தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்... காசாவில் ஒரு லட்சம் பேர் வெளியேற்றம்!

தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்... காசாவில் ஒரு லட்சம் பேர் வெளியேற்றம்!
Updated on
2 min read

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளதன் காரணமாக அங்கு வசிக்கும் சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி உள்ளனர்.

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் பணயக் கைதிகளாக 240 பேரை கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 7 மாதங்களைக் கடந்தும் இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்த போரில் காசா தரப்பில் இதுவரை சுமார் 35 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடங்கள், வாகனங்கள் நாசமாகியுள்ளன. எனவே போரை நிறுத்தக் கோரி ஐ.நா. அமைப்பு  மற்றும் உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும் போரை நிறுத்த இரு தரப்பும் தயாராக இல்லை.

வெளிநாடுகளில் உள்ள பாலஸ்தீன ஆதரவாளர்கள் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போரை நிறுத்துவது குறித்த பேச்சுவார்த்தைக்கு வருமாறு இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதனை நிராகரித்து விட்டார்.

இந்த சூழ்நிலையில் நேற்று  ஹமாஸ் அமைப்பினர்.திடீரென  இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 4 ராணுவ வீரர்கள் பலியாகினர். இதனையடுத்து தனது படைகளை காசாவுக்குள் அனுப்பி  தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. முன்னதாக ரபா நகரில் வசிக்கும் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.

அதன்படி மக்கள் வெளியேறிய நிலையில்  ரபா நகரில் இஸ்ரேல் ராணுவம் சரமாரி வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எங்கும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. அங்கு வசிக்கும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி உள்ளனர்.  இஸ்ரேல் தரப்பில் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in