ரஷ்யா மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை: விரைவில் தொடங்குகிறது

ரஷ்யா மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை: விரைவில் தொடங்குகிறது

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்த நிலையில், அதன் மூலம் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனக் குற்றம்சாட்டிவந்த ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்திருக்கிறது. இந்தப் போரில், பிப்ரவரி 28 வரை 14 குழந்தைகள் உட்பட 352 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்றும், 116 குழந்தைகள் உட்பட 1,684 பேர் காயமடைந்திருக்கின்றனர் என்றும் உக்ரைன் சுகாதாரத் துறை கூறியிருக்கிறது. லட்சக்கணக்கானோர் அகதிகளாக்கப்பட்டிருக்கின்றனர். உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட கூடுதலாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையிலும் ரஷ்யாவின் தாக்குதல் ஓயவில்லை.

இந்நிலையில், இந்தப் போரில் ரஷ்யா நிகழ்த்திய போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) முடிவுசெய்திருக்கிறது.

ஐசிசி தலைமை வழக்கறிஞர் கரீம் அகமது கான் கியூசி
ஐசிசி தலைமை வழக்கறிஞர் கரீம் அகமது கான் கியூசிUN-MICT/ICTY

இதுதொடர்பாக, ஐசிசி தலைமை வழக்கறிஞர் கரீம் அகமது கான் கியூசி, “உக்ரைன் நிலவரம் தொடர்பாக, எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக விசாரணை நடத்த முடிவெடுத்திருக்கிறேன். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ‘ரோம் சிலை’ ஒப்பந்தத்தில் உக்ரைன் இடம்பெறவில்லை. எனவே, உக்ரைன் நிலவரம் தொடர்பாக நானாகச் சென்று பரிந்துரைக்க முடியாது. ஆனால், ‘ரோம் சிலை’ குறிப்பிடும் குற்றங்கள் (இனப்படுகொலை, மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குற்றம்) தனது நாட்டில் நடந்திருப்பது தொடர்பாக சிறப்புரிமை அடிப்படையில் விசாரணை நடத்துமாறு இரண்டு முறை உக்ரைன் கேட்டுக்கொண்டிருக்கிறது. உக்ரைனில் போர்க்குற்றங்களும், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களும் நடைபெற்றிருப்பதாக நான் கருதுகிறேன். இதுதொடர்பான முதற்கட்ட விசாரணைகள் தொடங்கியிருக்கின்றன” என்று கூறியிருக்கிறார்.

ரஷ்யா உடனடியாகத் தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கோரியிருக்கும் உக்ரைன், ரஷ்யாவின் ஊடுருவல் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றத்திடமும் கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in