பொருளாதாரத் தடைகளால் முடங்கிப்போனதா புதின் தேசம்?

பொருளாதாரத் தடைகளால் முடங்கிப்போனதா புதின் தேசம்?

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் எடுத்த பொருளாதாரத் தடை நடவடிக்கைகள், அந்த நாட்டை முடக்கிவிட்டனவா எனும் கேள்வி பலரிடமும் இருக்கிறது. உண்மையில் சில துறைகளில் ரஷ்யா தன்னிறைவுக்கான வழிகளைத் தேடவும், புதிய சந்தைகளைப் பெறவும், புதிய கூட்டாளிகளுடன் தொழில் – வர்த்தகத்தை அதிகப்படுத்தவும் பொருளாதாரத் தடைகள் உதவியிருக்கின்றன. இந்தக் கட்டுரையில் அதை விரிவாக அலசலாம்!

அதே வேளையில் பாதிப்புகளும் இல்லாமல் இல்லை. அந்த பாதிப்புகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளும்போது ரஷ்யா மீது தடை விதித்த நாடுகளுக்கு - குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு - ஏற்பட்டுள்ள பாதிப்புகளே அதிகம் என்பது புரிகிறது. எது எப்படி இருந்தாலும் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டும், அங்கு மீண்டும் அமைதி நிலவ வேண்டும் என்பதில் உலக நாடுகளிடையே மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆறு மாதங்களில் புதிய உறவுகள்

மேற்கத்திய நாடுகளின் தடைக்குப் பிறகு ஆசியாவிலும் மத்திய கிழக்கிலும் ஆப்பிரிக்காவிலும் உள்ள நாடுகள் பலவற்றுடன் ரஷ்ய உறவு வலுவடைந்துள்ளது. முதலில் முக மதிப்பிலும் மாற்று மதிப்பிலும் சரிந்த ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ நாணயமான ரூபிள், இப்போது இழந்த மதிப்பைக் கணிசமாக மீட்டுள்ளது. சோவியத் ஒன்றியம் என்ற பெருங்கூட்டமைப்பு பிளவுபட்டபோது உலகளாவிய பொருளாதார முறைமையான முதலாளித்துவத்தை ரஷ்யாவும் ஏற்றது. மேற்கு நாடுகளுடன் ரஷ்யாவின் அரசியல் உறவு அதற்குப் பிறகும் சில சூழல்களில் மோதலுக்கு வித்திட்டாலும், பொருளாதார உறவுகளில் மாற்றம் இல்லை. மிகப் பெரிய சந்தையான ரஷ்யாவைக் கைவிட மேற்கத்திய நாடுகளும் தயாராக இல்லை.

உக்ரைன் மீதான படையெடுப்புதான் தடை நடவடிக்கைகளுக்குக் காரணம் என்று கூறப்பட்டாலும் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பனிப்போர் முற்றாக முடிந்துவிடவில்லை, அது வேறு விதத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பதன் அடையாளம்தான் இந்தத் தடைகள். ஆனால் மேற்குலகு எதிர்பார்த்ததற்கு மாறாக ரஷ்யா தடைகளைத் தாண்டி இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது.

ரஷ்யாவின் நடுத்தர வர்க்கத்தினர் இந்தத் தடைகளுக்கு முன்னால் ஐரோப்பிய நாடுகளுக்கு எளிதாக விமானத்தில் சென்று வந்தனர், நவீனரக கைப்பேசி முதல் புதிய வடிவிலான ஜீன்ஸ் துணிகள், காலணிகள், அறைகலன்கள், மோட்டார் வாகனங்கள் என்று வாங்கி மகிழ்ந்தனர். ரஷ்யாவிலிருந்தபடியே ஐரோப்பிய நாடுகளுக்கு நொடிக்கணக்கில் வங்கிகள் மூலம் பணம் அனுப்பி தேவைப்பட்ட சாதனங்களையும் சேவைகளையும் பெற்றனர். இப்போது அப்படிச் செய்ய முடியாவிட்டாலும் மாற்று ஏற்பாடுகள் மூலம் பொருட்களையும் சேவைகளையும் பெற முடிகிறது.

ஐரோப்பிய நாடுகளை விட்டால் நுகர்பொருள் உற்பத்திக்கு ஆளில்லை என்ற நிலை இப்போது இல்லை. ஆசிய நாடுகளும் மத்திய கிழக்கும் ஆப்பிரிக்காவும் ஒவ்வொரு வகையில் இந்த இடைவெளியை இட்டு நிரப்புகின்றன. விலையும் தரமும் ஏறுமாறாகவே இருந்தாலும் எதற்கும் தட்டுப்பாடு இல்லை. அதைவிட முக்கியம் ஐரோப்பிய நாடுகள் இழந்த சந்தையை ஆசிய நாடுகளும் ஆப்பிரிக்க நாடுகளும் பெற்றுள்ளதால் அந்த நாடுகளுமே வளர்ச்சி பெறுகின்றன.

