கியாஸை முழுமையாகப் பெற கராச்சிக்காரர்கள் செய்யும் ஆபத்தான காரியம்!

கியாஸை முழுமையாகப் பெற கராச்சிக்காரர்கள் செய்யும் ஆபத்தான காரியம்!

ஆசியர்கள் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் சிந்திப்பார்கள் போலிருக்கிறது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் சமையல் எரிவாயு (எல்பிஜி கியாஸ்), குழாய் வழியாக வீடுகளுக்கு வழங்கப்படுகிறது. என்ன காரணத்தாலோ சமீப நாட்களாக இந்த கியாஸ் முழு அழுத்தத்தில் கிடைப்பதில்லை. இல்லத்தரசிகள் விரைவாக சமையலை முடிக்க முடியாமல் நேரம் வீணாகிறது. இதைப் போக்க என்ன செய்யலாம் என்று இல்லதரசர்கள் – அதான் வீட்டுக்காரர்கள் – அக்கம்பக்கத்து தொழில்நுட்ப நிபுணர்களிடம் ஆலோசனை கலந்தனர். “இது மிகவும் சிறிய பிரச்சினை. கடையில் இம்மாதிரி குழாய்களுடன் பொருத்தி சப்ளையை அதிகம் செய்வதற்கென்ற சாதனம் இருக்கிறது வாங்கிப் பொருத்துங்கள்” என்று அவர்கள் ஆலோசனை கூறினார்கள். ஓரிருவர் அல்ல. ஆயிரக்கணக்கான வீட்டுக்காரர்கள் உடனே கடைபிடிக்கத் தொடங்கிவிட்டனர்.

இதனால் என்ன பிரச்சினை என்கிறீர்களா? பெரும் பிரச்சினை இது. ஒருபுறம் இதனால் சமையல் கியாஸ் விநியோக நிறுவனம் கராச்சியில் திண்டாடுகிறது. இன்னொரு பக்கம் இது உயிராபத்தையும் விளைவிக்கக்கூடியதாய் இருக்கிறது. இது சட்டவிரோதமான செயல் என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை!

சமையல் எரிவாயுவை இப்படி சாதனத்தைப் பொருத்தி இழுத்தால் சில வேளைகளில் அழுத்தம் அதிகமாகி, அந்த வீட்டில் எரிவாயு உருளை வெடித்து பெரிய தீ விபத்து ஏற்படலாம்.

மீன் தொட்டியில் தொடர்ந்து தண்ணீரைப் பீய்ச்சியடிக்க பொருத்தப்படும் சாதனத்தை வைத்துதான், இந்த ஆபத்தான வேலையில் ஈடுபடுகிறார்கள். இது மின்சார சாதனங்கள் விற்கும் கடைகளில் தாராளமாகக் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் பல பெரிய நகராட்சிகளில், ஏன் மாநகராட்சிகளில் கூட - வீட்டுக்குக் குடிநீர் குழாய் இணைப்பு பெறும் சில பெருமக்கள், தங்கள் வீட்டுக்கு அதிகத் தண்ணீர் வேகமாக வர வேண்டும் என்பதற்காக உள்ளாட்சிமன்ற நிர்வாகத்துக்குத் தெரியாமல் இந்த சாதனத்தைக் குடிநீர்க் குழாய்களுடன் ரகசியமாக இணைத்துவிடுவது உண்டு. ஆனால் இப்படி தண்ணீரையோ, கியாஸையோ இழுப்பதைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். குறிப்பிட்ட தெருவில் அல்லது வார்டில் தண்ணீர் அதிகமாக உறிஞ்சப்படுவதை அவர்களிடமுள்ள கண்காணிப்புக் கருவிகளால் காட்ட முடியாவிட்டாலும் அந்தந்த வீடுகளுடன் பொருத்தப்படும் மீட்டர்களைச் சோதித்தால் அளவு அதிகமாக இருப்பதன் மூலம் தெரிந்துவிடும். (அந்த மீட்டரையும் துண்டித்துவிட்டால் என்ன என்று கேட்கிறீர்களா? வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சார மீட்டர்களை இயங்காமல் சில நாட்களுக்கு நிலையாக நிறுத்திவைப்பது அல்லது துண்டிப்பது போன்ற அரிய அறிவியல் சாகசங்களைக்கூட சிலர் செய்கின்றனர். அவையெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டால் தண்டனைக்குரிய குற்றமாகும்.)

