ரஷ்யாவின் அச்சுறுத்தல்... ராணுவ சேவையை மீண்டும் கட்டாயமாக்கும் லாட்வியா!

மாதிரிப் படம்
மாதிரிப் படம்

ரஷ்யாவின் அண்டை நாடான லாட்வியாவில் வசிக்கும் ஆண்கள் இனி கட்டாய ராணுவ சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கிறார்கள். ரஷ்யாவின் அச்சுறுத்தல் காரணமாக இந்நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது லாட்விய அரசு. கட்டாய ராணுவ சேவைக்கு ஆள் எடுக்கும் பணி அடுத்த ஆண்டு தொடங்கும் என்று கூறியிருக்கும் லாட்வியா பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆர்ட்டிஸ் பாப்ரிக்ஸ், இதில் ஆண்கள் மட்டும்தான் தேர்வுசெய்யப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

“தற்போது லாட்விய ராணுவத்தில் அனைத்துப் பணிகளும் நிரப்பப்பட்டிருக்கின்றன. அதேசமயம், ரஷ்யா தனது போக்கை மாற்றிக்கொள்ளும் எனக் கருத முடியாது என்பதால் இந்த நடவடிக்கை அவசியமாகிறது” என்றும் பாப்ரிக்ஸ் கூறியிருக்கிறார். 2007 வரை லாட்வியாவில் 18 வயது பூர்த்தியானவர்களுக்கு ராணுவ சேவை கட்டாயமாக்கப்பட்டிருந்தது. நேட்டோவில் சேர்ந்த பின்னர் அந்த முறை நீக்கப்பட்டது. தற்போது ரஷ்யா மீதான அச்சத்தின் காரணமாக மீண்டும் ராணுவ சேவையைக் கட்டாயமாக்குகிறது லாட்விய அரசு.

நேட்டோ உறுப்பினரான லாட்வியா அண்டை நாடான ரஷ்யாவுடன் நில எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது. அந்தப் பிராந்தியத்தில் அதிகமான நேட்டோ படையினரைக் கொண்ட நாடும் அதுதான். வரலாற்று ரீதியாக ரஷ்யாவுடன் உறவும் பகையும் லாட்வியாவுக்கு உண்டு. ரஷ்யப் பேரரசில் அங்கம் வகித்த லாட்வியா உள்ளிட்ட பல நாடுகள் 1917-ல் நடந்த ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் தனிநாடுகளாகின. 1918-ல் சோவியத் ஒன்றியப் படைகள் லாட்வியாவுக்குள் ஊடுருவின. அப்போது இரு நாடுகளுக்கும் இடையில் தொடங்கிய போர் 1920 வரை நீடித்தது. சோவியத் ஒன்றியத்திடமிருந்து விடுதலை பெற்றுவிட்டாலும் 1940-ல் மீண்டும் அதன் ஓர் அங்கமாக மாற்றப்பட்டது லாட்வியா. 1991-ல் சோவியத் ஒன்றியம் சிதறுண்டபோது தனி நாடாகிய பிரதேசங்களில் லாட்வியாவும் ஒன்று. லாட்வியா மட்டுமல்லாமல் ஒரு காலத்தில் சோவியத் ஒன்றியத்தில் அங்கம் வகித்த எஸ்தோனியா, லித்துவேனியா ஆகிய பால்டிக் நாடுகள் தற்போது ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவை.

உக்ரைன் போரிலும் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் லாட்வியா, ரஷ்யாவின் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கிறது. இந்தப் போருக்குப் பின்னர் ரஷ்யாவின் அடுத்த குறியாக லாட்வியா, எஸ்தோனியா, லித்துவேனியா ஆகிய நாடுகள் இருக்கலாம் என்று ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் வால்டிக் டோம்ப்ராவ்ஸ்கிஸ் சமீபத்தில் எச்சரித்திருந்தார்.

மாதிரிப் படம்
மாதிரிப் படம்

20 லட்சத்துக்குச் சற்று அதிகமான மக்கள்தொகை கொண்ட சிறிய நாடான லாட்வியா, படைபலத்திலும் மிகச் சிறியதுதான். மொத்தமே 7,500 பேர்தான் ராணுவத்திலும், தேசியப் பாதுகாப்புப் படையிலும் இருக்கிறார்கள். இவர்களுடன் நேட்டோ அமைப்பைச் சேர்ந்த 1,500 படையினர் இருக்கிறார்கள். ஆனால். பெரும் படைபலம் கொண்ட ரஷ்யா முன்னர் இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

தேசியப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த காட்டிஸ் பிரைடி இந்த நடவடிக்கையை வரவேற்றிருக்கிறார். 2014-ல் உக்ரைனிலிருந்து கிரைமியாவை ரஷ்யா கைப்பற்றியபோதே இந்நடவடிக்கையில் லாட்விய அரசு இறங்கியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். “ரிசர்விஸ்ட் வீரர்களுக்குப் பயிற்சியளிப்பது நமது ராணுவத்துக்கும், ஒட்டுமொத்த நேட்டோவின் வலிமைக்கும் நல்லது. வடக்கு ஐரோப்பா மற்றும் பால்டிக் பகுதிகளில் இந்த முறை இல்லாததுதான் பிரச்சினை” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ரிசர்விஸ்ட் வீரர்கள் என்பவர்கள் ராணுவப் பயிற்சி பெற்ற சாமானியர்கள். அவர்கள் ராணுவத்தில் சேவையாற்றிவிட்டு பின்னர் சாமானிய வாழ்க்கைக்குத் திரும்பி வேறு வேலைகளில் ஈடுபடுவார்கள். ராணுவத்துக்கு ஆட்கள் தேவைப்படும் தருணங்களில் - குறிப்பாக, போர்க் காலங்களில் அவர்கள் மீண்டும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவார்கள். இஸ்ரேல், நார்வே, பின்லாந்து, சிங்கப்பூர், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது.

தற்போது அடாஸி பகுதியில் லாட்வியாவின் ராணுவத் தளம் இயங்கிவருகிறது. இந்தச் சூழலில் ரஷ்ய எல்லை அருகே உள்ள தென் கிழக்கு நகரமான ஜேகாப்பில்ஸ் நகரில் இன்னொரு ராணுவத் தளத்தை உருவாக்கும் திட்டம் இருப்பதாகவும் பாப்ரிக்ஸ் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in