மொத்தமாக முடங்கப்போகிறது அமெரிக்கா? - நிதி மசோதாவால் முற்றும் நெருக்கடி!

ஜோ பைடன்
ஜோ பைடன்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடு தொடர்பான மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்காத நிலையில், மொத்தமாக அமெரிக்கா முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கே நாடாளுமன்றம் மிகவும் வலிமையானது. ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் சில முக்கிய முடிவுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் போதும். ஆனால், அமெரிக்காவில் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படும். அதாவது அமெரிக்க அரசு செலவுகள், அரசு ஊழியர்கள் சம்பளம், ஆய்வு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அரசு நிதி ஒதுக்கீட்டிற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும். கடந்த முறை செப். இறுதி வரை மட்டுமே நிதி ஒதுக்கீடு இருந்தது.

கடைசி நாள் வரை அப்போது மசோதா நிறைவேறாத நிலையில், அமெரிக்கா முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கடைசி நாளில் நவ. 17ம் தேதி வரை நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே அங்கே மீண்டும் கிட்டதட்ட அதேபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு தொடர்பான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் எதிர்க்கட்சியான குடியரசு கட்சியினர் முட்டுக் கட்டை போடுகிறார்கள். இதனால் ஒட்டுமொத்த அமெரிக்காவும் மீண்டும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகை

அமெரிக்கா நாடாளுமன்றத்தில் சபாநாயகர் பொறுப்பு எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் மைக் ஜான்சன் வசம் இருக்கிறது. மைக் ஜான்சன் சமீபத்தில் ஒரு சமரச திட்டத்தை முன்வைத்தார். இருப்பினும், அதில் அரசு செலவினங்களைக் குறைப்பது, இடம்பெயர்வைக் குறைப்பது போன்ற கன்சர்வேடிவ் கருத்துகள் இல்லை. இதனால் குடியரசு கட்சியிலேயே இருக்கும் சில பழைமைவாத எம்பிக்கள் இந்த சமரசத்திற்கு ஆதரவு தராத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கப் பொருளாதாரம் இப்போது நல்ல நிலையில் இல்லை என்பதால் அரசு செலவினங்களைக் குறைக்க வேண்டும் என்பதையே குடியரசு கட்சியினர் வலியுறுத்துகிறார்கள். அமெரிக்க அரசு அதிக செலவுகளைச் செய்யும் நிலையில், அதைக் குறைத்தால் மட்டும் இதற்கு ஆதரவு தருவோம் என்பது குடியரசு கட்சியைச் சேர்ந்த பல எம்.பிக்களின் நிலைப்பாடாக உள்ளது. அப்படி சமரசம் ஏற்படாமல் அமெரிக்கா முடங்கினால், அது அமெரிக்காவின் கடன் மதிப்பீட்டுக் குறியீட்டைக் கடுமையாகப் பாதிக்கும். இந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறினால் மட்டுமே அமெரிக்கா தப்பும். இல்லையென்றால் அமெரிக்கா மொத்தமாக முடங்கும் சூழல் உருவாகும். இதனால் ஏற்படும் உடனடி பொருளாதார பாதிப்பு பெரியளவில் இருக்காது என்ற போதிலும், நாட்கள் செல்ல செல்ல நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு இந்த பாதிப்பு மோசமாக இருக்கும்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அரசு ஷட் டவுன் ஆகும் போது, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள். அல்லது ஊதியமே இல்லாமல் வேலை செய்யும் சூழலுக்குத் தள்ளப்படுவார்கள். அங்குள்ள அரசு ஒப்பந்ததாரர்களுக்கும் பணம் கிடைக்காது. இதனால் பொருளாதாரத்தில் ஒரு வித குழப்பம் ஏற்படும். இதைத் தவிர்க்கவே அங்குள்ள அரசியல் தலைவர்கள் இப்போது போராடி வருகிறார்கள். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் குறித்த பிரச்சாரமும் தீவிரமடைந்துள்ளது. இந்த நேரத்தில் அமெரிக்காவில் ஷட் டவுன் ஏற்பட்டால் அது ஆளும் பைடன் அரசுக்கு மிகப் பெரிய அவப்பெயர் ஏற்படும். எனவே, இதை மனதில் வைத்தும் அமெரிக்கா அரசியல் தலைவர்கள் முடிவுகளை எடுத்து வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in