ஷின்ஸோ அபே படுகொலை: ஜப்பான் காவல் துறைத் தலைவர் பதவிவிலகியது ஏன்?

ஜப்பான் தேசிய காவல் துறைத் தலைவர் இட்டாரு நகாமுரா
ஜப்பான் தேசிய காவல் துறைத் தலைவர் இட்டாரு நகாமுரா

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே படுகொலை விவகாரத்தின் பின்னணியில் அந்நாட்டின் தேசிய காவல் துறைத் தலைவர் இட்டாரு நகாமுரா பதவிவிலகியிருக்கிறார்.

ஜூலை 8-ல், ஜப்பானின் நரா நகரில், யமாட்டோ சைடாய்ஜி ரயில் நிலையத்தின் முன்னே தேர்தல் பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்த ஷின்ஸோ அபே துப்பாக்கியால் சுடப்பட்டார். ஜப்பானிய கடற்படையின் தற்காப்புப் படையின் முன்னாள் வீரர் டெட்ஸுயா யமாகாமி ஷின்ஸோ அபேவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் ஷின்ஸோ அபேயின் நெஞ்சுப் பகுதியின் இடதுபாகத்திலும், கழுத்துப் பகுதியிலும் காயம் ஏற்பட்டதையடுத்து அவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ஜப்பானின் மிக முக்கியத் தலைவரான ஷின்ஸோ அபே இப்படி பட்டப்பகலில் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பலத்த சந்தேகங்களை எழுப்பியது. துப்பாக்கிப் பயன்பாட்டுக்குப் பலத்த கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், யமாகாமி எப்படி துப்பாக்கி வைத்திருந்தார் என்றும் சந்தேகங்கள் எழுந்தன. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட அந்தத் துப்பாக்கியை அவர் தனது வீட்டிலேயே தயாரித்தது பின்னர் தெரியவந்தது.

யமாகாமி தற்போது மனநல மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார். கொலை செய்த நேரத்தில் அவரது மனநிலை எப்படி இருந்தது என்பது குறித்து கண்டறிய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

ஐக்கிய தேவாலயத்துக்கு யமாகாமியின் தாய் ஏராளமாக நன்கொடை வழங்கியதாகவும், அதன் காரணமாக அவரது குடும்பம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அந்த தேவாலயத்துடன் ஷின்ஸோ அபே தொடர்பில் இருந்ததாகக் கூறி அவரை யமாகாமி கொலைசெய்திருக்கலாம் எனப் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், ஷின்ஸோ அபேவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருந்ததற்குப் பொறுப்பேற்று தேசிய காவல் துறைத் தலைவர் இட்டாரு நகாமுரா இன்று (ஆக.25) பதவிவிலகினார்.

“ஷின்ஸோ அபேவுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் குறைபாடுகள் இருந்தன. பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த ஆய்வுகளிலும் குறைபாடு இருந்தது. ஃபீல்டு கமாண்டர் கொடுத்த வழிகாட்டுதலிலும் போதாமை இருந்தது” என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஷின்ஸோ அபேவுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில், மறுக்கவே முடியாத அளவுக்குக் குறைபாடுகள் இருந்ததாக, நரா நகரப் போலீஸார் ஆரம்பத்திலேயே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in