இந்தியர்களை சதாய்க்கும் ஜான்சன் & ஜான்சன்

இந்தியர்களை சதாய்க்கும் ஜான்சன் & ஜான்சன்

பல்வேறு நாடுகளிலும் தடைக்கு ஆளாகி வரும் ஜான்சன்ஸ் பேபி பவுடர், இந்தியாவில் மட்டும் உற்பத்தி மற்றும் விற்பனை சந்தையை தொடர முயற்சித்து வருவது பல தரப்பிலும் சர்ச்சைகளை கூட்டியுள்ளது.

சர்வதேச அளவில் பிரபலமான ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அழகு சாதனம், சுகாதாரம் மற்றும் மருந்துப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கான பவுடர், சோப்பு, ஷாம்பூ உள்ளிட்டவற்றின் விற்பனையில் போட்டி நிறுவனங்களைக் காட்டிலும் முன்னணி வகிக்கிறது. ஆனால் கடந்த சில வருடங்களாக ஜான்சன்ஸ் பேபி பவுடரை முன்வைத்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நீதிமன்ற வழக்குகளை அந்நிறுவனம் சந்தித்து வருகிறது.

நுரையீரல் முதல் கருப்பை வரை புற்றுநோயை உருவாக்கும் நச்சு வேதிப் பொருட்கள் ஜான்சன்ஸ் பவுடரில் இருப்பதாக வெளியான ஆய்வுகளை அடுத்து இந்த எதிர்ப்புகள் திரண்டன. அமெரிக்காவில் மட்டும் சுமார் 40 ஆயிரம் வழக்குகள் பதிவாகவே, சந்தையிலிருந்து சர்ச்சைக்குரிய தனது உற்பத்தி பொருட்களை திரும்ப பெற்றது. இதே நிலை கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் நீடிக்கிறது. அங்குள்ள கடுமையான சட்டங்களுக்கு உட்பட்டு பணிந்து செல்லும் ஜான்சன்ஸ், இந்தியாவில் மட்டும் தனி ராஜாங்கத்தை தொடர்ந்து வருகிறது.

வெளிநாடுகளில் தடைக்கு ஆளான போதும் தனது இந்திய உற்பத்தி மற்றும் விற்பனையிலிருந்து ஜான்சன்ஸ் பின்வாங்கவில்லை. இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்தபோதும், இந்திய சட்டங்களின் இலகுத் தன்மை ஜான்சன்ஸை காப்பாற்றி வருகிறது.

இதற்கிடையே சர்ச்சைக்கு ஆளான தனது உற்பத்திகளை உலகளாவிய வகையில் அடுத்தாண்டு நிறுத்தி விடுவதாக ஜான்சன்ஸ் உறுதியளித்தது. வெளிநாடுகளில் அந்நிறுவனம் எதிர்கொண்டு வரும் வழக்குகள் மற்றும் கண்டனங்களை மட்டுப்படுத்தவும் இவை உதவின. ஆனால் இந்திய அங்காடிகளில் ஜான்சன்ஸின் சர்ச்சைக்குரிய உற்பத்தி பொருட்கள் விற்பனையாவதோடு, அதன் இந்திய ஆலைகளின் செயல்பாடும் தொடர்ந்து வருகிறது.

ஜான்சன்ஸ் தயாரிப்புகளுக்கு எதிரான புகார்களை அடுத்து மும்பையின் முலுண்ட் பகுதியில் செயல்படும் அதன் ஆலை ஒன்றின் செயல்பாட்டுக்கு மகாராஷ்டிர அரசு தடை விதித்தது. ஆனால் இந்த தடைக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தை நாடிய ஜான்சன்ஸ், ஆலையின் உற்பத்தி செயல்பாடுகளை தொடர வலுயுறுத்தி வருகிறது. இந்த வழக்கு விசாரணைகளின் அங்கமாக மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் ஆலையில் ஆய்வு நடத்தவும், ஜான்சன்ஸ் உற்பத்தி பொருட்களின் மாதிரிகளை பரிசோதிக்கவும் நீதிமன்றம் நேற்று(நவ.16) உத்தரவிட்டது.

இதற்கிடையே அரசின் தடையை மீறும் வகையில், தனது இதர உற்பத்தி பொருட்களின் அங்கமாக சர்ச்சைக்குரிய பவுடருக்கான சேர்மானங்களின் உற்பத்தியை தொடர்வதாக ஜான்சன்ஸ் ஆலை மீதான குற்றச்சாட்டுகள் அமைந்துள்ளன. மேலும் தடைக்கு ஆளாகி விற்பனைக்கு வழியின்றி தேங்கிய பொருட்களை, தனது இதர சந்தை பொருட்களுக்கான அடிப்படையாக பயன்படுத்துவதாகவும் அந்த குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன. இவற்றுக்கு மத்தியில் தடை செய்யப்பட்ட பவுடரை ஜான்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க விரும்பினால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அந்நிறுவனமே பொறுப்பு என்ற நீதிமன்றத்தின் கருத்தும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது.

எதிர்ப்புக்கு ஆளான பேபி பவுடரின் உற்பத்தி மற்றும் விற்பனையை விரைவில் நிறுத்துவதாக உறுதி அளித்திருந்த ஜான்சன்ஸ், அதே பவுடரை தீங்கிழைக்காத இதர பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்போவதாகவும் கூறி வருகிறது. சந்தையில் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் ஜான்சனின் இந்த முயற்சியும் சந்தேகங்களை எழுப்பி வருகிறது. மக்காச்சோளத்தை அடிப்படையாகக் கொண்டு தனது புதிய பேபி பவுடர் இருக்கும் என்று ஜான்சன் அறிவித்துள்ளபோதும், அதன் தனி சிறப்புக்காக சேர்க்கப்படும் வேதிபொருட்கள் குறித்தான கேள்விகள் தொடர்கின்றன.

பேபி பவுடர் உபயோகத்தை பொறுத்தவரை, ஜான்சன்ஸ் என்றில்லை எந்தவொரு பவுடருமே பச்சிளம் குழந்தைகளுக்கு ஆபத்தையே விளைவிக்கும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. குழந்தைகளின் மெல்லிய சருமத்தில் செயற்கை ரசாயனங்கள் அடங்கிய பவுடர்கள் படரும்போது, அவை உடலின் நீடித்த ஆரோக்கிய கேடுகளுக்கு காரணமாகின்றன. எனவே பவுடர் மட்டுமன்றி அழகு சாதனங்கள் பெயரிலானன் அதீத ரசாயனங்கள் அடங்கியவற்றை குழந்தைகளிடம் உபயோகிக்காது இருப்பதே உத்தமம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in