பீதோவனுக்கு சமமான அரியணை இளையராஜாவுக்கு வழங்குவதே நியாயம்!

அமெரிக்க வாழ் ரஷ்ய பியானோ இசைக்கலைஞர் லிடியா கட்லவா பேட்டி
பீதோவனுக்கு சமமான அரியணை இளையராஜாவுக்கு வழங்குவதே நியாயம்!
லிடியா கட்லவா, டைம் ஸ்கொயரில் இளையராஜா புகழ்

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் புகழ்வாய்ந்த டைம் ஸ்கொயர் பகுதியில், ”இசையின் ராஜா இங்கு வீற்றிருக்கிறார்” என்ற வாசகத்துடன் இசைஞானி இளையராஜாவின் பிரம்மாண்டமான ஒளிப்படம் நேற்று திரையிடப்பட்டது. இந்த காட்சி, உலகெங்கிலும் வாழும் இசைஞானி ரசிகர்களின் சமூக ஊடகங்களின் முகப்புப் பக்கமாக இன்று மாறியிருக்கிறது.

இசையில் தேச எல்லைகளை மட்டுமல்ல, பேதங்களையும் கடந்தவர் இசைஞானி இளையராஜா. கர்நாடக இசை ஞானத்துக்கு நிகரான மேதைமை மேற்கத்திய இசையிலும் அடைந்தவர் என்பதால், அவரது இசையில் எல்லைகள் கடந்து பலவித பாணிகள் இழையோடுவதை அவதானிக்க முடியும். இருந்தபோதும், அவரது இசைக் கோவைகளின் அடிநாதத்தில் தமிழ் இசை வீற்றிருப்பதாகவே தமிழர்கள் பெருமை கொள்கிறோம். ராஜா சொல்வதுபோல, அவர் இசையை ரசிக்க நாம் ஏற்கெனவே டியூன் செய்யப்பட்டுவிட்டதாகவே உணர்ந்து லயித்துக் கரைந்து போகிறோம். ராஜா இசை கேட்டு நமக்கெழும் மனவெழுச்சி, வெறெந்த மண்ணைச் சேர்ந்தவருக்கும் ஏற்பட வாய்ப்பில்லை என்றுகூட கர்வம் தலைக்கேறுகிறது.

மேஸ்ட்ரோ அன்புகூர்ந்து காப்புரிமை வழங்கினால், செவ்வியல் பியானோ பாடத்திட்டத்தின் முக்கியப் பகுதியாக அவரது இசை இடம்பெற நான் வலியுறுத்துவேன். என்னுடைய வாழ்நாள் இலக்காகக்கூட அதையே இப்போது வரித்துக்கொள்கிறேன்.

அதுவே மேற்கத்திய செவ்வியல் பியானோ இசைக் கலைஞர் லிடியா கட்லவாவின்யூடியூப் சேனலை (Lidia Kotlova Piano Studio) பின்தொடர்பவர்களுக்குப் புரியும், ராஜாவின் இசை ராஜாங்கம் எதுவரை என்று. ’இளைய நிலா பொழிகிறதே’, ‘பூவே செம்பூவே’, ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடல்களாகட்டும், ‘ஹவ் டு நேம் இட்’, ‘திருவாசகம்’ ஆல்பங்களாகட்டும் இசைஞானியின் மேதைமையைச் சிலாகித்து, ரசித்து, சிலிர்த்து லிடியா விளக்கும் விதம் தனித்துவமானது. ரசிக மனநிலையில் இருந்து மட்டும் பேசாமல், இசைக்கலைஞராக வரிக்கு வரி ராஜாவின் இசையை பியானோவில் இசைத்துக்காட்டி லிடியா எடுத்துரைக்கும்விதம் அலாதியானது. சொல்லப்போனால் திரைப்பட இசையமைப்பாளராக இருந்துகொண்டே, சுயாதீன இசைக் கலைஞராக ராஜா மிளிர்வதை லிடியாவின் உரைகளைக் கேட்கும்போது புரிந்துகொள்ள முடியும்.

