ஐபிஇஎஃப்: அமெரிக்கா ஆடும் அரசியல் - பொருளாதார ஆட்டம்!

ஐபிஇஎஃப்: அமெரிக்கா ஆடும் அரசியல் - பொருளாதார ஆட்டம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மே 24-ல் நடந்த பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு அமைப்பான ‘குவாட்’ மாநாட்டின்போது. ஒரு முக்கியமான முன்னெடுப்புக்குத் தொடக்கப்புள்ளி வைத்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்களின் முன்னிலையில் வேறு சில நாடுகளின் தலைவர்களுடன் காணொலி மூலம் உரையாடினார். அது, இந்தோ - பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் (ஐபிஇஎஃப்) கூட்டம். அமெரிக்க அதிபராக ஆசியாவுக்கு பைடன் மேற்கொண்ட முதல் பயணம் இதுதான். முதல் பயணத்தின்போதே பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பான முக்கிய அமைப்பையும் தொடங்கிவைத்திருக்கிறார் பைடன். கூடவே, இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா மேற்கொள்ளும் மிக முக்கியமான வர்த்தக உடன்பாடு இது.

இந்த அமைப்பின் பின்னணி என்ன? இந்தியாவுக்கு இதனால் என்ன கிடைக்கும்? பார்க்கலாம்!

முக்கியத்துவம் என்ன?

பாதுகாப்புக் கூட்டமைப்பு, பொருளாதாரக் கூட்டமைப்பு எனப் பிராந்திய அடிப்படையிலான கூட்டமைப்புகள் உலக நாடுகளிடையே ஏராளமாக இருக்கின்றன. ஓர் அமைப்பில் இருக்கும் நாடுகள் இன்னொரு அமைப்பிலும் இடம்பெறும். அந்தந்த அமைப்பின் விதிமுறைகள், வரையறைகளின்படி கிடைக்கும் சாதக பாதகங்களின் அடிப்படையில் அந்நாடுகள் அந்த அமைப்புகளில் தொடர்ந்து நீடிக்கும் அல்லது வெளியேறிவிடும். அப்போதைய புவி அரசியல் சூழலின் அடிப்படையில் இதுபோன்ற அமைப்புகள் உருவாக்கப்படும். பொதுவாக வல்லரசு நாடுகளே அதற்கு வழிவகுக்கும். அந்த வகையில் அமெரிக்கா தலைமையில் உருவாகியிருக்கும் புதிய அமைப்புதான் இந்தோ - பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு.

இந்த அமைப்பில், குவாட் அமைப்பின் உறுப்பு நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. மேலும், தென் கொரியா, மலேசியா, சிங்கப்பூர், நியூசிலாந்து, புருனே, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளும் இதில் இணைகின்றன. உலகின் ஜிடிபியில் ஏறத்தாழ 40 சதவீதப் பங்கு வகிக்கும் நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏசியான் என்று அழைக்கப்படும் 10 தெற்காசிய நாடுகளில் 7 நாடுகள் இந்த அமைப்பில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவுக்குப் போட்டியா?

ஆசியாவை மையமாக வைத்து அமெரிக்கா முன்னெடுக்கும் எந்தத் திட்டமும் சீனாவை மனதில் கொண்டே உருவாக்கப்படுகிறது. ஐபிஇஎஃப் அமைப்பு உருவாவதற்கான புவி அரசியலின் அடிப்படை, சீனாவுடனான அமெரிக்காவின் தொழில் போட்டி. கூடவே அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலுக்கும் பங்கு உண்டு. 2016 பிப்ரவரி 4-ல் டிரான்ஸ்-பசிபிக் கூட்டு ஒப்பந்தம் (டிபிபி) கையெழுத்தானது. ஆஸ்திரியா, புருனே, கனடா, சிலே, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகள் அதில் இணைந்திருந்தன. அதை உருவாக்கியது ஒபாமாவின் அரசு. அப்போது துணை அதிபராக இருந்தவர் பைடன்.

ஆனால், 2017-ல் அதிபரான ட்ரம்ப் ஆட்சிக்குவந்த கையோடு டிரான்ஸ்-பசிபிக் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேற முடிவெடுத்தார். அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான இறக்குமதி தீர்வை, ஏற்றுமதி தீர்வை விஷயத்தில் தெளிவின்மை இருப்பதாகக் கூறி அந்த முடிவை அவர் எடுத்தார். அதன் பின்னர் அந்த அமைப்பு செயலிழந்திருந்த நிலையில், அதை மீட்டெடுக்க பிற நாடுகள் முடிவெடுத்தன. அதன்படி, விரிவான மற்றும் முற்போக்கான டிரான்ஸ் - பசிபிக் கூட்டு ஒப்பந்தம் (சிபிடிபிபி) எனும் பெயரில் அது புதிய வடிவம் பெற்றது. 2021-ல் அதில் சேர சீனா விண்ணப்பித்திருக்கிறது.

