கடல்வளத்தைப் பாதுகாக்க கூட்டுக்குழு அமைப்பு

கச்சத்தீவு பேச்சுவார்த்தையில் இருநாட்டு மீனவர்கள் முடிவு
கச்சத்தீவில் நடைபெற்ற பேச்சுவாத்த்தையில் தமிழக முதல்வருக்கு இலங்கை மீனவர்கள் வழங்கிய கோரிக்கை மனு.
கச்சத்தீவில் நடைபெற்ற பேச்சுவாத்த்தையில் தமிழக முதல்வருக்கு இலங்கை மீனவர்கள் வழங்கிய கோரிக்கை மனு.

இந்திய- இலங்கை கடல் எல்லைப் பகுதியில் கச்சத்தீவு உள்ளது. இங்குள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் நேற்று திருவிழா தொடங்கியது. கொடியேற்றம், திருப்பலி உள்ளிட்டவை இன்று நடைபெற்றது. இதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் ராயப்பன், விசைப்படகு மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் சேசுராஜா, சகாயம், எமரிட், பாரம்பரிய மீன்பிடி தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். இருநாட்டு மீனவர்களும் சந்தித்து கொண்டனர்.

இதன் பின், இருநாட்டு மீனவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தை இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் நேற்று நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது என பாரம்பரிய மீன்பிடி தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பியிடம் கேட்டோம். ``தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை விட வேண்டும். அத்துடன் இழுவை மடி வலைகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். என்று தமிழக மீனவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது'' என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ``தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்படகுகளை இலங்கை அரசு ஏலம் விட்டுள்ளது. பாசி வலைகளை தமிழக மீனவர்கள் பயன்படுத்துவது போலவே இலங்கை மீனவர்களும் பயன்படுத்துகின்றனர். எனவே, நாட்டுப்படகு மீனவர்கள் மீதான நடவடிக்கைகளை இலங்கை அரசு கைவிடவேண்டும்'என்று பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்பட்டது'' என்றார்.

' இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்திய, இலங்கை கடற்படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அப்போது இழுவை மடி வலைகளை அனுமதிக்க முடியாது என இலங்கை மீனவர்கள் திட்டவட்டமாக கூறினர். நாட்டுப்படகு மீனவர்களின் கோரிக்கைகளை இலங்கை அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அந்நாட்டு கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்' என்று சின்னத்தம்பி கூறினார். 'அத்துடன் கடல்வளத்தைப் பாதுகாக்க இரண்டு நாட்டு மீனவர்களைக் கொண்ட கூட்டுக்குழு அமைக்கப்பட்டது' என்றும் அவர் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு யாழ், மன்னார்,கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட கடல் தொழிலாளர் கூட்டுறவு சம்மேளனத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில், ' இழுவை மடி வலைகளால் சிறுமீனவர்களின் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டு இழுவைப்படகுகளால் பாதிக்கப்படும் வட இலங்கை கடல் தொழிலாளர்களின் பிரச்சினைகளையும் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in