.

Related Stories

No stories found.