இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. இதில் கடந்த வாரம் மருத்துவமனைக்கு வெளியே நின்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸ் மீது குண்டுவீசி 15 பேர் கொல்லப்பட்டது உலகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது அதைத்தொடர்ந்து அல் ஷிஃபா மருத்துவமனையிலும் தாக்குதல் நடத்தியிருக்கிறது இஸ்ரேல் அரசு.
ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்துள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை வளாகத்தில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிவித்திருக்கிறார் பாலஸ்தீன சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளரான அஷ்ரப் அல் குத்ரா. மருத்துவமனைகளில் தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் சொல்லும் காரணம், ஹமாஸ்தான். ஆம், மருத்துவமனைகளுக்குக் கீழே சுரங்கங்கள் அமைத்து ஹமாஸ் அமைப்பு பதுங்கியிருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.
அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநர் முகமது அபு சல்மியா இதுகுறித்து கூறுகையில், "இந்த வளாகத்தில் ஏராளமான மக்கள் இருப்பதால் இந்த இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம். தொடர்ந்து இப்படி தாக்குதல் நடத்தப்படுவதால், மருத்துவர்களும் நோயாளிகளும் அச்சத்தில் இருக்கிறார்கள். குண்டுமழை சத்தங்களை நாங்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். ஒரு நொடி கூட குண்டுவெடிப்பு இல்லாமல் இல்லை. மருத்துவமனையின் பல ஜன்னல்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன" என்கிறார்.
திங்களன்று, அல் ஜசீரா மற்றும் பாலஸ்தீனிய ஊடகங்கள் இஸ்ரேலிய படைகள் மருத்துவ வளாகத்திற்கு மின்சாரம் வழங்கும் சோலார் பேனல்களை தாக்கியதாக தெரிவித்தது. இதற்கு இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்த சோலார் பேனல் வசதியைப் பயன்படுத்தி ஹமாஸ் நாச வேலைகளில் ஈடுபடுவதாக தெரிவித்தது இஸ்ரேல்.
"ஹமாஸ் பயங்கரவாதிகள் காசாவில் உள்ள [அல்-ஷிஃபா] மருத்துவமனை மற்றும் பிற மருத்துவமனைகளுக்கு உள்ளேயும், சுரங்கம் அமைத்து அடியிலும் செயல்படுகிறார்கள்" என்று இஸ்ரேல் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கடந்த மாதம் தெரிவித்தார்.
ஹமாஸ், பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் மற்றும் அல்-ஷிஃபா மருத்துவமனை அதிகாரிகள் என காசாவில் இருக்கும் அமைப்புகள் அனைத்தும் இஸ்ரேலின் இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார்கள். ஹமாஸுக்கு எதிராக ஆரம்பித்த போர், தற்போது ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்களுக்கும், அந்த மக்களைக் காப்பாற்றும் மருத்துவர்கள், செய்தியாளர்களுக்கு எதிரான போராகவும் மாறியிருப்பதாக சொல்லப்படுகிறது