
காசா மீதான இஸ்ரேலின் தொடர் குண்டுவீச்சுகளை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேல் தேசத்தை இரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் தெற்கு காசாவின் பல்வேறு பகுதிகளில் குண்டுவீசி தீவிரத் தாக்குதலில் ஈடுபட்டது. முன்னதாக அங்குள்ள பாலஸ்தீனியர்களை வெளியேறுமாறு எச்சரித்தது. ஆனால் அதற்கு போதிய அவகாசம் வழங்காது இஸ்ரேல் வீசிய குண்டுகளால் கொத்துக்கொத்தாக காசா குடிமக்கள் இறந்தனர்.
அக்.17 அன்று தெஹ்ரானில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய இரான் தேசத்தின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, காசா மீது தொடர் தாக்குதல்களை நிகழ்த்தும் இஸ்ரேல் மட்டுமன்றி அதன் ஆதரவு நாடுகளையும் எச்சரித்தார். காசா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல், அந்த பிராந்தியத்தில் முழுவதும் வன்முறை எதிர்வினைகளையே ஏற்படுத்தும் எனவும் அயதுல்லா அலி கமேனி எச்சரித்துள்ளார்.
“காசா மீதான குண்டுவெடிப்புகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இஸ்லாமிய நாடுகள் கோபமாக உள்ளன” என்று கமேனி அப்போது அழுத்தமாக தெரிவித்தார். காசாவை மையமாக்கொண்டு இயங்கும் ஹமாஸின் ராணுவப் பிரிவுக்கு பிரதான புரவலராக இரான் தேசம் விளங்குகிறது. ஆயுதங்கள், பயிற்சிகள், ஆலோசனைகள் என சகலத்தையும் இரான் வழங்கி வருகிறது. தங்கள் பின்னே இரானும் அதன் எண்ணெய் வளத்தில் ஊறிய செல்வமும் இருக்கும் நம்பிக்கையில் ஹமாஸ் திடமாக செயல்பட்டு வருகிறது.
ஹமாஸ் மட்டுமன்றி லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இரான் தேசமே அனைத்துமாக நின்று உதவி வருகிறது. இஸ்ரேலுக்கு எதிரான அக்.7 தாக்குதலில், காசா நிலைகளில் இருந்து மட்டுமன்றி, லெபனானின் ஹிஸ்புல்லா நிலைகளில் இருந்து ராக்கெட்டுகள் இஸ்ரேலை பாய்ந்து தாக்கின என்பதை இஸ்ரேல் தாமதமாக உறுதி செய்தது.
முன்னதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரானையும், ஹெஸ்பொல்லாவையும் மறைமுகமாக எச்சரித்தார். “எங்களை மிகவும் சோதிக்க வேண்டாம். கடந்தகாலத் தவறை மீண்டும் செய்யாதீர்கள். அதற்கு நீங்கள் கொடுக்கும் விலை மிகவும் அதிகமாக இருக்கும்" என்று அப்போது அவர் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடியாகவும் கமேனியின் எச்சரிக்கை வெளியாகி இருக்கிறது.
இஸ்லாமிய நாடுகள் கோபமாக இருக்கின்றன என்றதன் மூலம், காசா விவகாரத்தை இஸ்லாமிய நாடுகளுக்கான பொதுப்பிரச்சினையாக கமேனி மாற்றி உள்ளார். இதன் மூலம் இஸ்ரேல் - காசா இடையிலான வழக்கமான மோதல், இருதரப்பிலும் ஆதரவு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்து பெரும் உலகப்போராக உருவெடுக்கச் செய்யும் என்ற பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
HBD JYOTHIKA | மறக்க முடியாத நாளும்... மறுத்து... பின் கிடைத்த வாய்ப்பும்!
இந்தியாவைத் தோற்கடிச்சா என் கூட டின்னர் சாப்பிடலாம்... சர்ச்சையைக் கிளப்பிய பிரபல நடிகை!
அதிர்ச்சி... இளம் மல்யுத்த வீராங்கனை தற்கொலை!
வரி ஏய்ப்பு புகார்... தமிழகத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு!
சோகம்... எல்லாமே 2000 ரூபாய் நோட்டுக்கள்... 1.50 லட்சத்தை மாற்ற முடியாமல் தவிக்கும் பெண்மணி!