அரிசி ஏற்றுமதித் தடையால் அதிரும் ஆசிய சந்தை: இந்திய நடவடிக்கையின் பின்னணி என்ன?

அரிசி ஏற்றுமதித் தடையால் அதிரும் ஆசிய சந்தை: இந்திய நடவடிக்கையின் பின்னணி என்ன?

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கடந்த வியாழக்கிழமை (செப்.8) தடை விதித்தது. அதிலும் அரிசியை ரவை போல உடைத்து ஏற்றுமதி செய்வது அறவே கூடாது என்று தடுத்திருக்கிறது. ஏற்றுமதி செய்யப்படும் அரிசி மீது 20 சதவீத ஏற்றுமதித் தீர்வையையும் விதித்திருக்கிறது. இதனால் ஆசிய சந்தையில் அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்துவருகிறது.

என்ன காரணம்?

மூன்று காரணங்களுக்காக அரசு இந்தத் தடையை விதித்தது. உள்நாட்டில் சில மாநிலங்களில் அதிக அளவு மழையாலும், பல மாநிலங்களில் மழை போதாமையாலும் நெல் விளைச்சலும் சாகுபடிப் பரப்பும் கணிசமாகக் குறைந்திருக்கிறது. கையிருப்பில் உள்ள அரிசி உள்நாட்டுத் தேவையைச் சமாளிக்க போதும் என்றாலும், வரம்பு மீறிய ஏற்றுமதியால் பிறகு தட்டுப்பாடு ஏற்பட்டால் உலகச் சந்தையில் வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்திருக்கும். ஏற்கெனவே, உள்நாட்டிலும் விலை உயர்வு மக்களைப் பாதித்துக்கொண்டிருக்கிறது. எனவே விலையுயர்வைத் தணிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவசியப் பொருளான கோதுமை, கோதுமை மாவு, ரவை ஏற்றுமதிக்குத் தடை விதித்ததைப் போல அரிசிக்கும் தடை விதித்தால்தான் உணவு தானியக் கையிருப்பு போதுமான அளவுக்கு இருக்கும் என்பதாலும் தடை விதிக்கப்படுகிறது. மூன்றாவதாக, சர்வதேசச் சந்தையில் அரிசி விலை அதிகரித்துவருகிறது. இந்தியாவிடமிருந்து அரிசி வாங்கும் பலர் அதைக் கையிருப்பில் வைத்திருந்து, விலை மேலும் உயர்ந்தவுடன் நல்ல விலைக்கு விற்கலாம் என்று ஊக வியாபாரத்துக்காகத்தான் வாங்குகிறார்கள். எனவே இந்த நிலையில் அரிசியை ஏற்றுமதி செய்வது வணிக ரீதியாகவும் நல்லதில்லை என்பதால் அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது. ஆனால் இது நெல் சாகுபடியாளர்களைப் பாதிக்கும் என்று இந்திய ஏற்றுமதியாளர்கள் பதறுகின்றனர்.

அரசு உள்நாட்டு நுகர்வோரின் நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி அளித்துள்ள யோசனைகளையும் பின்பற்ற வேண்டியிருக்கிறது. இக்காரணங்களால் அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அவசியத் தேவைக்கு பிற நாடுகளுக்கு வழங்க, இந்தத் தடையிலிருந்து அரசு விலக்கு தரவும் வாய்ப்பு இருக்கிறது.

இந்தியாவைத் தவிர வியட்நாம், தாய்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகளும் அரிசி ஏற்றுமதி செய்கின்றன. ஆனால் அவையும் இந்திய அரசின் தடையை அடுத்து, தங்களுடைய ஏற்றுமதிகளையும் நிறுத்திக்கொள்ள முடிவெடுத்துள்ளன. இந்தியாவின் அறிவிப்பை அடுத்து ஆசியச் சந்தையில் அரிசியின் விலை 5 சதவீதம் மேலும் அதிகரித்திருக்கிறது. இது மேலும் உயரும்.

