இஸ்ரேலில் கட்டுமான துறைகளில் பணிபுரிந்து வந்த பாலஸ்தீனியர்களுக்குப் பதிலாக அங்கு பணிபுரிய ஒரு லட்சம் இந்தியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவினருக்கு இடையே நடந்துவரும் போர் ஒரு மாதத்தைத் தாண்டி நீடித்து வருகிறது. இச்சூழலில் இஸ்ரேலிய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு பாலஸ்தீனியர்களுக்குப் பதிலாக ஒரு லட்சம் இந்திய தொழிலாளர்களை பணி அமர்த்த அனுமதிக்குமாறு அந்நாட்டு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
போர் தொடங்குவதற்கு முன் இஸ்ரேலில் சுமார் 90,000 பாலஸ்தீனியர்கள் பணிபுரிந்து வந்தனர். காஸாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதக் குழு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது கொடூரமான தாக்குதல் நடத்தியது. அதனால் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் மூண்டது. இதனையடுத்து பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலில் வேலை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இது இஸ்ரேல் கட்டுமானத் துறையில் மந்தநிலைக்கு வழிவகுத்துள்ளது. கட்டுமானத் தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக பல கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன. இந்நிலையில், இந்தியாவின் உதவியை இஸ்ரேல் நாடியுள்ளது.
இது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இதற்கு ஒப்புதல் அளிக்கும் இஸ்ரேல் அரசின் முடிவுக்காகக் காத்திருப்பதாகவும் இஸ்ரேலிய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த ஹெய்ம் ஃபீக்லின் தெரிவித்துள்ளார். "இந்தியாவில் இருந்து சுமார் 50,000 முதல் 100,000 தொழிலாளர்களை இந்தத் துறையில் பணிபுரிய வைக்க விரும்புகிறோம். அவர்கள் வருகைக்குப் பின் கட்டுமானத்துறை இயல்பு நிலைக்குக் திரும்பும் என்று நம்புகிறோம்" எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு மே மாதத்தின் தொடக்கத்தில் இந்தியாவைச் சேர்ந்த 42,000 தொழிலாளர்கள் இஸ்ரேலில் பணிபுரிவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் இஸ்ரேலும் கையெழுத்திட்டன. இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் எலி கோஹன் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் இந்தியாவைச் சேர்ந்த 34,000 தொழிலாளர்கள் கட்டுமானத் துறையிலும் 8,000 செவிலியர்கள் நர்சிங் துறையிலும் பணிபுரிய முடியும்.
இந்தியத் தொழிலாளர்களுக்கு ஒப்பீட்டளவில் குறைவான ஊதியமே வழங்கப்படுவதால், போர்ச் சூழலால் ஏற்படும் செலவைக் கையாள இந்தியர்களைப் பணியில் அமர்த்துவது உதவியாக இருக்கும் என்று கருதப்பட்டது.
ஏற்கெனவே கட்டுமானம் மற்றும் நர்சிங் துறைகளில் மட்டும் 42,000 தொழிலாளர்களை அனுமதிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால், மீண்டும் புதிய ஒப்பந்தம் போடப்படும் அல்லது ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தம் திருத்தப்படும் என்று தெரிகிறது.