
ஹிஜாப்புக்கு எதிராக ஈரானில் வெடித்த மக்கள் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்படுவதாக உறுதிசெய்ய இயலாத செய்திகள் வெளியாகி வருகின்றன. அவற்றின் மத்தியில் அதிகாரபூர்வமாக அரசு தரப்பில் விதிக்கப்படும் மரண தண்டனைகளும் தொடங்கி உள்ளன.
செப்டம்பரில் மாஷா அமின் என்ற பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ், அரசின் அறநெறி போலீஸார் கடும் விசாரணை மேற்கொண்டதில் மரணமடைந்தார். அந்த மரணத்துக்கு நீதி கேட்டும், ஹிஜாப் கட்டாயமாக்கலை எதிர்த்தும் ஈரானில் போராட்டங்கள் வெடித்தன. ஈரானின் இந்த போராட்டத்துக்கு சர்வதேச அளவில் ஆதரவு பெருகி வருகிறது.
போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது அரசு நடத்தும் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் இறந்திருப்பதாக உறுதிபடுத்த இயலாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கொல்லப்பட்ட போராட்டக்காரர்களின் எண்ணிக்கை 488 என ஒரு புள்ளி விபரம் தந்துள்ளது ஈரானின் மனித உரிமைகளுக்கான அமைப்பு. இவற்றை மறுத்து வந்த ஈரான் அரசு தற்போது போராட்டத்தில் ஈடுபடுவோர் மற்றும் தூண்டுவோருக்கு எதிராக சட்டபூர்வமான மரண தண்டனையை நிறைவேற்ற தொடங்கியிருக்கிறது.
அந்த வகையில் கடந்த 5 நாட்களில் 2 போராட்டக்காரர்கள் மரண தண்டனைக்கு ஆளாகி இருக்கிறார்கள். பொதுவெளியில் மக்கள் பார்வையில் கிரேன் ஒன்றில் தூக்கிலிட்டு இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கைது செய்யப்படும் போராட்டக்காரர்கள் நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் இவ்வாறு தண்டனைக்கு உள்ளாக்கப்படுவதாக அரசின் செய்தி தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
நீதிமன்ற விசாரணையின்போது, பாதுகாப்பு படையினருக்கு எதிராக ஆயுதம் கொண்டு தாக்கும் போராட்டக்காரர்களை ‘கடவுளுக்கு எதிராக போராடுபவர்’ என தற்போது நீதிமன்றம் வரையறுத்துள்ளது. இஸ்லாமிய மதத்தின் பெயரிலான ஆட்சி நடக்கும் ஈரானில், தெய்வ நிந்தனைக்கு ஆளாவோர் மீது மரண தண்டனை விதிப்பது எளிது. இவ்வாறு, டிச.8 அன்று மோஷன் சேகரி என்ற இளைஞரும், டிச.12 அன்று மஜித்ரேசா ரஹ்னவர்ட் என்பவரும் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் மஹன் சத்ரத் என்ற 22 வயது இளைஞர் தண்டனை நிறைவேற்றத்துக்கு காத்திருப்பில் உள்ளார்.
பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும், அடக்குமுறைக்கான பீதியையும் ஏற்படுத்தும் நோக்கோடு இந்த பொதுவெளி மரண தண்டனைகளை ஈரான் அரசு முன்னெடுக்கிறது. மாறாக, உயிரை துச்சமாக மதித்து போராட்டத்தில் ஈடுபடுவோரும் அங்கே அதிகரித்து வருகின்றனர்.