இந்நிலையில் அமெரிக்காவில் வசித்துவரும் பியானோ இசைக்கலைஞர் லிடியா கட்லவாவை தொடர்புகொண்டு உரையாடியதிலிருந்து...

லிடியா கட்லவா
லிடியா கட்லவா
Q

இருவேறு கண்டங்களில் வசித்து வரும் நம்மை ராஜாவின் இசை ஒரு புள்ளியில் சந்திக்க வைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது அன்புக்குரிய லிடியா! உங்களுடைய பூர்விகத்தைப் பற்றியும் இசைத் துறையை நீங்கள் தேர்வு செய்தது குறித்தும் சொல்லுங்களேன்...

A

ரஷ்யாவில் உள்ள உரல்ஸ் மலை நகரைச் சேர்ந்தவள் நான். அப்பா அணு ஆராய்ச்சி பொறியாளர், அம்மா தொடக்கப்பள்ளி ஆசிரியை. பாரம்பரிய கலை வடிவங்களை போற்றும் நாடு ரஷ்யா என்பதால், என்னுடைய இசை ஆர்வத்தைப் பார்த்து செவ்வியல் பியானோ இசை கற்க அம்மாவும் அப்பாவும் உற்சாகப்படுத்தினார்கள். மாஸ்கோவில் இளநிலை இசை பட்டமும், வாஷிங்டன் பல்கலையில் பியானோ வாசித்தலில் முதுநிலை பட்டமும் பெற்றேன்.

ரஷ்யா, அமெரிக்கா, இந்தியாவில் பல இசைக் கச்சேரிகளை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறேன். வாஷிங்டன் பல்கலை ஆர்கெஸ்ட்ராவுடனும் சியாட்டில் சிம்ஃபனியில் இசை மேதைகள் லட்விக் மர்லாட், டேவிட் ரஹ்பி ஆகியோருடனும் பணிபுரிந்திருக்கிறேன். அண்மையில் நடைபெற்ற, ’வர்ள்ட் வைட் இண்டியன் ஐடல்’ என்ற இந்திய இசை திறமைகளைக் கண்டறியும் நிகழ்ச்சியில் பிரபல இந்தி திரையிசைப் பாடகர் பத்மஸ்ரீ கைலாஷ் கர்ருடன் இணைந்து வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தேன். தற்போது அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பே நகர் பகுதியில் வசித்துவருகிறேன்.

Q

மேற்கத்திய இசை பயின்ற உங்களுக்கு இசைஞானி இளையராஜாவின் இசை அறிமுகமானது எப்போது?

A

மாஸ்கோவில் உள்ள இந்திய நிறுவனம் ஒன்றில் கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள்வரை பணிபுரிந்தேன். அதன் நிறுவனர் சென்னைக்காரர் என்பதால், அலுவலகத்தில் மேஸ்ட்ரோ இளையராஜா சார் அவர்களின் பல பாடல்கள் ஒலிக்கச் செய்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் புதிய ஆல்பத்துடன் அலுவலகத்துக்கு வருவார். ஒருகட்டத்தில் நானும் ‘ரிபீட் மோடில்’ அந்த இசையை கேட்க ஆரம்பித்துவிட்டேன். அப்படியே தீவிரமாக அதை ஆய்வுக்கு உட்படுத்தலானேன்.

Q

உங்களுடைய காணொலிகளில், இசைஞானி இளையராஜாவின் இசையைக் கேட்கும்போது கூர்ந்து கவனிக்க வேண்டும். போகிற போக்கில் கேட்கக்கூடாது என்கிறீர்கள். எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?

