போராட்டக் களத்தில் ஆயுதங்களுடன் புகுந்த ராணுவத்தினர்: இலங்கையில் பதற்றம்

போராட்டக் களத்தில் ஆயுதங்களுடன் புகுந்த ராணுவத்தினர்: இலங்கையில் பதற்றம்

இலங்கையில் அரசுக்கு எதிராகப் போராடிவரும் மக்கள், அரசு அதிகாரிகள், தலைவர்களின் இல்லங்களை முற்றுகையிட முயன்றிருக்கிறார்கள். தலைநகர் கொழும்புவில் நாடாளுமன்றம் அருகேயும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இதற்கிடையே, ஏப்ரல் 1-ம் தேதி நெருக்கடி நிலைப் பிரகடனத்தை அறிவித்திருந்த அதிபர் கோத்தபய ராஜபக்ச, நேற்று இரவு அதைத் திரும்பப் பெற்றார். நாடாளுமன்றத்தில் அவர் பெரும்பான்மையை இழந்தது முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. 41 எம்.பி-க்கள் பதவிவிலகிய நிலையில், ஆளும் கூட்டணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துவிட்டது. கோத்தபய பதவி விலக வேண்டும் என்று கூட்டணிக் கட்சியினரும் வலியுறுத்திவருகின்றனர்.

இந்தச் சூழலில், நாடாளுமன்றம் அருகே நேற்று மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது, ஆயுதம் தாங்கிய ராணுவத்தினர் முகமூடி அணிந்தபடி பைக்குகளில் வலம் வந்தனர். போராட்டம் நடத்திய கூட்டத்தினர் நடுவே அவர்கள் பைக்குகளை ஓட்டிச் சென்றது அங்கிருந்தவர்களைக் கலவரமடையச் செய்தது. இது தொடர்பாக சமூகவலைதளங்களில் பரபரப்பான பதிவுகள் இடப்பட்டன.

அப்போது ராணுவத்தினரைத் தடுத்து நிறுத்தி போலீஸார் விசாரித்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் எனப் பாதுகாப்புத் துறைத் தலைவர் ஷவேந்திர சில்வா கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, இலங்கை நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்துவருவதாக ஐநா மனித உரிமை கவுன்சில் தெரிவித்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in