கோத்தபய ராஜபக்ச பதவி தப்புமா?

கோத்தபய ராஜபக்ச பதவி தப்புமா?

இலங்கையில் எதிர்கட்சிகள், பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. அமைச்சரவை சகாக்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ள நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அத்துடன் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களின் போராட்டம் வெடித்துள்ளது. பால், மாவு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் கிடைக்காததால் இலங்கை முழுவதும் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையோடு இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மக்களின் தொடர் நெருக்கடி காரணமாக ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவையில் இருந்து அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

இந்த நிலையில் நான்கு அமைச்சர்களைக் கொண்ட இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ள நிலையில் பிரதமராக உள்ள மஹிந்த ராஜபக்ச, அதிபராக உள்ள கோத்தபய ராஜபக்ச ஆகியோர் பதவி விலக மறுத்துள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளன.

ஏனெனில், கடன் நெருக்கடியைத் தீர்க்க முடியாத அளவிற்கு தலைக்கு மேல் வெள்ளம் போகும் நிலையில் இலங்கை அரசு உள்ளது. 51 பில்லியன் டாலர் அளவிற்கு வெளி நாட்டுக் கடன் வாங்கியுள்ளதால் அதை எந்த வகையில் இலங்கை திருப்பிச் செலுத்தும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இலங்கைக்கு அதிக கடன் கொடுத்த நாடு சீனா தான். இந்நாடு மட்டும் 9.8 சதவீதம் கடன் வழங்கியுள்ளது. ஜப்பான் 9.7 சதவீதம், இந்தியா 2.5 சதவீதம் கடன் வழங்கியுள்ளன. ஆசிய வளர்ச்சி வங்கி 12.7 சதவீதம், உலக வங்கி 9.3 சதவீதம், இதரர்கள் 8.9 சதவீதம் என்ற அளவில் இலங்கையின் கடன் பட்டியல் உள்ளது. இவை மட்டுமின்றி வெளிச்சந்தையில் 47.2 சதவீத கடனை இலங்கை வாங்கியுள்ளது. இலங்கையின் நெருக்கடி நிலையை மற்ற நாடுகள் உணர்ந்து கடனைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் கொடுத்தாலும், வெளிச்சந்தை கடன் 47. 2 சதவீதத்தை உடனடியாக செலுத்த வேண்டிய நிலையில் இலங்கை அரசு உள்ளது. இந்த கடனை அடைக்கவும் இலங்கை கடன் வாங்க வேண்டிய நிலையில் தான் உள்ளது. ஏனெனில், இலங்கையின் அந்நியச் செலவாணி கையிருப்பு முற்றாக கரைந்து விட்டதாக கூறப்படுகிறது.

கடந்த மூன்று மாதங்களில் இரண்டு லட்சம் வெளிநாட்டு பயணிகளின் வருகை மூலம் இலங்கைக்கு பெருமளவு வருமானம் கிடைத்துள்ளது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கைக்கு வர முன் பதிவு செய்த வெளிநாட்டு பயணிகள் தங்கள் வருகையை ரத்து செய்து வருகின்றனர். இதன் காரணமாக இலங்கைக்கு கிடைத்த வருமானம் முற்றிலும் தடைபட்டுள்ளது.

இதனால் உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனம் மற்றும் மற்ற நாடுகளை நம்பியுள்ள இலங்கை அரசு, நிதி திரட்சியை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டாலும், பொதுமக்களின் போராட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, இலங்கையின் பொருளாதாரம் மட்டுமின்றி அதிபர் கோத்தபய ராஜபக்சவின் பதவி ஆட்டம் கண்டுள்ளது. இந்நிலையில் இலங்கை மத்திய வங்கியின் கவர்னர் அஜித் நிவாட் கப்ரால், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் தான் இலங்கையின் நாடாளுமன்ற கூட்டம் இன்று கூடுகிறது. என்ன நடக்கப் போகிறது என்பதை இலங்கை மக்கள் மட்டுமின்றி புலம் பெயர்ந்த தமிழர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in