ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஐ.நா.வில் பணிபுரியும் இந்தியர் பலி

ரஃபாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்
ரஃபாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்

காசாவின் ரஃபாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐ.நா.சபையில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினரிடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலின் வான்வழி, தரை வழி தாக்குதல்களில் சுமார் 35,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். இதேபோல் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1200 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் துவங்கி தற்போது 7 மாதங்களை எட்டியுள்ளது. காசா நகரை தொடர்ந்து தற்போது பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்த ரஃபாவிலும் இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபை
ஐக்கிய நாடுகள் சபை

இந்நிலையில் ஐ.நா.சபையில் பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் ரஃபாவில் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இன்னும் அவரது அடையாளம் தெரியப்படுத்தப்படவில்லை என்றும், உயிரிழந்தவர் இந்திய ராணுவத்தில் முன்னர் பணிபுரிந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் கூறுகையில், "ரஃபாவில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்குச் சென்றபோது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புத் துறை (டிஎஸ்எஸ்) ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டதும், மற்றொரு டிஎஸ்எஸ் ஊழியர் காயமடைந்ததையும் அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்" என்றார்.

இந்நிலையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறுகையில், "ஹமாஸுடனான போரில் இஸ்ரேலால் காசாவில் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதை இனப்படுகொலை என்று ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் கருதவில்லை.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன்
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன்

ஹமாஸ் தோற்கடிக்கப்படுவதை அமெரிக்கா பார்க்க விரும்புகிறது. போரின் நடுவே சிக்கிய பாலஸ்தீனியர்கள் நரகத்தில் உள்ளனர். ரஃபாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கை தவறு.

வடக்கு காசாவில் உள்ள எரெஸ் கிராஸிங்கிற்குச் செல்லும் வழியில், இஸ்ரேலிய குடியேறிகள், மனிதாபிமான உதவிக் குழுவைத் தாக்கியது கவலைக்குரியது. இது ஒரு வாரத்துக்குள் நடந்த இரண்டாவது சம்பவமாகும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in