உலகளாவிய கவலை

உலக அளவில் ஏற்றுமதியாகும் அரிசியில் இந்தியாவின் பங்களிப்பு 40 சதவீதம். உலகில் 300 கோடிக்கும் மேற்பட்டவர்கள் அரிசியைத்தான் பிரதான உணவாக உண்கின்றனர். இதே போல 2007-ல் அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தபோது ஒரு டன் அரிசி விலையில் மட்டும் 1,000 டாலர்கள் உயர்வு ஏற்பட்டதை அரிசி வர்த்தகர்கள் நினைவில் வைத்துள்ளனர். எனவே இந்தியத் தடையை அடுத்து அரிசியை ஏற்றுமதி செய்யும் உபரி நாடுகள் எச்சரிக்கை அடைந்து, ஏற்றுமதியை நிறுத்தியுள்ளன.

இந்தியா 2021-ல் மட்டும் 215 லட்சம் டன் அரிசியை ஏற்றுமதி செய்தது. உலகின் மிகப் பெரிய அரிசி ஏற்றுமதியாளர்களான தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகள் அனைத்தும் சேர்ந்து ஏற்றுமதி செய்த அளவைவிட இந்தியாவின் ஏற்றுமதிதான் அதிகம். எனவேதான் இந்திய முடிவு ஆசியச் சந்தையை மட்டுமல்ல உலகச் சந்தையையும் கவலை கொள்ள வைத்திருக்கிறது.

இந்தியாவில் அரிசி ஏற்றுமதி செய்யும் துறைமுகங்களில் பணிகள் நடைபெறவில்லை. அரசு புதிதாக விதித்துள்ள 20 சதவீத ஏற்றுமதித் தீர்வையால் தங்களுக்கு லாபம் குறைந்துவிடும், ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துகொண்ட தொகைக்கு மேல் தங்களால் பெற முடியாது என்று ஏற்றுமதியாளர்கள் அரசிடம் முறையிட்டுள்ளனர். ஏற்றுமதியாளர்கள் புதிய ஒப்பந்தங்கள் செய்வதையும் நிறுத்திவிட்டனர். தாய்லாந்து, வியட்நாம், மியான்மர் நாடுகள் உடைந்த அரிசியின் விலையை 5 சதவீதம் அதிகரித்துள்ளன. அரிசி விலை கடந்த நான்கு நாட்களில் மட்டும் டன்னுக்கு 20 டாலர் (1,600 ரூபாய்) உயர்ந்திருக்கிறது. விலை மேலும் உயரும் என்பதால் பல ஏற்றுமதியாளர்களே அரிசி ஏற்றுமதியை நிறுத்திவிட்டனர்.

வியட்நாம் சந்தையில் கடந்த வாரம் ஒரு டன் அரிசி 390 டாலர்கள் முதல் 393 டாலர்கள் வரையில் விற்றது. இப்போது அது டன்னுக்கு 410 டாலர்களாக உயர்ந்துவிட்டது.

சீனா, பிலிப்பைன்ஸ், வங்கதேசம், செனகல், பெனின், நைஜீரியா, கானா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் மோட்டா ரக அரிசியை அதிகம் இறக்குமதி செய்கின்றன. ஈரான், இராக், சவுதி அரேபியா போன்ற நாடுகள் சன்ன ரகமான பாஸ்மதி அரிசியை அதிகம் வாங்குகின்றன.

கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட பொதுமுடக்கங்களாலும் பிறகு உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த தாக்குதலாலும் உணவு தானியங்களின் ஏற்றுமதி – விற்பனை சங்கிலித் தொடரில் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. எனவே உலகச் சந்தையில் கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. அரிசி மட்டும் அதிகம் விலையேறவில்லை. காரணம் அதிக நிலப்பரப்பில் அமோகமாக சாகுபடியானது. அத்துடன் ஏற்றுமதியாளர்கள் உள்பட அனைத்து வியாபாரிகளிடமும் கையிருப்பிலும் அரிசி நிறைய இருந்தது.

இப்போது கையிருப்புகள் கரைந்து வருகின்றன. அடுத்து சந்தைக்கு வரும் அரிசியின் அளவு குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அரிசி மட்டுமல்ல, இந்தியாவின் ஏற்றுமதித் தடையால் கோதுமை, சோளம் உள்ளிட்ட பிற தானியங்களின் விலையும் உயர்ந்துவிடும் என்று சர்வதேச தானிய வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

நிலவரம் இன்னும் மோசமடைவதற்கு முன்பு உரிய நடவடிக்கைகளில் உலக நாடுகள் - இந்தியா உட்பட- இறங்கும் என நம்புவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in