
காஸா நகரில் வசிக்கும் மக்களை கேடயமாக பயன்படுத்த ஹமாஸ் தீவிரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதால் காஸா நகர் மீதான தரைவழி தாக்குதலை தொடங்குவதை இஸ்ரேல் தாமதப்படுத்தி வருகிறது.
ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் சென்று 1,300க்கும் மேற்பட்ட இஸ்ரேலியங்களை கொன்று குவித்ததையடுத்து, இஸ்ரேல் வான் வழியாக காஸா மீது கடுமையான தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. இதில், ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமானதுடன் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், பிரதமர் நெதன்யாகுவின் சூளுரையை நிறைவேற்ற 3 லட்சம் வீரர்களுடன் தரைவழி, வான்வழி, கடல்வழி தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் தயாராகியுள்ளது. இதற்காக, காஸாவிலிருந்து பொதுமக்கள் வெளியேற இஸ்ரேல் விதித்துள்ள கெடு நிறைவடைந்த நிலையில், மேலும் அவகாசம் அளிக்கப்பட்டு தாக்குதல் நடவடிக்கை தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் மனித கேடயங்களாக பயன்படுத்த வாய்ப்புள்ளதால் தரைவழித் தாக்குதலுக்கு உள்நாட்டிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிணைக் கைதிகளை உயிருடன் மீட்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதல் நடவடிக்கைகளை உடனடியாக தொடங்குவதற்கு தயக்கம் காட்டிவருவதாக கூறப்படுகிறது.
அதேபோன்று, ஹமாஸ் தீவிரவாதிகளின் நிலத்தடி பதுங்கு குழிகளும் இஸ்ரேல் ராணுவத்துக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்த பதுங்குகுழிகளில் பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் மறைத்து வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே, போர் தொடங்கும்பட்சத்தில் அதிக விலைகொடுக்க வேண்டியிருக்கும். இது, இஸ்ரேல் ராணுவத்தின் தார்மீக செயல்பாட்டுக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அங்கு நிலவும் காலநிலையும் போர்ச்சூழலுக்கு தகுந்த வகையில் இல்லை. பனிமூட்டமான வானிலையால் இஸ்ரேல் விமானங்கள் இயக்கப்படுவதிலும், குறிப்பிட்ட இலக்குகளை தாக்கி அழிப்பதிலும் ராணுவம் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது.
இதற்கிடையில், காஸாவில் இஸ்ரேலிய விமானங்கள் குண்டு வீசுவதை நிறுத்த வேண்டும் என்றும், பாலஸ்தீன மக்கள் மற்றும் குடிமக்களுக்கு எதிரான இஸ்ரேல் தாக்குதல் தொடரும் நிலையில் நிலைமை ஒரேமாதிரியாக இருக்கும் என்பதற்கு யாரும் உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் இஸ்ரேலுக்கு வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் தொடங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போரின் எல்லை விரிவடைந்து கொண்டே செல்லவும் வாய்ப்பு இருப்பதாகவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.