A

இசைக்கருவிகள் எழுப்பும் நாதத்துக்குப் பாடல்வரிகள் இல்லாததால், அவற்றை நாம் அவ்வளவாக சிலாகிப்பதில்லை. ஏதோ ஒரு வேலை செய்தபடி பின்னணியில் இசை ஒலிக்கவிட்டுக் கொண்டிருப்பதை பலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், மேஸ்ட்ரோ இளையராஜா சாரினுடைய இசைக்கருவிகள் உண்டுபண்ணும் நாதம் ஆன்மாவை உய்விக்க வல்லது. மிகவும் உயர்தரமானது. அதில் பிரயோகிக்கப்படுபவை கவனமாகத் தேர்வு செய்யப்பட்டு முடிவெடுக்கப்பட்ட இசை அம்சங்கள். ஆகவே, கவனக்குறைவாக மேஸ்ட்ரோ இளையராஜா சாரினுடைய இசை கேட்பது அராஜகம் என்றே நான் கருதுகிறேன்.

Q

’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலை பியானோவில் அணு அணுவாக இசைத்து விளக்கம் அளிக்கும் காணொலியில், நீங்கள் ஓரிடத்தில் உடைந்து அழுதுவிட்டீர்கள். உணர்வெழுச்சி உண்டானதாகவும் சொல்லியிருந்தீர்கள். எங்கள் மண்ணின் இசையை ஒலிக்கச் செய்வதினால்தான், ராஜாவின் இசை கேட்டு நெகிழ்ந்துபோகிறோம் என்று எங்களுக்குள் சொல்லிக் கொள்வதுண்டு. ஆனால், உங்களையும் அவரது இசை கண்கள் பனிக்கச் செய்தது வியக்க வைக்கிறது...

A

எனக்குத் தென்னிந்திய இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மான், கோவிந்த் வசந்தா, அனிருத் ரவிச்சந்தர் உள்ளிட்ட பலரைப் பிடிக்கும். ஆனால், மேஸ்ட்ரோ இளையராஜா சாரின் இசை நேரடியாக என்னுடைய ஆன்மாவை வருடுவதாகவே உணர்கிறேன். நான் செவ்வியல் பியானோ இசைக்கலைஞர் என்பதாலும் அவரது இசையிலிருந்து பலவற்றை கற்றுக்கொள்கிறேன்.

ஒரு மெலடியின் ஒவ்வொரு அசைவிலும் அவர் இசை நுணுக்கங்களை எப்படி சங்கமிக்கச் செய்கிறார் என்பதை வியந்து தரிசிக்கிறேன். ஆரட்டோரியோவாக (Oratorio) இருந்தாலும் சரி, கிராமிய இசையாக இருந்தாலும் சரி அத்தகைய மாயாஜாலத்தை அவர் நிகழ்த்தியபடியே இருக்கிறார். சிலநேரம் அவரது இசை என்னை சிந்தித்து அலசி ஆராயத் தூண்டுகிறது. சிலநேரம் ஆசுவாசம் கொள்ளச் செய்கிறது. சிலநேரம் தியானத்தில் ஆழந்துவிடச் செய்கிறது. சிலநேரம் அழவைக்கவும் செய்கிறது. உண்மையாதெனில், அவரது இசையின் அழகை ஆராதிக்க உங்களுக்கு முனைவர் பட்டமெல்லாம் தேவையில்லை. அவரது இசை ஆன்மாவை நேரடியாகத் தொட்டுவிடுகிறது.

Q

அற்புதமாகச் சொன்னீர்கள்...அதேபோல ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு’ போன்ற பாடல்கள் அசல் தமிழ் கிராமிய இசையாக ஒலிக்கக்கூடியவை. நீங்கள் அதையும் பியானோவில் லயித்து இசைத்தீர்களே... ராஜாவின் இசை அந்த அளவுக்கு உலகளாவியதா?

