இலங்கை, பாகிஸ்தான் நெருக்கடிக்குக் காரணம் சீனாவா?

இலங்கை, பாகிஸ்தான் நெருக்கடிக்குக் காரணம் சீனாவா?

இலங்கையிலும் பாகிஸ்தானிலும் நிலவும் பொருளாதாரச் சிக்கல்கள், அரசியல் நெருக்கடிக்கு இட்டுச் சென்றிருக்கிறது. இதன் பின்னணியில் சீனாவின் கடன் திட்டங்கள் இருப்பதாக ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பிரெஞ்சு சிந்தனை அமைப்பு ஒன்றின் தலைவரான ஃபேபியன் பவுஸார்ட் இந்தக் குற்றச்சாட்டைச் சான்றுகளுடன் முன்வைத்து விரிவாகப் பேசியிருக்கிறார்.

இலங்கையில் பெருந்தொற்று பொதுமுடக்கம், ராஜபக்ச குடும்ப ஆட்சியின் தவறான பொருளாதாரக் கொள்கைகள், சீனாவிடமிருந்து வாங்கிய கடன் என ஏகப்பட்ட பிரச்சினைகள் அந்நாட்டுக்கு மக்களைக் கடுமையாகப் பாதித்திருக்கின்றன. இதையடுத்து, மக்கள் வெகுண்டெழுந்து போராட்டம் நடத்திவருகின்றனர். அதேபோல் பாகிஸ்தான் நாடாளுமன்றமான தேசிய அவையில் மார்ச் 8-ல், எதிர்க்கட்சிகள் இம்ரான் அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தன. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கும் கடும் பணவீக்கத்துக்கும் அவரது அரசின் தவறான கொள்கைகள்தான் காரணம் என அக்கட்சிகள் குற்றம்சாட்டின. அதைத் தொடர்ந்து நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களால் அந்நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இதுகுறித்து ‘டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ இணைய இதழில் கட்டுரை எழுதியிருக்கிறார் ஃபேபியன் பவுஸார்ட். அரசியல் மற்றும் வெளியுறவு விவகாரங்களுக்கான மையம் (சிபிஎஃஏ) எனும் சிந்தனை அமைப்பின் தலைவரான ஃபேபியன் இவ்விவகாரத்தில் பல முக்கியத் தகவல்களை முன்வைத்திருக்கிறார்.

ஃபேபியன் பவுஸார்ட்
ஃபேபியன் பவுஸார்ட்

அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு தங்களை வளப்படுத்திக்கொள்ள முயலும் அரசியல் தலைவர்கள்தான் இந்தப் பிரச்சினைக்கு முக்கியக் காரணம் எனக் கூறியிருக்கும் அவர், இதில் சீனாவின் பங்கு குறித்தும் சுட்டிக்காட்டியிருக்கிறார். இலங்கை, பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் சீனாவின் வங்கி நிறுவனங்களிடமிருந்து பெற்ற குறைந்த கால ஆதரவுத் திட்டங்கள் இந்தப் பிரச்சினைக்கு அடித்தளம் என்கிறார் அவர். குறிப்பாக, சீனாவின் பட்டை மற்றும் பாதை முன்னெடுப்பு திட்டம் (பிஆர்ஐ) இலங்கையிலும் பாகிஸ்தானிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

“பாகிஸ்தானில் மிகப் பெரிய அளவில் சீனா செயல்படுத்திவரும் ‘சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம்’ திட்டம், ‘சீனாவின் கிழக்கிந்திய கம்பெனி’ என்று அழைக்கப்படும் அளவுக்குக் காலனியாதிக்க பாணியில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அங்கு ஊடகங்களும் அடக்குமுறையைச் சந்திக்கின்றன” என்று கூறியிருக்கும் ஃபேபியன், பாகிஸ்தானின் அடுத்த தேர்தலில் சீனாவின் பங்கும் இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த இரு நாடுகள் மட்டுமல்ல, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்டிருந்த நாடுகள் மறைமுகக் கடனால் மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்திருப்பதாகக் கூறப்படுகிறது. லாவோஸ், ஜாம்பியா, கிரிகிஸ்தான் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் சீனாவின் கடன் வலையில் சிக்கியிருக்கின்றன என்று தனது கட்டுரையில் ஃபேபியன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.