இந்தச் சூழலில் இந்தோ – பசிபிக் பிரந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சிகளில் ஒன்றாக இந்த அமைப்பைத் தொடங்குகிறது ஜோ பைடன் அரசு. குறிப்பாக, சீனா எழுப்பும் சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் இதை அமெரிக்கா முன்னெடுக்கிறது. அண்டை நாடுகளுடன் கரிசனத்துடன் நடந்துகொள்வது, பிரச்சினைகளைத் தவிர்க்க முயற்சிப்பது என்பன போன்ற விஷயங்களில் சீனா பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. இந்திய எல்லையில் தொடர்ந்து ஏதேனும் பிரச்சினை செய்துகொண்டுதான் இருக்கிறது. தென் கொரியா, ஜப்பான் என தனது அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சினையை விரோதப் போக்குடன்தான் சீனா கையாள்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததுபோல, தைவான் மீது சீனா படையெடுத்தால் ராணுவ ரீதியில் தலையிடப்போவதாக பைடன் எச்சரித்திருக்கிறார். இருந்தாலும் இன்றைய தொழில் மற்றும் வர்த்தக உலகில் சீனாவின் பங்களிப்பு இல்லாமல் எதுவுமே நடப்பதில்லை என்பதே நிதர்சனம். கணினி முதல் செல்போன் வரை பெரும்பாலான பொருட்களின் உற்பத்தியை சீன நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் தான் மேற்கத்திய நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

அதுமட்டுமல்ல, சீனா தலைமையில் உருவாக்கப்பட்ட பிராந்திய ஒட்டுமொத்தப் பொருளாதாரக் கூட்டுறவு (ஆர்சிஇபி) அமைப்பு ஐந்து மாதங்களுக்கு முன்பே செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. தற்போது ஐபிஇஎஃப் அமைப்பில் அங்கம் வகிக்கும் பல நாடுகள் ஏற்கெனவே ஆர்சிஇபியிலும் அங்கம் வகிக்கின்றன. எனவே, இது அமெரிக்காவுக்குக் கூடுதல் சவால்தான்!

உள்முரண்கள்

“இது வழக்கமான வர்த்தக ஒப்பந்தம் அல்ல. இதில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளின் பொருளாதாரம் வேகமாகவும் நியாயமான முறையிலும் வளர்வதற்கு உதவப்போகிறோம்” என்று பைடன் தெரிவித்திருக்கிறார். இதில் மேலும் பல நாடுகளைச் சேர்க்கவிருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. எனினும், இந்த அமைப்புக்கு இன்னமும் ஒரு தெளிவான வடிவம் கிடைக்கப்பெறவில்லை.

சீனா தனது நலனை முதன்மையாகக் கொண்டு இதுபோன்ற அமைப்புகளிலும் ஒப்பந்தங்களிலும் ஆர்வம் காட்டுவது போலவே, அமெரிக்காவும் இவ்விஷயத்தில் தனது நலனை முதன்மையாகக் கொண்டே காய் நகர்த்துகிறது. அமெரிக்காவிலும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும் உள்ள குடும்பங்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு ஒரு வலுவான, நியாயமான, மேலும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை இந்த அமைப்பு உருவாக்கும் என்கிறது வெள்ளை மாளிகையின் இணையதளம்.

வர்த்தகம் என்பதைத் தாண்டி விநியோகச் சங்கிலியில் உறுதித்தன்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் ஆகியவை இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்களாகச் சொல்லப்படுகின்றன. கூடவே, இந்த அம்சங்களில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது, நியாயமான முறையில் வரிவிதிப்பது, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது போன்றவையும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட அமைப்புகளில் இவ்விஷயத்தில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார். இந்த விஷயங்களில் சீனாவின் அணுகுமுறைக்கு மாற்று வழி காணும் வகையில் ஐபிஇஎஃப் இருக்கும் என்று அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஜினா ரெய்மாண்டோ கூறியிருக்கிறார்.

இந்தியாவின் நிலை

சீனா தலைமையிலான ஆர்சிஇபி அமைப்பிலிருந்து 2019-ல் இந்தியா வெளியேறிவிட்டது. உக்ரைன் போர்ச் சூழலில் ரஷ்யா, அமெரிக்கா என இரண்டு வல்லரசுகளிடமும் கவனமாகக் காய்நகர்த்துகிறது. இந்தியாவுக்கு இது சற்றே அசெளகரியமான சூழல்தான். காரணம், 2019-ல் மத்திய அரசு தாக்கல் செய்த தரவுப் பாதுகாப்பு மசோதா இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் விமர்சனங்களைச் சந்தித்தது. தனிமனிதச் சுதந்திரத்தில் தலையிடும் அதிகாரத்தை அரசுக்கு அளிக்கும் என இந்தியாவில் விமர்சனத்தை எழுப்பிய இந்த மசோதா,

பயனர்களின் மிக முக்கியமான தனிப்பட்ட தரவுகளை இந்தியாவுக்கு வெளியில் கொண்டுசெல்லக் கூடாது எனும் அம்சத்தால் அமெரிக்காவின் விமர்சனத்துக்கும் உள்ளானது. இந்தக் கட்டுப்பாடுகள் டிஜிட்டல் வர்த்தகத்தில் முட்டுக்கட்டைகளை உருவாக்கும் என்று அமெரிக்கா கருதுகிறது. எனினும், இன்றுவரை அந்த விஷயத்தில் இந்தியா இறங்கிவரவில்லை.

இப்படி சில முரண்கள் இருந்தாலும் ஐபிஇஎஃப் அமைப்பில் சேர இந்தியா தயக்கம் காட்டவில்லை. இந்த அமைப்பு உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு தூண்டுதலாக அமையும் என்று இந்தியா கருத்து தெரிவித்திருக்கிறது. அந்த நம்பிக்கை பலிக்கட்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in