A

நான் ’ராயல் கன்சர்வேட்டரி ஆஃப் மியூசிக் அசோசியேஷன்’ (Royal Conservatory of Music association) உடன் இணைந்து செயலாற்றி வருகிறேன். மேஸ்ட்ரோ அன்புகூர்ந்து காப்புரிமை வழங்கினால், செவ்வியல் பியானோ பாடத்திட்டத்தின் முக்கியப் பகுதியாக அவரது இசை இடம்பெற நான் வலியுறுத்துவேன். என்னுடைய வாழ்நாள் இலக்காகக்கூட அதையே இப்போது வரித்துக்கொள்கிறேன். இங்குள்ள பாடத்திட்டத்தில் ஏற்கெனவே சீன, ஆப்பிரிக்க, மெக்சிக்கன் இசைக் கோவைகள் இடம்பிடித்துள்ளன. இந்திய இசையும் ஏன் இடம்பெறக்கூடாது? அதிலும் பீதோவன், மோசார்ட்டுக்கு இணையான இடத்தை மேஸ்ட்ரோ இளையராஜா சாருக்கு வழங்குவதே நியாயம்!

Q

‘நின்னுக்கோரி வரணம்’, ‘வாவா அன்பே அன்பே’ பாடல்களை இசைக்கும்போது நீங்கள் சேலை அணிந்து, தமிழ் பெண் போல கொண்டையில் பூ சூடி இருந்தீர்களே! இத்தகைய ஆடை, அலங்காரம் செய்துகொள்ள உங்களுக்கு உதவுவது யார்?

A

சென்னைக்காரரைத்தான் நான் மணந்திருக்கிறேன். ரோஷனும் நானும் மணமுடித்து 11 ஆண்டுகள் ஆகின்றன. அவர், கூகுள் நிறுவனத்தில் முதுநிலை மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். எங்களுக்கு 2 குழந்தைகள். அந்த வீடியோவில் இன்னொன்றைக் கவனித்தீர்களா... நான் தாலி அணிந்திருந்தேன். அதுவும் நின்னுக்கோரி பாடலை வாசிக்கும்போது வேறெந்த மாதிரியான ஆடையும் அணியக்கூடாது என்றே சொல்வேன். அப்புறம் எனக்கு மிகவும் பிடித்தமான ஆடை சேலை என்பதால், நானே அடிக்கடி உடுத்துவேன்.

Q

’தமிழ் கணவர், ’நின்னுக்கோரி’ மிகவும் பிடிக்குமென்றால் கர்நாடக இசையும் தமிழ் மொழியும் அறிவீர்களா?

A

எனக்கு தமிழ் புரியும். ஆனால், கோர்வையாக பேசத்தான் இன்னும் வரவில்லை. இதுதவிர, அமெரிக்காவில் வசிப்பதால் அவ்வளவாகத் தமிழ் பேசிப் பழகும் சூழலும் இல்லை. அதேநேரம் கர்நாடக இசையை முறையாகப் பயின்றுவருகிறேன். தற்சமயம் என்னால் 72 மேளகர்த்தா ராகங்களையும் 99 சதவீதம் துல்லியமாகக் கண்டுபிடித்திட முடியும்.

Q

பிரமாதம்... உங்களுடைய இசைக் காணொலிகளுக்கு குறிப்பாக இசைஞானி குறித்தவற்றுக்கு எத்தகைய வரவேற்பு கிடைத்து வருகிறது?

A

நான் திடீரென்று இசை ஆய்வில் இறங்கிவிடவில்லை. பல ஆண்டுகளாக அமெரிக்கா, இந்தியாவைச் சேர்ந்த பல அமைப்புகளுக்காக இசைத்து வந்திருக்கிறேன். இந்தியாவில் கரோனா தாக்கம் மிக தீவிரமடைந்தபோது, நிதி திரட்டி மக்களுக்கு உதவவும் பல இசைக் கச்சேரிகள் நடத்தினேன். இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு இசை நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தினேன். மேலும், பல இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். என்னுடைய இசைப் பதிவுகளை பின்தொடர்பவர்களில் சில முக்கிய இசையமைப்பாளர்களும் பாடகர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு மிகுந்த ஊக்கமும் உற்சாகமும் அளித்துவருகிறார்கள். இத்தனையும் கொடுத்த தன்னம்பிக்கையில்தான், மேஸ்ட்ரோ இளையராஜா சாரினுடைய இசை குறித்துப் பேசத் துணிந்தேன். என்னுடைய வாசிப்புக்கும் பேச்சுக்கும் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in