‘என் மகனைக் கொன்றது யார்?’
டொரன்டோவில் சுட்டுக்கொல்லப்பட்ட கார்த்திக் வாசுதேவ்

‘என் மகனைக் கொன்றது யார்?’

டொரன்டோவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய இளைஞரின் தந்தை கேள்வி

டெல்லி என்சிஆர் பிராந்தியத்தின் கீழ் வரும் காஸியாபாதைச் சேர்ந்தவர் ஜிதேஷ் வாசுதேவ். இவரது மகன் கார்த்திக் வாசுதேவ் (21) கடந்த ஜனவரி மாதம், டொரன்டோ நகரின் செனெகா கல்லூரியில் மேலாண்மைப் படிப்பில் சேர்வதற்காக கனடா சென்றிருந்தார். அங்கு படித்துக்கொண்டே பகுதிநேர வேலையும் பார்த்துவந்தார்.

இந்நிலையில், வியாழக்கிழமை (ஏப்.7) மாலை, டொரன்டோ நகரின் ரயில் நிலையத்தின் நுழைவாயிலில், கார்த்திக் மீது ஒருவர் துப்பாக்கியால் பல முறை சுட்டார். இதில் காயமடைந்த கார்த்திக்கு அங்கிருந்த மருத்துவர் ஒருவர் முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கார்த்திக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்த தகவலை, ஜிதேஷ் வாசுதேவுக்குக் கனடா போலீஸார் தெரிவித்தனர். எனினும், இந்தக் கொலைக்கான காரணம் என்ன, கொலையாளி யார் என்பது குறித்த தகவல்கள் தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று ஜிதேஷ் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், “என் மகனை இழந்துவிட்டேன். எனக்கு நீதி வேண்டும். என் மகனுக்கு என்ன நேர்ந்தது என எனக்குத் தெரிய வேண்டும். அவனைச் சுட்டது யார், அவரது நோக்கம் என்ன எனத் தெரிய வேண்டும். இதுகுறித்து விசாரிக்க டொரன்டோ காவல் துறையினரைத் தொடர்புகொள்ள முயன்றேன். ஆனால், அவர்கள் பதிலளிக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.

“வேலை முடிந்து அதிகாலை 1 மணிக்குத்தான் வீடு திரும்புவான். அப்போதெல்லாம், ‘எனக்கு ஒன்றும் ஆகாது. இது பாதுகாப்பான நகரம்’ என்று சொல்வான். மாலை 4.30 மணிக்கு என் மகன் சுடப்பட்டிருக்கிறான். அது ஒரு பாதுகாப்பான நகரம் என என்னால் நம்ப முடியவில்லை” என்று ஜிதேஷ் வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக கனடாவில் உள்ள இந்தியத் தூதரகம் ஜிதேஷைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறது. எனினும், கார்த்திக்கின் உடல் இந்தியாவை வந்தடைய 7 முதல் 8 நாட்களாகும் என்றே தெரிகிறது. கார்த்திக்கைச் சுட்டது கறுப்பினத்தைச் சேர்ந்த நபர் எனப் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

இந்திய மாணவரின் மரணத்துக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.