காசாவை ஆக்கிரமிக்கக் கூடாது... இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் பைடன் எதிர்ப்பு!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
Updated on
2 min read

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் முடிவடைந்த பிறகு காசாவின் பாதுகாப்பு பொறுப்பை இஸ்ரேல் ஏற்கவுள்ளதாக பிரதமர் நெதன்யாகு தெரிவித்ததற்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகாரபூர்வமாக போர் அறிவித்து ஒரு மாதத்துக்கும் மேலாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுவரை 10,328 பேர் பலியானதாக பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது, இதில் 4,237 பேர் குழந்தைகள்.

கடல், வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து தற்போது தரை வழியாக தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல் ராணுவம், காசாவின் மருத்துவமனைகள், மசூதிகள், முகாம்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதனால், காசா மருத்துவமனைகள் அடிப்படை வசதிகளின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

உருக்குலையும் காசா
உருக்குலையும் காசா

இதுகுறித்துப் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “இஸ்ரேல் கால வரையின்றி காசாவின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்கும். அப்படி இல்லாத சூழலால் என்ன நடந்தது என்று நாம் பார்த்தோம். அப்படியான பாதுகாப்பு பொறுப்பு இல்லாததால் ஹமாஸின் பயங்கரவாதம் நாம் நினைத்துப் பார்க்காத அளவுக்கு வெடித்துள்ளது” என்றார்.

இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துறையின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி பேசும்போது, “காசாவை இஸ்ரேல் படைகள் மீண்டும் ஆக்கிரமிப்பது சரியான ஒன்றல்ல. இஸ்ரேலும் அமெரிக்காவும் நண்பர்கள். அதனாலேயே அவர்களின் எல்லா வார்த்தைகளையும் நாங்கள் அங்கீகரிக்க வேண்டியதில்லை. நேதன்யாகு மற்றும் பைடன் எல்லா பிரச்சினைகளிலும் ஒன்று போல முடிவு எடுத்ததில்லை. ஹமாஸின் வழியைப் பின்பற்றாதவர்களால் காசா நிர்வகிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க ஜோ பைடன், காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது என்பது ஒரு பெரிய தவறாகி விடும் என கடந்த மாதம் கூறியிருந்ததை தொடர்ந்து அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் ஹெர்ஜாக், “போர் முடிந்ததும் காசாவை ஆக்கிரமிக்கும் நோக்கம் இஸ்ரேலுக்கு இல்லை” என கூறியது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in