அடுத்த விஷயத்துக்கு வருவோம், சமையல் எரிவாயுவை இப்படி சாதனத்தைப் பொருத்தி இழுத்தால் சில வேளைகளில் அழுத்தம் அதிகமாகி, அந்த வீட்டில் எரிவாயு உருளை வெடித்து பெரிய தீ விபத்து ஏற்படலாம் அல்லது சமையலறையில் இருப்பவர்களின் உயிருக்கே கூட ஆபத்து நேரலாம். எனவே, எதைச் செய்வதாக இருந்தாலும் யோசித்துச் செயல்படுவது அவசியம்.

இந்தச் சாதனம் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருவதை சந்தை வட்டாரங்களே தெரிவிக்கின்றன. சாதாரணமாக 1,200 முதல் 1,500 ரூபாய்க்கு (பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில்) விற்ற இந்த சாதனங்கள், தேவை அதிகரித்துவிட்டதால், இப்போது 2,500 முதல் 3,500 ரூபாய் வரை உயர்ந்துவிட்டது. அதைக்கூட கடைக்காரர்கள் கேட்டவுடனேயே எடுத்துத் தருவதில்லை. சற்றே பிகு செய்துவிட்டு, தட்டுப்பாடாகிவிட்டதே என்றெல்லாம் பாவ்லா செய்துவிட்டு, ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது என்று சொல்லி விலையை அதிகப்படுத்தி ஒவ்வொன்றாக விற்கிறார்கள்.

இப்படி ஒரு சில வீடுகளில் சமையல் எரிவாயு அதிகமாகவும் வேகமாகவும் உறிஞ்சப்படுவதால், பல வீடுகளில் கியாஸ் வருவது குறைகிறது அல்லது நின்றுவிடுகிறது. அவர்கள் உரிய அமைப்பிடம் புகார்களைச் செய்வது அதிகரித்து வருகிறது. இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால், சமையல் கேஸை இப்படி உறிஞ்சு சாதனம் வைத்து திருடுகிறவர்களுக்கு ரொக்க அபராதம் முதல் 6 மாத சிறைத் தண்டனை வரை விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.

சிலிண்டர்களில் வீடு வீடாகக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் உள்ள இடர்களைக் களையத்தான், இப்படி அடுக்ககங்களிலும் பெரிய கூட்டுக் குடியிருப்புகளிலும் நகரியங்களிலும் குழாய் வழியாக அனுப்புகிறார்கள். அதில் குறைகள் இருந்தால் அதிகாரிகளிடம் முறையிட்டு சரி செய்வதே நல்லது. அதிகாரிகளும் இந்தப் புகார்களை அலட்சியம் செய்யாமல், எல்லா வீடுகளுக்கும் போதிய அழுத்தத்தில், போதிய அளவில் சமையல் எரிவாயு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். அடிக்கடி நுகர்வு அளவையும் பரிசோதிக்க வேண்டும்.

கராச்சியில் சமையஸ் கியாஸ் கிடைப்பது சமீபகாலமாகக் குறைந்து வருவதால், விநியோக அமைப்புகளால் அதிகம் வழங்க முடிவதில்லை என்பதுதான் இந்தப் பிரச்சினைகளுக்கே மூல காரணம். அதைச் சரிசெய்தாலேயே, ஆபத்தான இந்த முயற்சிகளும் முடிவுக்கு வந்துவிடும்!

Related Stories

No stories found.