இஸ்ரேல் பிரதமரின் இந்திய வருகை ஒத்திவைப்பு!

கரோனா தொற்றால் மாறிய பயணத் திட்டம்
கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் சந்தித்துக்கொண்ட இஸ்ரேல் - இந்தியப் பிரதமர்கள்
கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் சந்தித்துக்கொண்ட இஸ்ரேல் - இந்தியப் பிரதமர்கள்

இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட்டின் இந்திய வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், வேறு ஒரு தேதியில் அவர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்றும் இஸ்ரேல் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் முஹமது ஹெய்ப் கூறியிருக்கிறார். நஃப்தாலி பென்னட்டுக்கு, நேற்று (மார்ச் 28) கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

2021 ஜூன் மாதம், நஃப்தாலி பென்னட் பிரதமராகப் பொறுப்பேற்றபோது, அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, ‘‘இந்தியா - இஸ்ரேல் இடையே தூதரக உறவுகள் மேம்படுத்தப்பட்டு 2022-ம் ஆண்டுடன் 30 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. இந்தத் தருணத்தில், நான் தங்களைச் சந்திக்கவும், இருதரப்பு உறவை வலுப்படுத்தவும் ஆர்வமாக உள்ளேன்’’ என அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டின்போதும், இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னெட்டைச் சந்தித்த பிரதமர் மோடி இந்தியா வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார். கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி இருவரும் தொலைபேசி அழைப்பில் பேசிக்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 3 முதல் 5 வரை இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனச் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை சார்பில் அதிகாரபூர்வமான அறிக்கையும் வெளியானது.

இதற்கிடையே, இஸ்ரேலில் கரோனா தொற்று மிதமாக அதிகரித்துவருகிறது. இந்தச் சூழலில்தான், நஃப்தாலி பென்னடுக்கு கரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், அவரது பயணம் ஒத்திவைக்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in