விராட் கோலி கையெழுத்திட்ட பேட்: ஆஸ்திரேலியத் துணைப் பிரதமருக்கு அன்பளிப்பாகத் தந்த ஜெய்சங்கர்!

விராட் கோலி கையெழுத்திட்ட பேட்: ஆஸ்திரேலியத் துணைப் பிரதமருக்கு அன்பளிப்பாகத் தந்த ஜெய்சங்கர்!

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் சென்றிருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், விராட் கோலி கையெழுத்திட்ட கிரிக்கெட் மட்டையை அந்நாட்டின் துணைப் பிரதமரான ரிச்சர்டு மார்லஸுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

சமீபத்தில் நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் சென்றிருந்த ஜெய்சங்கர், அதை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார். நேற்று (அக்.10) அந்நாட்டின் தலைநகர் கான்பெர்ராவைச் சென்றடைந்தார். அவருக்கு மூவர்ணக் கொடியுடன் ஆஸ்திரேலியவாழ் இந்தியர்கள் வரவேற்பளித்தனர். அந்நாட்டின் நாடாளுமன்றப் பழைய கட்டிடம் மூவர்ண விளக்கொளிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பயணத்தின்போது ஆஸ்திரேலியத் துணைப் பிரதமர் ரிச்சர்டு மார்லஸைச் சந்தித்த ஜெய்சங்கர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கையெழுத்திட்ட கிரிக்கெட் மட்டையை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

இதுகுறித்து ட்வீட் செய்த ரிச்சர்டு மார்லஸ், ‘இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை கான்பெராவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. கிரிக்கெட் மீதான நமது காதல் உட்பட இரு நாடுகளையும் பல்வேறு விஷயங்கள் பிணைத்திருக்கின்றன. இன்று அவர் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் விராட் கோலி கையெழுத்திட்ட கிரிக்கெட் மட்டையை அளித்து என்னை ஆச்சரியப்படுத்திவிட்டார்’ என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

ரிச்சர்டு மார்லஸ் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத் துறையையும் கூடுதலாக வகிக்கிறார். அவரிடம் பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு குறித்து ஜெய்சங்கர் உரையாடினார்.

பின்னர் அந்நாட்டின் கல்வித் துறை அமைச்சர் ஜேசன் கிளேரைச் சந்தித்துப் பேசிய ஜெய்சங்கர், தரமான கல்வியின் அவசியம், உலகளாவிய வேலை வாய்ப்புகளுக்குத் தயாராவது என்பன உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவரிடம் ஆலோசனை நடத்தினார்.

இன்று ஆஸ்திரேலிய கடற்படை, ஊடகங்கள், சிந்தனை அமைப்புகள் ஆகியவற்றுடன் ஜெய்சங்கர் உரையாடுகிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in