ஜப்பானில் அடுத்த வாரம் மோடியைச் சந்திக்கவிருக்கும் ஜோ பைடன்: திட்டம் என்ன?

ஜப்பானில் அடுத்த வாரம் மோடியைச் சந்திக்கவிருக்கும் ஜோ பைடன்: திட்டம் என்ன?

குவாட் அமைப்பின் அடுத்த மாநாடு அடுத்த வாரம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கவிருக்கும் நிலையில், அந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசவிருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு அமைப்பான குவாட், ட்ரம்ப் ஆட்சிக்காலத்தின்போது ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் இதுவரை மூன்று மாநாடுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இதில் இரண்டு மாநாடுகள் காணொலிச் சந்திப்பின் வழி நடத்தப்பட்டன.

குவாட் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேரடியாகப் பங்கேற்ற முதல் மாநாடு 2021 செப்டம்பர் 24-ல் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி, ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிஸன், ஜப்பானின் அப்போதைய பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும் வளத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் இதன் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்றுவது எனத் தீர்மானிக்கப்பட்டது. அதேவேளையில், இந்நாடுகளின் ராணுவக் கூட்டு சீனாவின் நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டது என்றே கருதப்படுகிறது.

இந்நிலையில் குவாட் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேரடியாகப் பங்கேற்கும் இரண்டாவது மாநாடு மே 24-ல் டோக்கியோவில் நடைபெறவிருக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

தனது ஜப்பான் பயணத்தின்போது, இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு (ஐபிஇஎஃப்) எனும் புதிய திட்டத்தையும் ஜோ பைடன் தொடங்கிவைக்கிறார். இதில் ஜப்பான் பிரதமரும் கலந்துகொள்ளவிருக்கும் நிலையில், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த பிற நாடுகளின் தலைவர்கள் காணொலிச் சந்திப்பின் மூலம் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

ஜப்பான் செல்வதற்கு முன்னர் தென் கொரியாவுக்குச் செல்லும் ஜோ பைடன் அங்கு சில முக்கியமான கூட்டங்களில் கலந்துகொள்கிறார். உக்ரைன் போர் உச்சமடைந்துவரும் நிலையில் உலக நாடுகளின் முக்கியத் தலைவர்கள் நேரடியாகச் சந்தித்துப் பேசவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in