வறுமையால் வாடும் லெபனான்

திக்கற்ற திசையில் அல்லாடும் தேசம்
வறுமையால் வாடும் லெபனான்

மேற்கு ஆசிய நாடான லெபனானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. மக்களில் பெரும்பாலானவர்கள் வறுமையில் சிக்கி உழல்கின்றனர். வேலை கிடைக்காமல், உண்பதற்கு உணவுப் பண்டங்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர்.வாழ்வதற்கே அஞ்சும் நரகமாகிவிட்டது பெரும்பாலான மக்களுக்கு, பலர் சொல்லவே முடியாத நோய்த் தொல்லைகளுக்கும் பட்டினிக்கும் ஆளாகியுள்ளனர். நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிவரும் நிலையில், பொருளாதாரச் சீர்திருத்தங்களை உடனடியாக அமல்படுத்த ஒப்புக்கொண்டு, உலக வங்கியிடம் கடன் பெற்று மக்களைக் காப்பாற்றப் பாருங்கள் என்று லெபனான் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது ஐநா.

கடந்த ஓராண்டாகவே நாட்டு மக்களில் 25 சதவீதம் பேருக்கு ஒரு வேளை உணவுகூட கனவாகிவிட்டது. பசியும் பட்டினியும் ஆயிரக்கணக்கான மக்களுடைய அன்றாடப் பயிற்சியாகிவிட்டது.

லெபனானின் மொத்த மக்கள்தொகையில் 78 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கும் கீழே தள்ளப்பட்டுவிட்டனர். அவர்களில் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றனர். கடந்த ஓராண்டாகவே நாட்டு மக்களில் 25 சதவீதம் பேருக்கு ஒரு வேளை உணவுகூட கனவாகிவிட்டது. பசியும் பட்டினியும் ஆயிரக்கணக்கான மக்களுடைய அன்றாடப் பயிற்சியாகிவிட்டது. இன்றைய தேதியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு, உடைகள், இருப்பிடம், குடிநீர், மருத்துவ வசதி ஆகியவை அவசரமாகத் தேவைப்படுகின்றன.

இதற்கும் முன்னால் லெபனானிய மக்கள் இப்படி உணவு, குடிநீர், மருந்துக்காகப் பிறர் கையை எதிர்பார்த்திருந்ததே இல்லை என்கிறார் உலக உணவுதிட்ட அதிகாரி ராஷா அபௌ தர்காம். நாட்டின் 25 சதவீதம் பேருக்கு இந்த அமைப்புதான் இப்போது உணவு வழங்குகிறது. இந்த உதவிக்கு நாளுக்கு நாள் தேவை அதிகமாகிக்கொண்டே வருகிறது.

பொருளாதாரச் சீர்குலைவு

கடந்த இரண்டு ஆண்டுகளாக லெபனானின் பொருளாதாரச் சீர்குலைவால் டாலருக்கு நிகரான அந்நாட்டு நாணய மதிப்பு 90 சதவீதம் அளவுக்கு சரிந்துவிட்டது. முடங்கிப் போன வங்கிகளால் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வங்கியிலிருந்து பணம் எடுக்க முடியாமல் செயலற்றுத் தவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. எனவே நாளின் பல மணி நேரங்களுக்கு மின்தடையை மக்கள் சந்தித்துவருகின்றனர். இதனால் மருத்துவமனைகள் பெரிதும் முடங்கிவிட்டன.

உயிர் காக்கும் மருந்துகளின் கையிருப்பு மருந்துக் கடைகளில் குறைந்துகொண்டே வருகிறது. புற்றுநோயாளிகளுக்குக்கூட மருந்துகள் கிடைப்பதில்லை. கறுப்புச் சந்தையில் பல மடங்கு பணம் கொடுத்தால்தான் மருந்துகளை வாங்க முடியும் எனும் நிலை. இது நெருக்கடி அல்ல – மரண தண்டனை என்கிறார் ரோச்சிடி. லெபனான் நாட்டிலேயே மிகப் பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான நஜீப் அஸ்மி மிகாடி (65) மூன்றாவது முறையாக பிரதமராகியிருக்கிறார். உலக வங்கி, பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) கூறும் சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதாக உறுதி கூறியிருக்கிறார். அத்துடன் அரபு நாடுகளிடம் உதவி கேட்டு லெபனானின் பொருளாதாரத்துக்குப் புத்துயிர் ஊட்டப் போவதாகக் கூறுகிறார். பொருளாதாரச் சீர்திருத்தம் என்றால் அரசு நிறுவனங்களில் ஆள் குறைப்பு, அரசுத் துறைகளிலிருந்து முதலீடுகளை விலக்குவது, மக்களுக்கு அளிக்கும் சொற்பமான மானியங்களையும் வெட்டுவது, நாட்டின் பொருளாதார வளங்களைக் குறைந்த விலைக்கு பெருந்தொழிலதிபர்களுக்குக் கொடுப்பது என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளனர். எனவே சீர்திருத்தம் என்றாலே சீறிவிழுகின்றனர்.

