
காஸாவில் ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்துள்ள பிணைய கைதிகளை மீட்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் ராணுவம் அல்-ஷிபா மருத்துவமனைக்குள் அதிரடியாக நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் கடந்த 40 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இதனால் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள். இஸ்ரேல் ராணுவம் தரைவழியாகவும், வான் வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
முன்னதாக ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் இருந்து 239 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். அதைத்தொடர்ந்து இஸ்ரேல் நடத்தும் தொடர் தாக்குதல் காரணமாக சுமார் 15 லட்சம் பேர் அங்கிருந்து இடம் பெயர்ந்து காஸாவின் தென் பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினர் உள்ள இடங்களில் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது. அதேபோல், காஸாவின் மருத்துவமனைகளில் பதுங்கியிருந்த ஹமாஸ் அமைப்பினரையும் இஸ்ரேல் ராணுவத்தினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் பிணைய கைதிகள் அடைத்து வைத்திருப்பதாக கூறப்படும் அல்-ஷிபா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக நுழைந்தது. அப்போது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து, கடும் யுத்தம் நடைபெற்றது.
மருத்துவமனையில் குறிப்பிட்ட பகுதியில் புகுந்துள்ள இஸ்ரேல் படைகள், துல்லிய தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் காஸாவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.