நஜீப் ரஸாக் குற்றவாளிதான்: ‘1எம்டிபி’ ஊழல் வழக்கில் மலேசிய உச்ச நீதிமன்றம் அதிரடி

நஜீப் ரஸாக் குற்றவாளிதான்: ‘1எம்டிபி’ ஊழல் வழக்கில் மலேசிய உச்ச நீதிமன்றம் அதிரடி

‘1எம்டிபி’ ஊழல் என்று அழைக்கப்படும் மிகப் பெரிய ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் குற்றவாளிதான் என மலேசிய உச்ச நீதிமன்றம் உறுதிசெய்திருக்கிறது. இதையடுத்து, அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 12 வருட சிறைத்தண்டனை உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

நஜீப் ரஸாக் யார்?

மலேசிய அரசியலில் செல்வாக்கு மிகுந்தவர் நஜீப் ரஸாக். இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர். மலேசியாவின் இரண்டாவது பிரதமரான அப்துல் ரஸாக் ஹுசைனின் மூத்த மகன் இவர். மலேசியாவில் 60 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ‘அம்னோ’ கட்சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகள் இவருக்குக் கிடைத்தன. பல துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். 2009 ஏப்ரல் 3-ல் பிரதமரானார்.

அது என்ன ‘1எம்டிபி’?

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்துடன் 2009-ல் தொடங்கப்பட்ட ‘1 மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாத்’ (‘1எம்டிபி’ ) எனும் அரசு நிறுவனம் தொடர்பான வழக்கு இது. அந்நிறுவனத்தின் ஆலோசனைக் குழுத் தலைவராக நஜீப்தான் இருந்தார். ஆரம்பத்திலேயே அந்நிறுவனத்தின் நம்பகத்தன்மை தொடர்பாகக் கேள்விகள் எழுந்தன. அந்த நிறுவனத்துக்கு வணிக முகவரியும், ஆடிட்டரும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம், நாடாளுமன்றத்திலேயே பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

அந்நிறுவனத்தின் 2.67 பில்லியன் மலேசிய ரிங்கிட் (இந்திய மதிப்பில் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய்) தொகையை, நஜீப் தனது வங்கிக் கணக்குக்கு மாற்றிக்கொண்டதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அதிகார முறைகேடு, நம்பிக்கை மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளும் பதிவுசெய்யப்பட்டிருந்தன. நஜீபின் மனைவி ரோஸ்மா மேன்ஸர் மீதும் நிதி மோசடி, வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டன. முறைகேடாகத் திரட்டப்பட்ட பணம், ரியல் எஸ்டேட் முதல் சொகுசுக் கப்பல்கள் வரை பல்வேறு வகைகளில் முதலீடு செய்யப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸில் சொத்துகளை வாங்கிக் குவித்தது, பிக்காசோ போன்ற புகழ்பெற்ற ஓவியர்களின் படைப்புகளை வாங்கியது, ‘வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’, ‘டாடிஸ் ஹோம்’ போன்ற ஹாலிவுட் படங்களின் தயாரிப்புக்கு நிதி வழங்கியது என பல்வேறு விதங்களில் இந்தப் பணம் முதலீடு செய்யப்பட்டது தெரியவந்திருக்கிறது. இந்த ஊழல் தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உட்பட 8 நாடுகள் விசாரணை நடத்திவந்தன. 2018 தேர்தலில் அம்னோ கூட்டணி தோல்வியடைய நஜீப் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் முக்கியப் பங்கு வகித்தன.

வழக்கை விசாரித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், 2020 ஜூலை மாதம், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக நஜீபுக்கு 12 வருட சிறைத்தண்டனை விதித்தது. இவ்வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்துவந்த மலேசிய உச்ச நீதிமன்றம், அவர் குற்றவாளிதான் என உறுதிசெய்து தீர்ப்பளித்திருக்கிறது.

மலேசிய வரலாற்றில் முன்னாள் பிரதமர் ஒருவர் சிறையில் அடைக்கப்படவிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in