எதிரிகள் அகன்றுவிட்டாலும் இன்னல்கள் அகலவில்லை: கடுங்குளிரில் நடுங்கும் கெர்ஸான்வாசிகள்

எதிரிகள் அகன்றுவிட்டாலும் இன்னல்கள் அகலவில்லை: கடுங்குளிரில் நடுங்கும் கெர்ஸான்வாசிகள்

உக்ரைனின் கெர்ஸான் நகரம் ரஷ்யப் படைகளிடமிருந்து மீட்கப்பட்டுவிட்டாலும், அந்நகரவாசிகளின் துயரம் முடிவுக்கு வந்துவிடவில்லை. ரஷ்யர்களின் திட்டமிட்ட தாக்குதலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்ட நிலையில், குளிர்காலமும் தொடங்கியிருப்பதால் அச்சத்தில் நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள் கெர்ஸான் மக்கள்.

துறைமுக நகரங்களில் ஒன்றான கெர்ஸான், உக்ரைன் வீரர்களின் இடையறாத முயற்சியால் சமீபத்தில் ரஷ்யப் படைகளிடமிருந்து மீட்கப்பட்டது. உக்ரைனியர்களுக்கு எல்லா விதத்திலும் அழிவைத் தேடித் தரும் முனைப்புடன் இருக்கும் ரஷ்யப் படைகள், அந்நாட்டில் உள்ள பெரும்பாலான மின்னுற்பத்தி நிலையங்களைத் திட்டமிட்டு தகர்த்திருக்கிறது. இதனால், மின்சாரம் கிடைக்காமல் மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, கெர்ஸான் நகரைவிட்டு வெளியேறுவதற்கு முன்னர், ரஷ்யப் படைகள் மின்னுற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை முடக்கிவிட்டுச் சென்றிருக்கின்றன. ஒருபக்கம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முயற்சி செய்வதாக பாவனை காட்டிவிட்டு, மறுபுறம் உக்ரைனின் எரிசக்தி மையங்களைத் தகர்த்துக்கொண்டிருக்கிறது ரஷ்யா. இந்நிலையில், கடந்த வியாழன் முதல் கெர்ஸான் நகரில் பனி பெய்யத் தொடங்கியிருக்கிறது.

இந்த முறை வெந்நீர் வைக்கவோ, குளிர் காயவோ மின்சார ஹீட்டர்களைப் பயன்படுத்த முடியாது. ஏற்கெனவே குடிநீருக்குத் தட்டுப்பாடு. கூடவே பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு என்பதால் அந்நகர மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

போதாக்குறைக்கு, ஜீரோ டிகிரியை நோக்கி வெப்பநிலை குறைந்துகொண்டே செல்கிறது. இதனால், வழக்கமான விறகு அடுப்புகளைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தை கெர்ஸான் மக்கள் எதிர்கொள்கிறார்கள். முதியோர், நோயாளிகள் என பலவீனமானவர்களால் அவ்வளவு எளிதில் விறகுகளைச் சேகரித்துவிட முடியாது. இதில் இன்னொரு அபாயம் இருக்கிறது. மரங்களைச் சேகரிக்க காட்டுக்குள் செல்வது ஆபத்தானது. அங்கு கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று உக்ரைன் வீரர்கள் எச்சரித்திருக்கிறார்கள். போரால் வீடுகளை இழந்து தெருவுக்கு வந்துவிட்டவர்கள், இப்படியான இக்கட்டை எதிர்கொள்ள முடியாமல் வாழ்வா சாவா எனும் போராட்டத்தில் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.

உக்ரைனில் நிலவும் கடும் குளிரால் அந்நாட்டு மக்கள் மட்டும் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள் என்றில்லை. அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யப் படைகளுக்கும் அதே கதிதான். பனிப் பொழிவையும் கடும் குளிரையும் சமாளிக்க போதிய வசதிகள் இல்லாமல் வெட்டவெளியில் அவர்கள் சுற்றித்திரிய வேண்டியிருக்கும்.

சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி, “இந்த முறை குளிர்காலத்தை நாங்கள் சமாளித்துவிட்டால், நிச்சயம் போரில் வென்றுவிடுவோம்” என்று கூறியிருக்கிறார். இயற்கையின் ஆற்றலுக்கு முன்னர் மனிதர்கள் எத்தனை தூரம்தான் தாக்குப்பிடிக்க முடியும்? அதுவும் போர்க் காலத்தில்தான் அதில் எத்தனை சிரமங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in