ரஷ்யர்களின் நிதிக் கையிருப்பில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை எளிதாகக் கையாள முடியாமல், ‘ஸ்விஃப்ட்’ என்ற வங்கி பரிமாற்ற முறையைப் பயன்படுத்த முடியாமல் இருக்கிறது. ரஷ்ய விமானங்களும் கப்பல்களும் தங்கள் நாட்டுக்குள் வரக் கூடாது என்று பல ஐரோப்பிய நாடுகள் அறிவித்து அமல்படுத்துகின்றன. இதில் ரஷ்யர்களுக்கு உள்ள இடையூறுகளுக்கு இணையாக, தடை விதித்த நாடுகளுமே வியாபாரம், வருமானம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை இழந்துவிட்டு வெளியே சொல்ல முடியாமல் இருக்கின்றன. மேற்கத்திய நாடுகளுக்குப் பதிலாக வேறு நாடுகளை நாட ரஷ்யாவால் முடிந்தது. ரஷ்யாவுக்குப் பதிலாக புதிய நுகர்வு நாட்டைக் கண்டுபிடிக்க ஐரோப்பிய நாடுகளால் முடியவில்லை.

1,200 நிறுவனங்கள் வெளியேற்றம்

ஆப்பிள், மெக்டொனால்ட், ஐகியா, விசா, மாஸ்டர்கார்டு உள்ளிட்ட 1,200-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து வெளியேறின அல்லது சேவையை நிறுத்திக்கொண்டன. ரஷ்யர்கள் முதல் மூன்று மாதங்கள் பாதிப்புக்குள்ளானார்கள், இப்போதோ மாற்று நிறுவனங்கள் மூலம் அவற்றைப் பெறுகின்றனர். ரஷ்யாவிலேயே பல பொருட்களும் சேவைகளும் இப்போது தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் தரம் குறைவாக இருந்தாலும் உற்பத்திச் செலவு அதிகமாக இருந்தாலும் அவசியப்படுவோருக்குத் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கின்றன. நாளடைவில் இதை ரஷ்யர்கள் நல்ல தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்தினால் மேற்கத்திய நாடுகள் மீண்டும் சந்தையைப் பிடிக்க கடுமையாக போட்டி போட வேண்டியிருக்கும்.

ஜிடிபி குறைந்தது

நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரஷ்யாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) 4 சதவீதம் குறைந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் சரிவு. மூன்றாவது காலாண்டில் இது 7 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய நிறுவனங்களின் உற்பத்திக்குத் தேவைப்பட்ட பொருட்கள் கிடைப்பது, சப்ளை சங்கிலித் தொடர் அறுபட்டதால் சிக்கல்களை முதலில் ஏற்படுத்தின. இதனால் விலைவாசி உயர்வு இரட்டை இலக்கத்தை எட்டியது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மோட்டார் கார் உற்பத்தியில் மட்டும் 61.8 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டது. மைக்ரோ சிப்புகள் போன்ற தொழில்நுட்பத் திறமை தேவைப்படும் உதிரி பாகங்கள் கிடைப்பது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அதே சமயம் வேறு சந்தைகளிலிருந்து வரவழைக்கவும் உள்நாட்டிலேயே தயாரிக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

ரூபிளின் மீட்சி

கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ரூபிளின் செலாவணி மாற்று மதிப்பு 30 சதவீதம் சரிந்தது. இது மிகப் பெரிய வீழ்ச்சியாகும். பிறகு அதிலிருந்து மீண்டுவிட்டது. இப்போது ரூபிள்தான் இந்த ஆண்டின் மிகச்சிறந்த செலாவணி என்று சொல்லும் அளவுக்கு மதிப்பு உயர்ந்துவருகிறது. ஏப்ரல் மாதம் 17.8 சதவீதமாக இருந்த பணவீக்க அளவு ஆகஸ்டில் 14.8 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. ரஷ்யாவின் நடப்புக் கணக்குப் பற்று-வரவு இதுவரை இருந்திராத அளவுக்கு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலத்தில் 167 பில்லியன் டாலர்களாக அதிகரித்துவிட்டது.

அதாவது வெளி வர்த்தகத்தில், இறக்குமதிக்காகும் செலவைவிட, ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாய் அபரிமிதமாக உயர்ந்திருக்கிறது. ஓராண்டுக்கு முன்னால் இருந்ததைவிட இது மும்மடங்காக உயர்ந்திருக்கிறது.

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் சாலைப் பராமரிப்புப் பணியாளர்கள் அனைத்து வீதிகளிலும் வேலை செய்கின்றனர். கட்டுமானப் பணியாளர்களுக்கும் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. சிற்றுண்டிக் கடைகள், மதுபான விடுதிகள், காபி கடைகளில் மக்கள் பேச்சும் சிரிப்புமாக கூட்டம் கூட்டமாகக் காணப்படுகின்றனர். மளிகைக் கடைகளில் மேற்கத்திய பொருட்களுக்குப் பதிலாக ஆசிய நாடுகளிலிருந்தும் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் தருவிக்கப்படும் பொருட்கள் நிரம்பி வழிகின்றன.

