'பூச்சிக்கொல்லி பயன்பாடு அதிகம்' - திருப்பி அனுப்பப்படும் இந்தியத் தேயிலை

tea leafs
tea leafs

இந்தியத் தேயிலையில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயனங்கள், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதால், பல நாடுகள் இந்திய தேயிலைச் சரக்குகளைத் திருப்பி அனுப்பி வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையால் ஏற்பட்ட தேயிலை வர்த்தக வெற்றிடத்தை நிரப்பும் வகையில், இந்தியத் தேயிலை வாரியம் ஏற்றுமதியை அதிகரிக்க முனைப்பு காட்டி வருகிறது. இருப்பினும் தொடர்ந்து தேயிலைச் சரக்குகள் நிராகரிக்கப்படுவதால் ஏற்றுமதியில் சரிவு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021-ல் இந்தியா 195.90 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்தது. எனவே இந்த ஆண்டு 300 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்ய தேயிலை வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

தற்போது காமன்வெல்த் ஆஃப் இன்டிபெண்டன்ட் ஸ்டேட்ஸ் (சிஐஎஸ்) நாடுகள் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இந்தியா அதிகளவில் தேயிலை ஏற்றுமதியை செய்து வருகிறது.

tea leafs
tea leafs

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய இந்தியத் தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (ஐடிஇஏ) தலைவர் அன்ஷுமான் கனோரியா, "நாட்டில் விற்கப்படும் அனைத்து தேயிலை பொருட்களும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (எஃப்எஸ்எஸ்ஏஐ) விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இப்போது பல நாடுகள் தேயிலைக்கான கடுமையான நுழைவு விதிமுறைகளைப் பின்பற்றுகின்றன. பெரும்பாலான நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத் தரநிலைகளை பின்பற்றுகின்றன, அவை எஃப்எஸ்எஸ்ஏஐ விதிகளை விட மிகவும் கடுமையானவை.

சட்டத்திற்கு இணங்குவதற்குப் பதிலாக, எஃப்எஸ்எஸ்ஏஐ விதிமுறைகளை மேலும் தாராளமயமாக்க வேண்டும் என்று பல உற்பத்தியாளர்கள் அரசை வற்புறுத்துகின்றனர். தேயிலை பானம் ஒரு ஆரோக்கிய பானமாக கருதப்படுவதால் விதிகளைத் தளர்த்துவது தவறான விளைவுகளை உருவாக்கும். எனவே உற்பத்தியாளர்கள் தற்போதுள்ள எஃப்எஸ்எஸ்ஏஐ நெறிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்" அவர் தெரிவித்தார்.

இந்தியா 2021-ல் ரூ.5,246.89 கோடி மதிப்பிலான தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in