மலேசியத் தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சிங்கப்பூர்: பின்னணி என்ன?

மலேசியத் தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சிங்கப்பூர்: பின்னணி என்ன?

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிங்கப்பூர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட மலேசியத் தமிழரான நாகேந்திரன் தர்மலிங்கம் (34), இன்று அதிகாலை தூக்கிலிடப்பட்டார். 42.7 கிராம் போதைப் பொருளைக் கடத்தியதாக 2010-ல் சிங்கப்பூர் போலீஸார் அவரைக் கைதுசெய்தனர். அறிவுத்திறனில் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளியான (intellectually disabled) நாகேந்திரனை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றப் போராடிய அவரது தாய் மற்றும் சகோதரியின் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

தொடரும் மரண தண்டனை

மரண தண்டனை வழங்குவதை இன்னமும் தொடரும் நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். குறிப்பாக, போதைப்பொருள் வழக்கில் தொடர்புடையவர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்படும் அளவுக்கு அங்கு சட்டங்கள் மிகக் கடுமையானவை.

மரண தண்டனைக்கு எதிரான குரல்களும் சிங்கப்பூரில் தொடர்ந்து ஒலித்துவருகின்றன. அந்த வகையில் நாகேந்திரனின் வழக்கு உலகெங்கும் கவனம் ஈர்த்த வழக்காகும். அவரைத் தூக்கிலிடக் கூடாது என மலேசிய அரசு, ஐநா அதிகாரிகள், ஐரோப்பிய ஒன்றியம், சிவில் சமூகக் குழுக்கள் ஆகியவற்றுடன் பிரிட்டன் தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்ஸன் போன்ற பிரபலங்களும் குரல் கொடுத்தனர். கடந்த திங்கள் கிழமை ஹாங் லிம் பார்க்கில் கூடி சிலர் மரண தண்டனைக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். மனநிலை சரியில்லாத நாகேந்திரனைத் தூக்கில் போடக் கூடாது என கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது.

ஏற்கெனவே, பல முறை அவரது மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தனது மகனைத் தூக்குக் கயிற்றிலிருந்து காப்பாற்ற, இறுதிக்கட்டத்தில் அவரது தாய் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிங்கப்பூர் மேல் முறையீட்டு நீதிமன்றம், அந்த மனு எரிச்சலூட்டக்கூடியது எனக் கூறி அதைத் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சிங்கப்பூரின் சாங்கி சிறையில் இன்று அதிகாலை நாகேந்திரன் தூக்கிலிடப்பட்டார்.

நாகேந்திரனின் உடல், மலேசியாவுக்குக் கொண்டுவரப்பட்டு சொந்த ஊரான ஈப்போவில் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என அவரது சகோதரர் நவீன் குமார் தெரிவித்திருக்கிறார்.

இது தொடரும்

சிங்கப்பூரைச் சேர்ந்த அப்துல் காதர் ஓத்மன், மார்ச் 30-ல் தூக்கிலிடப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளில் முதன்முறையாகத் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இன்னும் 50-க்கும் மேற்பட்டோருக்கு சிங்கப்பூர் அரசு மரண தண்டனையை நிறைவேற்றவிருக்கிறது. அவர்களில் குறைந்தபட்சம் மூவர் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என ஐநா தெரிவித்திருக்கிறது.

மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளும் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் மரண தண்டனை விதிக்கின்றன. எனினும், போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதை ரத்து செய்வது குறித்து மலேசிய அரசு பரிசீலித்துவருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in