முதல் சில மாதங்கள் நாட்டுநடப்பு குறித்து கவலை தோய்ந்த முகத்தோடு வீடுகளில் அடைபட்டிருந்த ரஷ்யர்கள் இப்போது கடைகளுக்கும் உணவகங்களுக்கும் சென்று கையில் இருக்கும் பணம் தீரும்வரை வாங்குகின்றனர்.

பொருளாதாரத் தடையால் ரஷ்யப் பொருளாதாரம் 8.5 சதவீதம் சுருங்கிவிடும் என்று பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) ஆரம்பத்தில் கணித்திருந்தது. இப்போது 6 சதவீதம் அளவுக்கே சுருங்கியிருப்பதாகத் தெரிவிக்கிறது. இதுவும்கூட பெரிய வீழ்ச்சிதான் என்றாலும், மேற்குலகு நாடுகள் எதிர்பார்த்த அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

2 காரணங்கள்

ரஷ்யப் பொருளாதாரம் மீட்சி அடைந்ததற்கு இரண்டு காரணங்கள். முதலாவது, வேளாண் துறையில் கிடைக்கும் விளைபொருட்கள், மண்ணிலிருந்து எடுக்கப்படும் கனிமங்கள், கச்சா பெட்ரோலியம், சமையல் எரிவாயு ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்ததால் ரஷ்ய வருமானம் எதிர்பார்ப்புக்கும் அதிகமாகவே உயர்ந்திருக்கிறது. கச்சா பெட்ரோலியம், சமையல் எரிவாயு விற்பனை மூலம் மட்டுமே 337 பில்லியன் டாலர்கள் கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தைவிட இந்த வருவாய் 38 சதவீதம் அதிகம். அடுத்தது ரஷ்ய அரசும் தன் பங்குக்குச் செலவை அதிகப்படுத்தியிருக்கிறது. உலக அளவில் பொருட்களுக்கான தேவை அதிகமாக இருப்பதால் ரஷ்யாவால் அதிகம் விற்க முடிகிறது. ரூபிளின் செலாவணி மதிப்பு நிலைபெற்று வருவதால் தனக்குத் தேவையானவற்றை இறக்குமதி செய்துகொள்ள முடிகிறது.

அதைவிட முக்கியம், மேற்குலகின் தடை விதிப்புப் பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகளிலிருந்து ரஷ்யாவுக்கு விமான, கடல் போக்குவரத்துத் தொடர்பு வலுவடைந்து வருகிறது. ரஷ்ய நிறுவனங்கள் புதிய வழிமுறைகளையும் தொழில்நுட்பங்களையும் கையாளத் தொடங்கியிருக்கின்றன. ரஷ்ய நுகர்வோர்கள் மாற்றுப் பொருட்களை வாங்கத் தொடங்கியுள்ளனர். இதற்கு முன்னால் இறக்குமதியான சாதாரண பொருட்களை இப்போது ரஷ்யாவிலேயே தயாரிக்கத் தொடங்கிவிட்டனர்.

உணவுப் பொருட்கள், தின்பண்டங்கள், நொறுக்குத் தீனிகள், இனிப்புகள், பிஸ்கெட்டுகள், இறைச்சி என்று உணவுத் துறை தொடர்பான தயாரிப்புகளே இப்போது அதிகரித்து வருகின்றன. அழகு சாதனங்கள், ஆடைகள் ஆகியவையும் தயாரிக்கப்படுகின்றன. உள்நாட்டு சுற்றுலா ஊக்கம் பெற்றுள்ளது. கட்டுமான வேலைகளும் வேகம் பெறுகின்றன. அவசியப்படும் மேற்கத்தியப் பொருட்களை ரஷ்ய வியாபாரிகள் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் வாங்கி தங்கள் நாட்டு நுகர்வோர்களுக்கு விற்கின்றனர்.

ரஷ்யாவும் இயற்கையிலேயே வளமான நாடுதான். வைரங்கள், தூய்மையான குடிநீர், அபூர்வமான நவரத்தினங்கள், உலோக – அலோகங்கள், தொழில் துறை தயாரிப்புக்கு மிகவும் தேவைப்படும் நிலக்கரி – இரும்பு உள்ளிட்ட கனிமங்கள் அபரிமிதமாக உள்ள நாடு. கச்சா பெட்ரோலியத்தையும் எரிவாயுவையும் அதனிடமிருந்து வாங்கக் கூடாது என்று தடை விதித்த ஐரோப்பிய நாடுகள்தான் இப்போது தட்டுப்பாட்டாலும் விலையுயர்வாலும் தடுமாறிக்கொண்டிருக்கின்றன.

நட்பு நாடுகள்

நெருக்கடியான இந்த நேரத்தில் ரஷ்யாவுக்கு சீனா, இந்தியா, ஈரான், சவுதி அரேபியா, துருக்கி, பிரேசில், ஆப்பிரிக்காவின் பல நாடுகள் வர்த்தக உறவுகளால் உதவுகின்றன. ஆகவே, எல்லோரும் எதிர்பார்த்ததுபோல ரஷ்யா அப்படியொன்றும் கடுமையாக பாதிக்கப்பட்டுவிடவில்லை என்பதே நிதர்சனம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in