ரஷ்ய அதிபர் புதின் இறந்துவிட்டாரா?

பிரிட்டன் உளவு நிறுவனத்தால் பரபரப்பு!
ரஷ்ய அதிபர் புதின் இறந்துவிட்டாரா?

பிரிட்டன் உளவு நிறுவனமான எம்ஐ6, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இறந்துவிட்டதாகப் புதிய தகவலைக் கசிய விட்டுள்ளது. புதினுக்குப் புற்றுநோய், அறுவை சிகிச்சையால் அவதிப்படுகிறார் என்றெல்லாம் அண்மைக்காலமாக செய்திகள் அதிகரித்து வருகின்றன. இவற்றின் மத்தியில், புதின் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், ரஷ்யாவுக்கு எதிராக நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு அதிபர் மறைவு குறித்த தகவல்களை ரஷ்யா மறைத்து வருவதாகவும் எம்ஐ6 தெரிவிக்கிறது.

சில தினங்களுக்கு முன்னர் உக்ரைன் போரில் காயமடைந்து சிகிச்சை பெறும் ரஷ்ய வீரர்களை அதிபர் புதின் சந்தித்து நலம் விசாரிக்கும் புகைப்படங்கள் வெளியாயின. அவற்றை ஆராய்ந்த சர்வதேச உடல்மொழி ஆய்வாளர்கள், புதின் போல தோற்றமளிக்கும் நபரே புகைப்படத்தில் இடம்பெற்றிருப்பதாக அறிவித்தனர். ஹிட்லர், சதாம் ஹூசைன் போன்றோர் பாணியில் அதிபர் புதினும் பாதுகாப்பு காரணங்களுக்காக, தன்னைப் போன்ற உருவமுடையவர்களை உலவ விடுவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த புதின் நகல்கள் தற்போது முழுமையாகப் பயன்படுத்தப்படுவதாகவும், அசல் புதின் உயிரோடு இல்லை என்றும் தற்போதைய ஊகங்கள் றெக்கையடித்தன.

69 வயதாகும் அதிபர் புதினின் உடல்நிலை குறித்த எதிர்மறையான தகவலகள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகம் பரப்பப்பட்டு வருகின்றன. அதிலும் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் நடவடிக்கைகளை அடுத்து இந்த ‘செய்திகளுக்கு’ மேற்கு ஊடகங்கள் வலிந்து முக்கியத்துவம் தர ஆரம்பித்துவிட்டன. பார்கின்சன் நோயால் புதின் அவதிப்பட்டு வருவதாகவும் அதன் பாதிப்பின் உச்சமாகவும், குணப்படுத்தலுக்காக எடுத்துக்கொண்ட மருந்துகளும் புதினின் மூளையைப் பாதித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தப் பாதிப்புகளின் பக்கவிளைவாக புதின் தனது பார்வைத் திறனை படிப்படியாக இழந்துவருவதாகவும் மேற்கு ஊடகங்களின் புலனாய்வு கட்டுரைகள் தெரிவித்தன. அதற்கேற்ப புதினின் இயல்புக்கு மாறான உடல் சமிக்ஞைகளையும், அவற்றை மறைக்க அவர் தடுமாறுவதையும் அவை பட்டியலிட்டன.

அடுத்தபடியாக, புதின் புற்றுநோயின் முற்றிய நிலையில் அவதிப்பட்டு வருவதாகப் புலனாய்வு செய்திகள் புறப்பட்டன. மூளையில், வயிற்றில் என புற்றுநோயின் புலம் குறித்த மாறுபட்ட தகவல்கள் வெளியான நிலையில், பிரிட்டனில் அடைக்கலமாகி இருக்கும் ரஷ்யாவின் முன்னாள் உளவாளிகள் மூலம் ரத்தப் புற்று என்ற புதிய தகவல் பதிவானது. புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் புதின் மேற்கொண்ட பல்வேறு தீவிர சிகிச்சைகளின் வரிசையில், அண்மையில் அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டது குறித்து ரஷ்ய ஊடகங்களும் உறுதி செய்திருக்கின்றன. புற்றுநோய் ஊகங்களைத் தவிர்த்துவிட்டு அதிபரின் அறுவை சிகிச்சை மற்றும் ஓய்வு குறித்த தகவல்களை மட்டுமே அவை வெளியிட்டன.

தீவிர உடல்பாதிப்புகளுக்கு மத்தியில் தனது எஞ்சிய வாழ்நாளில் ஆற்றியாக வேண்டிய கடமைகள் குறித்து விசுவாசிகளுடன் புதின் விவாதித்து வந்ததாகவும், அதனடிப்படையில் உக்ரைன் மீதான போர் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதாகவும் தற்போது சொல்கிறார்கள். ஆனால் போர் தீவிரமடைந்த சூழலில் மேலும் உடல்நிலை குன்றிப்போன புதின், அண்மையில் இறந்துவிட்டதாக இப்போது பரபரக்கிறார்கள். பிரிட்டன் உளவு நிறுவனமான எம்ஐ6 அமைப்பின் உளவாளிகள் அளித்த தரவுகளின் அடிப்படையில் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் அதிபர் புதின் இறந்திருக்கலாம் என்று எம்ஐ6 தலைமையே தகவல்களைக் கசிய விட்டிருக்கிறது. அதிபர் புதின் குறித்த எதிர்மறைத் தகவல் வெளியாவது உக்ரைன் யுத்த முனையில் போரிடும் ரஷ்ய வீரர்களின் மன உறுதியைக் குலைக்கும் என்றும், நேட்டோ படைகளின் அச்சுறுத்தல் வெளிப்படையாகும் என்றும் ரஷ்யா கணித்திருப்பதால், புதின் மறைவு குறித்த தகவலைக் கூடுமானவரை ரஷ்யா மறைக்க முயல்வதாகவும் எம்ஐ6 தெரிவிக்கிறது.

