கழிவறை காகிதத்திலும் தற்கொலை தடுப்பு பிரச்சாரம்

மனச் சிக்கலையும் தீர்க்க முயற்சி
கழிவறை காகிதத்திலும் தற்கொலை தடுப்பு பிரச்சாரம்

புதுமைக்கு பெயர்போன ஜப்பானில் மற்றுமொரு புதுமையாக, தற்கொலை தடுப்பு பிரச்சாரத்துக்கான இடமாக கழிவறையை கண்டடைந்து இருக்கிறார்கள்.

புதுமைக்கும், கடும் உழைப்புக்கும் பெயர் பெற்றவர்கள் என்றபோதும் அவற்றைவிட அதிகமாக, பரவும் தற்கொலை முயற்சிகள் ஜப்பானியர்களை சங்கடமூட்டி வருகின்றன. தற்கொலை மனநிலை என்பதற்கு எதிராக ஜப்பானியர்கள் நீண்ட போராட்டம் நடத்தி வருகிறார்கள். மக்கள் மனதிலிருந்து தற்கொலை முனைப்பை தவிர்க்கவும், தடுக்கவும் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை பரிசீலித்து பார்த்து வருகிறது.

ரயில்நிலையங்களில் தற்கொலை தடுப்பு மதில்கள்
ரயில்நிலையங்களில் தற்கொலை தடுப்பு மதில்கள்

உயரமான கட்டிடங்களில் கூடுதல் கண்காணிப்புகளை நிறுவியதோடு அங்கிருந்து குதிப்போர் அடிபடாதிருக்க கட்டிடங்கள் தோறும் வலைகள் கட்டி வைத்தார்கள். ரயிலின் குறுக்கே விழுந்து மரிப்போர் எண்ணிக்கையை குறைக்க ரயில் தடங்களின் அருகே உயரமான மதில்களை அமைத்தனர். நச்சு மருந்துகளின் சந்தையில் அவற்றை பெறுவதற்கு பெரும் கெடுபிடிகளை தாண்ட வேண்டியிருக்கும். இவற்றுக்கு அப்பால் தீவிர கவுன்சிலிங், பாடத் திட்டத்தில் மாற்றம், கண்ணில் படும் இடங்களில் எல்லாம் பிரச்சார விளம்பரங்கள் என குட்டி தேசமான ஜப்பான், தற்கொலை தடுப்புக்கு எதிராக நீண்ட போராட்டம் நடத்தி வருகிறது.

இந்த பிரச்சாரத்தின் பாதை தற்போது கழிவறையிலும் நுழைந்திருக்கிறது. டாய்லெட் பேப்பர்களில் தற்கொலை தடுப்புக்கான பிரச்சார வாசகங்கள், தன்னம்பிக்கையூட்டும் விழிப்புணர்வு மொழிகள், மன அழுத்தம் களைவதற்கான அவசர அழைப்பு எண்கள் உள்ளிட்டவற்றை கண்களுக்கு இதமான வண்ணத்தில் சித்திரங்களுடன் அச்சடித்து வைத்திருக்கிறார்கள்.

தற்கொலை தடுப்பு பிரச்சாரம் இப்படி கழிவறையில் நிலைகொண்டிருப்பதன் பின்னால், அனைவரும் அறிந்துகொண்டாக வேண்டிய விழிப்புணர்வு தகவலும் அடங்கியிருக்கிறது. மனிதர்களுக்கு தனிமை வாய்க்கும்போது மட்டுமே தற்கொலை எண்ணம் பெரிதாய் தலைதூக்கும். தனிமைக்கான வாய்ப்பை வழங்கும் இடங்களில் முக்கியமானது கழிவறை. உடல் மட்டுமன்றி மனதின் கழிவை வெளியேற்றும் விதமாக கண்ணீர் விடுவோர் முதல், கத்தி தீர்ப்போர் வரை நடைமுறையில் கழிவறையின் உபயோகங்கள் அநேகம்.

இங்கே கிட்டும் தனிமை தற்கொலை எண்ணம் பீடித்தோரை மேலும் அதனை நோக்கி உந்தக் கூடும் என்பதாக கிடைத்த ஆராய்ச்சி முடிவுகளை அடுத்தே, தற்கொலை தடுப்பு பிரச்சாரம் கழிவறை காகிதத்தில் அச்சேற ஆரம்பித்திருக்கிறது. முதல் சுற்றாக ஜப்பானின் பல்கலைக்கழக கழிவறை காகிதங்களில் இந்த முயற்சி வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக இதர கழிவறைகளுக்கும் இந்த உத்தியை நீட்டிக்க உள்ளார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in