‘ஜெய்சங்கர் நிஜமான தேசபக்தர்!’ - வானளாவப் புகழ்ந்த ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர்

‘ஜெய்சங்கர் நிஜமான தேசபக்தர்!’ - வானளாவப் புகழ்ந்த ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர்

உக்ரைன் விவகாரத்தில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்துக்கு இடையில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய், ராணுவத் தளவாடங்கள் இறக்குமதியை இந்தியா தொடர்கிறது. தனக்கென சொந்தமாக வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவதாக இந்திய வெளியுறவுத் துறை திட்டவட்டமாக அறிவித்தது. இதுவரை உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை இந்தியா வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை. ரஷ்யாவுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சில், ஐநா பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களிலிருந்தும் இந்தியா விலகி நின்றது. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டால், ரஷ்யா மிகவும் திருப்தியடைந்திருக்கிறது.

இந்நிலையில், இந்தியா டுடே செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ், இந்தியாவையும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் மனதாரப் புகழ்ந்திருக்கிறார்.

“தூதரக உறவில் நீண்டகால அனுபவம் கொண்டவர் ஜெய்சங்கர். மேலும், ‘நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தேவைகளின் அடிப்படையில், நாங்கள் முடிவெடுப்போம்’ எனச் சொன்னதன் மூலம், தனது தேசத்தின் உண்மையான தேசபக்தர் என அவர் காட்டிவிட்டார். பல நாடுகள் அப்படி சொல்ல முன்வராது” என்று அந்தப் பேட்டியில் லாவ்ரோவ் குறிப்பிட்டிருக்கிறார்.

உணவுப் பாதுகாப்பு, ராணுவ ரீதியான பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ரஷ்யா தனது மேற்கத்திய நட்பு நாடுகளைச் சார்ந்திருக்க முடியாது என்றும் லாவ்ரோவ் குறிப்பிட்டார்.

1945-ல் கையெழுத்தான ஐநா பட்டய ஒப்பந்தத்தின் சட்டக்கூறு 2(4), எந்த நாட்டின் மீதும் அச்சுறுத்தல் விடுப்பதையும் படைகளைப் பயன்படுத்துவதையும் தடை செய்கிறது. உக்ரைன் மீது ஊடுருவல் நிகழ்த்தியதன் மூலம் ரஷ்யா அதை மீறிவிட்டதாகவே அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டுகின்றன.

ஆனால், “ஐநா பட்டயத்தை மீறும் வகையில் சட்டவிரோதமாக, முறையற்ற வகையில் நடவடிக்கை எடுக்கும் நாடுகள் தவிர பிற நாடுகளிடமிருந்து ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். அப்படியான நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எனவே இருதரப்பு ஒத்துழைப்பை மேற்கொள்கிறோம்” என்று லாவ்ரோவ் கூறினார்.

இந்தியா - ரஷ்யா உறவு குறித்துப் பேசிய அவர், “இந்தியா மிக மிக நீண்டகால நட்பு நாடு. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வியூக அடிப்படையிலான உறவு என்றே அழைக்கிறோம்” என்று குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு ரஷ்ய அரசு அளித்துவரும் ஆதரவு குறித்தும் பேசினார். பாதுகாப்புத் துறை விஷயத்தில் இந்தியா விரும்பும் எதையும் ரஷ்யாவால் வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in