உக்ரைனில் ரஷ்ய வீரர்கள்
உக்ரைனில் ரஷ்ய வீரர்கள்

தனது உடல் பாதிப்பின் போக்கைக் கணித்து, அதிபர் புதின் வகுத்தளித்த ஏற்பாடுகளின் அடிப்படையில் அவரது தீவிர விசுவாசிகள் குழு சகலத்தையும் தடங்கலின்றி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். உக்ரைனில் ரஷ்யப் படையணிகள் வெற்றிமுகமாக முன்னேறுவதிலும், சர்வதேச ஊடகங்களை ஏமாற்ற புதின் நகல்களைப் பயன்படுத்தி போலிச் செய்திகளைப் பரப்புவதிலும் புதின் விசுவாசிகள் சாதித்து வருவதாக பிரிட்டன் உளவாளிகளின் தரவுகள் தெரிவிக்கின்றன. புதின் நகல்களின் புகைப்படங்களை ஆய்வுக்குட்படுத்தியதிலும் தங்கள் கணிப்புகளுக்கு ஆதாரம் சேர்ந்திருப்பதாகவும் அவை தெரிவிக்கின்றன. இவற்றுக்கு பதிலடி தரும் ரஷ்ய ஊடகங்கள், ‘புதின் உடல்மொழி மாறியிருப்பது, அவரது முகம் சற்று உப்பலாக இருப்பது ஆகியவற்றுக்கு புதின் எடுத்துக்கொள்ளும் ஸ்டீராய்டு மருந்துகள் மற்றும் அண்மை அறுவை சிகிச்சையின் பக்கவிளைவுகளே காரணம்’ என்கிறது.

உக்ரைன் போரில் அறுதி வெற்றியை அடைவது, ரஷ்யாவுக்கு எதிரான சர்வதேச பதற்றங்கள் தணிவது உள்ளிட்டவை அரங்கேறிய பின்னரே, அதிபர் புதினின் ’அப்போதைய’ மறைவு குறித்து புதிய தகவல் வெளியாகும் என்றும் முன்னாள் ரஷ்ய உளவாளிகளின் மூலமாக எம்ஐ6 கறந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேசளவில் போர்ச் சூழல் எழும்போதெல்லாம், மரபான போர்களுக்குச் சற்றும் குறைவின்றி மனோதத்துவ போர்களும் களைகட்டும். போலித் தரவுகளை வெளியிட்டு ஊடக கணிப்புகளின் போக்கை மடைமாற்றுவது, பொதுப்புத்தியில் ஊடுருவி தங்களுக்குச் சாதகமானவற்றை விதைப்பது ஆகியவற்றை போர் வியூகங்களுக்கு இணையாக மேற்கொள்வார்கள். அந்த வகையில் ரஷ்யாவுக்கு எதிரான தகவல்களைத் திட்டமிட்டு மேற்கு நாடுகள் மற்றும் உளவு அமைப்புகள் பரப்புகின்றனவா என்ற ஐயத்துக்கும் தாராளமாய் இடமிருக்கிறது.

ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகள் இவற்றை கலையாக முன்னெடுத்திருக்கிறார்கள். ரஷ்யா, சீனா, வட கொரியா போன்ற இரும்புத்திரை நாடுகள், தாங்கள் எதிர்பார்க்கும் அடைவுகளுக்காகவும் இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவது வாடிக்கை. அனைத்து நாடுகளின் உளவு அமைப்புகளின் பாலபாடத்திலும் இவ்வாறு வதந்திகளுக்கு உயிர்கொடுக்கும் உத்திகள் அடங்கியிருக்கும்.

அதே போன்று, உடல்நிலை மிகவும் குன்றிய நிலையில் அதிபர் புதின் நடத்தும் நாடகங்களில் ஒன்றாக நகல்களின் உலாவல் நடைபெறுவதாகவும் முன்னாள் சோவியத் நாடுகளில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓரிரு வருடங்கள் மட்டுமே புதினால் உயிர்வாழ இயலும் என்று மருத்துவர்கள் உறுதி செய்ததில், முழு ஓய்வில் ஆழ்ந்திருக்கும் புதின் தனது நம்பிக்கைக்கு உரியவர்கள் வாயிலாக நாட்டு நிர்வாகம் முதல் உக்ரைன் போர் வியூகம் வரை முன்னெடுப்பதாகவும் இந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எப்படியாயினும், புதினின் உடல்நிலை மோசமடைந்திருப்பது, அவருக்கான அறுவை சிகிச்சையின் தோல்வி ஆகியவை குறித்து ரஷ்ய ஆதரவு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளையும், அவற்றின் வழியே மறைக்கப்பட்ட தகவல்களைக் கண்டடைவதிலும் கடினம் இல்லை. ஆனால் இந்தத் தகவல்களின் அடிப்படையில் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவின் அணுகுமுறையும், ரஷ்யாவுக்கு எதிரான மேற்கு வல்லரசுகளின் நடவடிக்கையிலும் ஏற்படக்கூடிய மாற்றங்களே முக்கியமானவை. அவை உக்ரைன் போரின் போக்கில் உக்கிரம் கூட்டுவது முதல் சுமுகம் எட்டுவது வரை உலகம் எதிர்பாராதவற்றைச் செய்யவும் வாய்ப்பிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in