‘இது அதிகாரிகளின் தவறு... இனி ராணுவம் பார்த்துக்கொள்ளும்’ - கரோனாவுக்கு எதிராகக் களமிறங்கிய வட கொரிய அதிபர்

‘இது அதிகாரிகளின் தவறு... இனி ராணுவம் பார்த்துக்கொள்ளும்’ - கரோனாவுக்கு எதிராகக் களமிறங்கிய வட கொரிய அதிபர்

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏறத்தாழ உலகின் எல்லா பகுதிகளும் கரோனா தொற்றால் பாதிப்புகளைச் சந்தித்துவந்த நிலையில், வட கொரியாவில் பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து வெளியுலகத்துக்கு எதுவும் தெரியப்படுத்தப்பட்டதில்லை. இந்நிலையில், கரோனா தொற்றுப் பரவல் உறுதிசெய்யப்பட்டதாகக் கடந்த வாரம் வட கொரிய அதிகாரிகள் அறிவித்தனர். இதையடுத்து பொதுமுடக்க அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. ஆனாலும், நிலைமை கைமீறிச் சென்றிருப்பதால் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேரடியாகக் களமிறங்கியிருக்கிறார்.

வட கொரியாவில் இதுவரை 50 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்ததாகத் தகவல் வெளியான நிலையிலும், அங்கு பெருந்தொற்று நிலவரம் என்ன எனும் தகவல்கள் முழுமையாக வெளியாகவில்லை. 10 லட்சத்துக்கும் அதிகமானோருக்குக் ‘காய்ச்சல்’ பாதிப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் எத்தனை பேருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது எனும் தகவல் வெளியாகவில்லை. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் மூலம் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் பொதுமுடக்கத்தை அமல்படுத்தியிருப்பதாக வட கொரிய அரசு தெரிவித்திருக்கிறது. முன்னதாக, கரோனா தடுப்பூசிகளை வழங்க சீனாவும், உலக சுகாதார நிறுவனமும் முன்வந்த நிலையில் அதை ஏற்க வட கொரியா மறுத்துவிட்டது.

சுகாதார விஷயத்தில் மிக மோசமான நிலையில் இருக்கும் நாடு வட கொரியா. அந்நாட்டின் மருத்துவமனைகளில் போதிய உபகரணங்கள் இல்லை என்றும், அவசர சிகிச்சைப் பிரிவுகள் குறைவு என்றும் கூறப்படுகிறது. முக்கியமாக, கரோனா தொற்றைக் கண்டறியும் வசதிகள், பெருந்தொற்று சிகிச்சைக்கான மருந்துகள் இல்லை என்றே செய்திகள் தெரிவிக்கின்றன. அதிபரின் பிடிவாதத்தால் தடுப்பூசிகளும் கிடைக்கவில்லை. தற்போது தென் கொரியாவும் சீனாவும் வட கொரியாவுக்குத் தடுப்பூசிகளை வழங்க முன்வந்திருக்கின்றன.

எது எப்படி இருந்தாலும், நிலைமை மோசமாக இருப்பது மட்டும் உறுதி எனத் தெரிகிறது. அதனால்தான் இரும்புத்திரை போடப்பட்ட வட கொரியாவிலிருந்து இந்த அளவிலேனும் செய்திகள் வெளியாகின்றன. அண்டை நாடுகளில் அதிகரித்த ஒமைக்ரான் பரவல், வட கொரியாவிலும் கரோனா தொற்று பரவச் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சுகாதாரத் துறையினர் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை என்று அதிபர் கிம் ஜாங் உன் விமர்சித்திருக்கிறார். சுகாதாரத் துறையினருக்குப் பல்வேறு உத்தரவுகளை அவர் பிறப்பித்திருந்தார். குறிப்பாக மருந்துக் கடைகளை 24 மணி நேரமும் திறந்துவைத்திருக்க வேண்டும் என்று அவர் கண்டிப்பாக உத்தரவிட்டிருந்தார்.

இந்தச் சூழலில் நேரடியாகவே களமிறங்கியிருக்கும் கிம் ஜாங் உன், மருந்துக் கடைகளையும் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருக்கிறார். போதிய மருந்துகள் இல்லாமல் மருந்துக் கடைகள் செயல்படுவதை உணர்ந்துகொண்ட அவர், சுகாதாரத் துறை அதிகாரிகளைக் கடிந்துகொண்டார். இதையடுத்து தலைநகர் பியாங்கியாங்கில் மருந்து விநியோகத்தை மேற்கொள்ள ராணுவத்தினருக்கு அவர் உத்தரவிட்டிருக்கிறார். கூடவே, சுகாதார அமைச்சகத்தையும் அதிகாரிகளையும் பகிரங்கமாக அவர் விமர்சித்ததாக வட கொரிய அரசு ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்திருக்கிறது.

இன்னும் சில நாட்களில் தென் கொரியாவுக்கு வருகை தரவிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டங்கள் தொடர்பாகவும், அந்நாட்டின் கரோனா நிலவரம் குறித்தும் பேசுவார் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in