இன்று சர்வதேச ஆண்கள் தினம்; தற்கொலையின் பிடியிலிருந்து ஆண்களை காப்பாற்றுவோம்

நவ.19; சர்வதேச ஆண்கள் தினம்
சர்வதேச ஆண்கள் தினம்
சர்வதேச ஆண்கள் தினம்

சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு, அதிகரித்து வரும் ஆண்களின் தற்கொலைகளை தடுக்க இன்று உறுதியேற்போம்.

பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு, பிறப்பில் தொடங்கி சமூகத்தின் சகல மட்டங்களிலும் கிடைக்கும் அனுகூலங்கள் அதிகம் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அதற்காக ஆண் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள், சங்கடங்கள் எதுவும் புறக்கணிக்கத்தக்கதல்ல.

ஆணாக வாழ்வதிலும் வேதனைகள் ஏராளம். பெண்களைப் பார்த்து பொருமும் அளவுக்கும் பல விஷயங்களில் ஆண்களின் பாடு திண்டாட்டமாக இருக்கிறது. அவை பொதுவெளியில் எளிதில் அங்கீகாரம் பெறுவதும் இல்லை. சர்வதேச ஆண்கள் தினம் உருவானதுகூட அந்த வகையில் சேரும்.

சர்வதேச ஆண்கள் தினம்
சர்வதேச ஆண்கள் தினம்

சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்களை பார்த்த பின்னரே, தங்களுக்கென தனியாக சர்வதேச தினம் கொண்டாட ஆண்களுக்கும் ஆவல் பிறந்தது. மகளிர் தினத்தை அதன் முன்னோடிகள் 1909 முதலே கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். மகளிர் தினத்துக்கு இணையாக ஆண்கள் வழிமொழிந்த சர்வதேச ஆண்கள் தினம், 60களின் இறுதியில் பிப்ரவரி 24 அன்று கொண்டாடப்பட்டது. ஆனால் ஏனோ அந்த தினம் ஆண்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை.

1999-ல் மேற்கிந்திய வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர் மறைந்த தனது தந்தையின் நினைவாக நவ.19 தினத்தை ஆண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்தார். இதற்காக தேசத்தின் பிரசித்தி பெற்ற இருவேறு கால்பந்து அணிகள் இணைந்து ஃபிஃபா உலகக்கோப்பைக்கு தயாராகும் தினத்தை, ஆண்களின் தினத்தோடு கோர்த்து பிரபல்யப்படுத்தினார். அங்கே பற்றிக்கொண்ட ஆண்கள் தினம் விரைவில் சர்வதேச ஆண்கள் தினத்துக்கான அங்கீகாரத்தையும் பெற்றது.

சர்வதேச ஆண்கள் தினத்தில், வளர்ந்த ஆண்கள் மற்றும் வளரும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பொதுவெளியில் பேசுமாறு கோரப்படுகிறார்கள். பெரும்பாலும் உடல் மற்றும் மன நலன் சார்ந்து அவை அமைகின்றன. ஆண் என்பவன் பெண் போல அழக்கூடாது, பேசக் கூடாது, உணர்ச்சிகளை வெளியில் கொட்டக்கூடாது போன்ற பிற்போக்கான கற்பிதங்களை களைய வற்புறுத்துகிறார்கள்.

தற்கொலை அழுத்தம்
தற்கொலை அழுத்தம்

அதிலும் பெண்களோடு ஒப்பிடுகையில், ஆண்களின் தற்கொலை 3 மடங்கு அதிகரித்து இருப்பது, ஒப்பீட்டளவில் ஆண்களின் ஆயுள் குறைந்து வருவது, மாரடைப்புக்கு ஆளாகும் ஆண்கள் இரு மடங்காக இருப்பது உள்ளிட்ட அதிர்ச்சிகரமான விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

மூன்றில் ஒரு ஆண் குடும்ப வன்முறைக்கு ஆளாவது, ஆண் குழந்தைகளையும் பாலியல் தொந்தரவுகள் அச்சுறுத்துவது என அதிகம் பேசப்படாதவற்றை, ஆண்கள் தினத்தை முன்னிட்டு பேசுபொருளாக்குகிறார்கள். இதே போக்கில் 2023-ம் ஆண்டுக்கான ஆண்கள் தினத்தின் கருப்பொருளையும் வடிவமைத்திருக்கின்றனர்.

‘ஜீரோ ஆண் தற்கொலை’ என்பதுதான் இந்த வருடத்தின் ஆண்கள் தினத்துக்கான கருப்பொருள். தற்கொலை செய்துகொள்ளும் ஆண்களின் எண்ணிக்கையை சுழியமாக்குவது இந்த தினத்தின் நோக்கமாகிறது. சமூகத்தில் ஒரு பெண்ணின் தற்கொலை அரங்கேறும்போது, 3 ஆண்களின் தற்கொலைகள் நடந்தேறுகின்றன. பெண்களைவிட தற்கொலைக்கான அழுத்தங்களும், சாத்தியங்களும் 3 மடங்கு அதிகமாக ஆண்களுக்கு இருக்கின்றன.

சர்வதேச ஆண்கள் தினம்
சர்வதேச ஆண்கள் தினம்

எனவே, ஆண்களின் மனநல ஆரோக்கியம், மனம்விட்டு பேசுவதற்கான வாய்ப்பு, அவர்களை அழுத்தும் பிரச்சினைகள் உள்ளிட்டவற்றை பொதுசமூகம் இன்று விவாதிக்கத் தலைப்படலாம். குடும்பத்தினரும் காதுகொடுத்து கேட்க முன்வரலாம். அதிகப்படி அன்றாட வேலைப்பளு காரணமாக ஆண்கள் மத்தியில் குறைந்து வரும் உடற்பயிற்சி, உணவில் அக்கறை, தூக்கம் ஆகியவற்றையும் வலியுறுத்தலாம்.

ஆண் நண்பர்களுக்கும், குடும்ப அங்கத்தினருக்கும் பெண்கள் பரிசுகள் வழங்குவதுண்டு. அது அவர்களுடன் மதிப்புமிக்க நேரத்தை செலவிடுவதாகவோ, மனம்விட்டு பேசுவதாகவோ அமையலாம்.

பாலின சமத்துவம் என்பது ஆண்களின் நலனையும் உள்ளடக்கியதே என்பதை, சர்வதேச ஆண்கள் தினத்திலாவது உணர முன்வருவோம்!

சர்வதேச ஆண்கள் தினம்
சர்வதேச ஆண்கள் தினம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in