
மாஸ்கோவில் உள்ள போக்ரோவ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸேய் நவால்னி, தற்போது அந்தச் சிறையில் இல்லை எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மொத்தம் 11.5 ஆண்டுகள் சிறைவாசம் விதிக்கப்பட்டிருக்கும் நவால்னி வேறு எந்தச் சிறைக்கு மாற்றப்பட்டார் என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
ரஷ்ய அதிபர் புதினை ஊழல்வாதி எனக் கடுமையாக விமர்சித்துவந்த நவால்னி, அந்நாட்டின் எதிர்க்கட்சிகளின் பிரதான முகமாக இருந்துவருபவர். ‘ரஷ்யாவின் எதிர்காலம்’ எனும் பெயரில் அவர் நடத்திவந்த இயக்கம் புதின் ஆட்சியின் ஊழல்களை வெளிக்கொணர்ந்தது. இதையடுத்து அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. புதினுக்குச் சரியான அரசியல் எதிரியாக உருவான நவால்னி வழக்குகள் மூலம் முடக்கப்பட்டார். பின்னர் பரோலில் வெளிவந்தாலும் அவரைத் தொடர்ந்து கண்காணித்துவந்தது புதின் அரசு.
2020 ஆகஸ்டில் கடுமையான விஷ பாதிப்பு அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் நவால்னி. நரம்புகளைப் பாதித்து செயலிழக்க வைக்கும் நோவிசோக் என்ற நரம்பு விஷம் அவர் மீது பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஜெர்மனியின் பெர்லின் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ரஷ்ய உளவாளிகள் தன்னைக் கொல்ல முயன்றதாக அவர் முன்வைத்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துவிட்டது.
கடும் சவால்களுக்கு மத்தியில் 2021-ல் ஜெர்மனியிலிருந்து ரஷ்யா திரும்பிய அவருக்குச் சிறைத்தண்டனை காத்திருந்தது. பரோல் விதிமீறல்களில் ஈடுபட்டதாக அவர் மீது சுமத்தப்பட்ட வழக்கில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2022 மார்ச் 24-ல், முறைகேடு மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு மேலும் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டுகள் போலியானவை என அவர் மறுப்பு தெரிவித்துவருகிறார்.
நவால்னி சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், அவரது அரசியல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டன. அவரது இயக்கத்தைத் தீவிரவாத இயக்கமாக அறிவித்த புதின் அரசு, அந்த இயக்கத்தைச் சேர்ந்த பலரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. பலர் அரசின் அழுத்தம் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர்.
கடந்த மாதம் ரஷ்ய நீதிமன்றம் ஒன்றில் நடந்த வழக்கு விசாரணையில் காணொலி மூலம் ஆஜரான நவால்னி, புதின் மனநிலை சரியில்லாதவர் என்றும், உக்ரைன் மீது அவர் தொடங்கிய போரின் காரணமாக உக்ரைன், ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளைச் சேர்ந்த அப்பாவி மக்கள் படுகொலைசெய்யப்படுவதாகவும் விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தன் மீது புதிதாகக் குற்ற வழக்குகள் தொடரப்பட்டிருப்பதாக இரண்டு வாரங்களுக்கு முன்னர் நவால்னி தெரிவித்தார். தீவிரவாத இயக்கத்தை உருவாக்கி, அதிகாரிகள் மீதான வெறுப்பைத் தூண்டிவிட்டதாக அவர் குற்றம்சாட்டப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த வழக்கில் அவருக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.
சிறை மாற்றம்
மாஸ்கோவிலிருந்து 119 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போக்ரோவ் பகுதியின் ‘கரெக்ஷனல் காலனி நம்பர் 2’ சிறையில் நவால்னி அடைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவரது வழக்கறிஞர் சமீபத்தில் அந்தச் சிறைக்குச் சென்றபோது, அப்படி ஒரு பெயரில் எந்தக் கைதியும் இங்கு இல்லை என சிறை அதிகாரிகள் அவரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மாஸ்கோவிலிருந்து கிழக்கே 250 கிலோமீட்டர் தொலைவில், விளாதிமிர் அருகே உள்ள உயர் பாதுகாப்பு சிறை முகாமான ஐகே-6 மெலெகோவோ சிறைக்கு நவால்னி மாற்றப்பட்டிருக்கலாம் என அவரது செய்தித் தொடர்பாளர் கிரா யார்மிஷ் சந்தேகம் தெரிவித்திருக்கிறார். எனினும், இதுகுறித்து ரஷ்ய சிறை நிர்வாகத் துறை எதையும் உறுதியாகத் தெரிவிக்கவில்லை.
“நவால்னி தற்போது மாற்றப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் சிறை உயர் அடுக்குப் பாதுகாப்பு கொண்டது மட்டுமல்ல, மிகவும் பயங்கரமானது. தன்னைக் கொல்ல ஏற்கெனவே முயற்சி செய்த அரசை எதிர்த்து நிற்பவர் அவர்” என கிரா யார்மிஷ் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, நவால்னியின் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்திருக்கிறது.