சீனாவின் பிடியில் மாலத்தீவு... இந்திய ராணுவத்தை வெளியேற்ற துடிக்கும் புதிய அதிபர்!

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு

மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தை வெளியேற்றுவதில் அந்நாட்டு புதிய அதிபர் முகமது முய்சு மிகவும் தீவிரமாக இருக்கிறார். தேர்தல் வாக்குறுதியின் போது மாலத்தீவு மண்ணில் உள்ள வெளிநாட்டு இராணுவத்தினரை வெளியேற்றுவேன் என்றார். அதன்படியே மாலத்தீவு அதிபர் தேர்தலில் கடந்த மாதம் வெற்றி பெற்ற முய்சு, இந்தியா தனது படைகளை மாலத்தீவிலிருந்து வெளியேற்ற வேண்டுமென வற்புறுத்தி உள்ளார்.

மாலத்தீவை கடந்த 2018ம் ஆண்டு முதல் ஆண்டு வந்த இப்ராஹிம் முகமது சோலி, இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான உறவை பராமரித்து வந்தார். அதன் காரணமாகவே மாலத்தீவில் பல்வேறு வகையில் இந்தியா வளர்ச்சி பணிகளை செய்து வந்தது. சுமார் 16,000 கோடி ரூபாய் வரை மாலத்தீவிற்கு இந்தியா வழங்கி உள்ளது. இந்திய பெருங்கடலில் உள்ள முக்கியமான தீவான மாலத்தீவில் இந்தியாவின் ஆதிக்கமே இதுவரை இருந்து வந்தது.

இந்நிலையில் அண்மையில் மாலத்தீவில் தேர்தல் நடந்தது. இதில் அந்நாட்டின் தற்போதைய அதிபரான இப்ராஹிம் முகமது சோலிக்கும், எதிர்க்கட்சி வேட்பாளரான முகமது முய்சுவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முகமது முய்சு சீனாவின் ஆதரவாளர் ஆவார். இவர் தேர்தல் பிரச்சாரத்தின் போதே இந்திய ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வந்தார். இந்த முய்சு, தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டிருக்கும் யாமீனின் பினாமியாகப் பார்க்கப்படுகிறார். தேர்தல் பிரச்சாரத்தின் போது தற்போது அதிபராக உள்ள சோலியின் இந்திய நெருக்கத்தால், மாலத்தீவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பிரச்சாரம் செய்து வந்தது.

இந்த சூழலில் வெற்றி பெற்ற முய்சு நவம்பர் மாதம் அதிபராக பதவியேற்க உள்ளார். அவர் பதவியேற்கும் முன்னதாகவே மாலத்தீவில் உள்ள ஒவ்வொரு இந்திய ராணுவ வீரரும் வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரை சந்தித்து கூறினார். அதேநேரம் சீன தூதர், முய்சுவின் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்தார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் முய்சுவை வாழ்த்தினார்.

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு

மாலத்தீவு நீண்ட காலமாக இந்தியாவின் செல்வாக்கில் உள்ள நாடாக பார்க்கப்படும் நிலையில், புதிய அதிபரான முய்சு மாலத்தீவில் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு கடன்கள் மற்றும் மானியங்கள் வடிவில் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை முதலீடு செய்திருக்கும் சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். முய்சுவே, மாலத்தீவில் சீன உள்கட்டமைப்புத் திட்டங்களை பற்றி வெளிப்படையாக பாராட்டியும் உயர்வாகவும் பேசினார்.

முய்சு தலைமையிலான மாலத்தீவு அரசு சீனாவிற்கு நெருக்கமாக மாறியுள்ளது, அது இந்தியாவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. முய்சு இந்திய ராணுவ வீரர்கள் அனைவரும் மாலத்தீவை விட்டு வெளியேற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். அதேநேரம் சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தை ஆதரிக்கிறார். மேலும் சமீப ஆண்டுகளில் மாலத்தீவு இந்தியாவுடன் கையெழுத்திட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் மறுபரிசீலனை செய்ய விரும்புவதாக முய்சு கூறி வருகிறார். இது நிச்சயம் ராஜதந்திர ரீதியாக இந்தியா சீனா இடையே பதற்றங்களை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சீனா இந்தியாவை சுற்றியுள்ள அனைத்து நாடுகளுடன் நெருக்கம் காட்டி வருகிறது. அதிகமான கடன் கொடுத்து, தன் வலையில் நாடுகளை வைத்துக் கொள்ள விரும்புகிறது. மீளவே முடியாத அளவிற்கு ஒவ்வொரு நாடுகளுக்கும் கடன் கொடுக்கும் சீனா, அங்கு தனது வர்த்தகம், ராணுவம், கட்டமைப்புகளை மேம்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in