பேய் பயமின்றி பிரதமர் இல்லத்தில் தூங்கிய ஃபுமியோ கிஷிடா!

பேய் பயமின்றி பிரதமர் இல்லத்தில் தூங்கிய ஃபுமியோ கிஷிடா!

ஜப்பானியர்களிடையே பேய் பயம் அதிகம். ஹாலிவுட் பேய்ப் படங்களைவிடவும் ஜப்பானிய பேய்ப் படங்கள்தான் ரசிகர்களின் முதுகுத்தண்டைச் சில்லிடச் செய்வதில் முதன்மையானவை. அப்படிப்பட்ட தேசத்தில், ஆட்சியாளர்களுக்கும் பேய் நம்பிக்கையும் பயமும் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

ஜப்பான் ஆட்சியாளர்கள் பலரும், தலைநகர் டோக்கியோவில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் தங்க பயப்படுவார்கள். சமீப ஆண்டுகளில் ஜப்பானை ஆட்சிசெய்த பிரதமர்கள் யோஷிஹிடே சுகா, ஷின்ஸோ அபே கூட அந்த இல்லத்தில் தங்க விரும்பியதில்லை. குறிப்பாக, 2006-ல் பிரதமரான ஷின்ஸோ அபே அந்த இல்லத்தில் ஒரே ஒரு வருடம்தான் தங்கியிருந்தார். 2012 தேர்தலில் மீண்டும் வென்ற பின்னர், அங்கு செல்ல மறுத்துவிட்டார். மாறாக, தனது சொந்த வீட்டிலிருந்தே பிரதமர் அலுவலகத்துக்குச் சென்றுவந்தார்.

மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆட்சியாளர்களே இப்படி அஞ்சி நடுங்கியதற்கு முக்கியக் காரணம், 1936 பிப்ரவரி 26-ல் நடந்த ஒரு கோரச் சம்பவம். இளம் ராணுவ அதிகாரிகள் அரங்கேற்றிய ராணுவ சதித் திட்டத்தில், உயரதிகாரிகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். முன்னாள் பிரதமரும் நிதியமைச்சருமான தகாஹஷி கோரேகியோவும் உயிரிழந்தார். பிரதமர் கீஸுகே ஒகடாவைக் கொல்ல திட்டமிட்டிருந்த சதிகாரர்கள், அடையாளம் தெரியாமல் அவரது உறவினரைச் சுட்டுக்கொன்றனர். 1929-ல் கட்டப்பட்ட அந்தக் கட்டிடம் அந்தச் சம்பவத்துக்குப் பின்னர், பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தது. 2005-ல்தான் புனரமைக்கப்பட்டது.

அந்த இல்லத்தில், பேய்கள் நடமாட்டம் இருப்பதாக அங்குள்ள பலர் நம்புகிறார்கள். இந்நிலையில், 2021 அக்.4-ல் பதவியேற்ற ஃபுமியோ கிஷிடா, அந்த இல்லத்துக்குச் சென்று தங்கப்போவதாக முடிவெடுத்தார். வழக்கமான அரசியல் பரபரப்புகளையும் தாண்டி இந்தச் செய்தி ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படது.

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா

இந்நிலையில், அந்த இல்லத்தில் தங்கத் தொடங்கியிருக்கும் பிரதமர் கிஷிடா, அங்கு தனது அறையில் ஆழ்ந்து உறங்குவதாக கூறியிருக்கிறார். அத்துடன், “இதுவரை ‘எதையும்’ பார்க்கவில்லை” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

பேய்களை நகைச்சுவைத் துணை நடிகர்களைப் போல காட்டும் நம்மூர் பேய்ப் படங்களை, ஒருவேளை அவரும் ஓடிடியில் பார்த்திருக்கக்கூடும்!

Related Stories

No stories found.