உக்ரைனுக்கு ரயிலில் சென்ற இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் தலைவர்கள்: கவனம் பெறும் முக்கியச் சந்திப்பு

உக்ரைனுக்கு ரயிலில் சென்ற இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் தலைவர்கள்: கவனம் பெறும் முக்கியச் சந்திப்பு

போர்ச் சூழலுக்கு நடுவே பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், இத்தாலி பிரதமர் மரியோ திராகி, ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகிய மூவரும் உக்ரைன் தலைநகர் கீவுக்கு ரயில் மூலம் சென்றடைந்திருக்கிறார்கள். ஐரோப்பாவின் மிக முக்கிய நாடுகளான இவை, ரஷ்யாவை எதிர்த்துப் போரிட தங்களுக்குப் போதிய ஆயுதங்கள் வழங்க முன்வரவில்லை என்று உக்ரைன் விமர்சித்துவந்த நிலையில், இம்மூன்று நாடுகளின் தலைவர்களும் கீவ் சென்றிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

உக்ரைனுக்கு ஐரோப்பிய ஆதரவு இருப்பதை வெளிக்காட்டும் வகையில் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருப்பதாக பிரான்ஸ் அதிபர் மெக்ரான் கூறியிருக்கிறார். இந்தப் பயணம் ஒரு முக்கியத் தருணம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அல்பேனியா, வடக்கு மாசிடோனியா, செர்பியா, துருக்கி, மான்டெனெக்ரோ ஆகிய நாடுகள் ஏற்கெனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்காக விண்ணப்பித்திருக்குக்கின்றன. கொசோவோ, போஸ்ஸ்னியா, ஹெர்ஸேகோவினா ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளாகச் சேர விண்ணப்பிப்பது குறித்து ஆலோசனை நடத்திவருகின்றன.

இந்நிலையில், இந்த வருகையின்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனைச் சேர்ப்பது குறித்து அந்நாட்டின் அதிபர் ஸெலன்ஸ்கியுடன் அவர்கள் ஆலோசனை நடத்தவிருக்கின்றனர். ஜூன் 23 மற்றும் 24-ல் ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சி மாநாடு நடக்கவிருக்கும் நிலையில், உக்ரைன் தனது வலிமையை வெளிக்காட்டிக்கொள்ள விரும்புகிறது. மறுபுறம், உக்ரைன் இணைவதால் ஐரோப்பிய ஒன்றியத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுவிடக் கூடாது எனும் எச்சரிக்கை உணர்வும் அதன் உறுப்பு நாடுகளிடம் இருக்கிறது. காரணம், துருக்கி, வடக்கு மாசிடோனியா போன்ற நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர விண்ணப்பித்து நீண்ட காலமாகக் காத்திருக்கின்றன. இவ்விஷயத்தில் நிலவும் சிக்கல்களைச் சமாளிப்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான நாடுகளுக்குச் சவாலாக மாறியிருக்கிறது.

இதற்கிடையே, ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் உக்ரைன், கூடுதலாக ஆயுதங்களை வழங்க வேண்டும் என்று மேற்கத்திய நாடுகளிடம் வலியுறுத்திவருகிறது.

குறிப்பாக, இந்நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் அனுப்புவதில் தாமதம் செய்தாகவும், உக்ரைனின் சுதந்திரம், பாதுகாப்பு ஆகியவற்றைவிடவும் தங்கள் நலனில் மட்டுமே அக்கறை செலுத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. உக்ரைனுக்குச் சென்றிருக்கும் மூன்று தலைவர்களிடமும் இதுகுறித்து ஸெலன்ஸ்கி வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடவே, ரஷ்யாவுக்குச் சாதகமளிக்கும் வகையிலான அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த இம்மூன்று நாடுகளும் முயற்சி செய்வதாக உக்ரைன் அதிபரின் ஆலோசகரான ஒலெக்ஸீ அரெஸ்டோவிச் சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார். இதுபோன்ற விமர்சனங்களை மூன்று நாடுகளும் மிக கவனமாக மறுத்துவருகின்றன.

இந்தச் சூழலில் உக்ரைனுக்கு மூன்று நாடுகளின் தலைவர்களும் சென்றிருப்பதால், அடுத்து என்ன நடக்கும் எனும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in