மக்களை வரிசையில் நிற்க வைத்து வேளா வேளைக்கு சாப்பாடு கொடுப்பது தாற்காலிகமான மனிதாபிமான நடவடிக்கையாக இருக்கலாமே தவிர காலம் முழுக்கத் தொடர முடியாது, லெபனான் அரசுதான் வழிகாண வேண்டும் என்கிறார் லெபனானுக்கான மனிதாபிமான உதவி ஒருங்கிணைப்பாளர் நஜத் ரோச்சிடி.

லெபனானுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் அவசர கால உதவிப்பிரிவு வகுத்துள்ள திட்டப்படி அடுத்த ஆண்டு 11 லட்சம் பேருக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தர 3,830 லட்சம் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும்.

லெபனான் ஒரு பார்வை

மத்திய தரைக்கடலின் தென்கரையில் அமைந்திருக்கிறது லெபனான். தலைநகரம் பெய்ரூட். இந்நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் சிரியாவும், தெற்கில் இஸ்ரேலும், மேற்கில் மத்திய தரைக்கடலும் இருக்கின்றன. செலாவணிக்கு, லெபனான் பவுண்ட் என்று பெயர். பிரதமராக நஜீப் மிகாடி, அதிபராக மைக்கேல் ஆன் உள்ளனர். மக்கள் தொகை 76 லட்சம். பரப்பளவு 10,452 சதுர கிலோ மீட்டர். லெபனான் என்றால் வெண் மலை என்று பொருள். இந்த நாட்டின் மலை வெண்மையான பனிப்படலத்தால் போர்த்தப்பட்டிருக்கிறது.

நீண்ட காலம் பிரான்ஸ் நாட்டின் நிர்வாகத்தில் இருந்தது. 1926-ல் குடியரசாக அறிவிக்கப்பட்டது, 1943-ல் சுதந்திரம் பெற்றது. அரபு நாடுகளின் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறது. எனினும், பிற அரபு நாடுகளிலிருந்து வித்தியாசமானது. மலைப்பாங்கான இந்தப் பகுதி பல்வேறு மத, இனக் குழுக்களுக்கு நீண்ட காலம் புகலிடமாகப் பயன்பட்டது. மக்கள் அடர்த்தி மிகுந்த இந்த நாட்டில் கல்வியறிவு பெற்றவர்கள் எண்ணிக்கையும் அதிகம். இயற்கை வளங்கள் குறைவு என்றாலும் மத்திய கிழக்கில் முக்கியமான வணிக மையமாகவும், கலாச்சார மையமாகவும் திகழ்ந்து வருகிறது.

லெபனானில் பல்வேறு இன, மத, சமூகக் குழுக்கள் இணைந்து வாழ்கின்றன. போனீஷியர்கள், கிரேக்கர்கள், ஆர்மீனியர்கள், அரபுகள், குர்துகள் இவர்களில் முக்கியமானவர்கள். அரபுதான் அரசு மொழி. பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன. முஸ்லிம், கிறிஸ்தவ மதங்கள் பின்பற்றப்படுகின்றன. முஸ்லிம்களில் சன்னி, ஷியா இருவரும் மக்கள் தொகையில் தலா கால் பங்கு இருக்கின்றனர். ரோமன் கத்தோலிக்கர்களில் மரோனைட் பிரிவைச் சேர்ந்தவர்கள் லெபனானில் அதிகம். இவர்கள் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கு. கிரேக்க கத்தோலிக்கர்களும் கிரேக்க ஆர்தடாக்ஸ் பிரிவினரும் கணிசமான எண்ணிக்கையில் வாழ்கின்றனர். இவர்களில் ட்ரூஸ் என்ற பிரிவினர் எண்ணிக்கையில் குறைவு; ஆனால் அரசியல், பொருளாதார செல்வாக்கு மிக்கவர்கள். யூதர்களும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.

மக்களில் பெரும்பாலானவர்கள் கடலோரத்திலும், மிகச் சிலர் உள்நாட்டிலும் வாழ்கின்றனர். தண்ணீரும் நிலமும் கிடைத்த இடங்களில் கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வடக்கில் உள்ள கிராமவாசிகள் பணக்காரர்கள், தெற்கில் வசிப்பவர்கள் ஏழைகள். நிலம் வளம் குறைவானது. நீண்ட காலத்துக்கு (1975-1990) நடந்த உள்நாட்டுச் சண்டையாலும் இஸ்ரேலின் தாக்குதலாலும் நாட்டின் பொருளாதாரம் வெகுவாகச் சீர்குலைந்தது. அதுதான் இப்போது விஸ்வரூபமெடுத்திருக்கிறது.

Related Stories

No stories found.