
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்துவந்த இந்திய வம்சாவளி இளைஞர் காரில் அமர்ந்திருந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்கவாழ் இந்தியர்கள் மீது இப்படியான தாக்குதல்கள் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியைச் சேர்ந்த சத்நாம் சிங் (31), கடந்த சனிக்கிழமை (ஜூன் 25) தான் வசித்துவரும் வீட்டுக்கு அருகே உள்ள செளத் ஓஸோன் பார்க் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் அமர்ந்திருந்தார். மாலை 3.45 மணி அளவில் அங்கு வந்த ஒரு நபர் சத்நாம் சிங்கைக் குறிபார்த்து துப்பாக்கியால் சுட்டார்.
கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் படுகாயமடைந்த நிலையில் அவரை, அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் அவர் மரணமடைந்தார்.
இந்தச் சம்பவம் அருகில் இருந்த ஒரு வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. அந்தக் காணொலியை ஆய்வுசெய்துவரும் நியூயார்க் போலீஸார், குற்றவாளியை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். சத்நாம் சிங் தான் வசித்த இடத்தைச் சேர்ந்தவர்களிடம் நட்பார்ந்த முறையில் பழகியவர் என அவருக்கு அறிமுகமானவர்கள் கூறியிருக்கிறார்கள்.
மேரிலாண்டின் பால்டிமோர் பகுதியில் வசித்துவந்த சாய் சரண் எனும் தெலங்கானா மாநில இளைஞர் ஜூன் 19-ல் இதேபோல் சுட்டுக்கொல்லப்பட்டார். காரில் அமர்ந்திருந்த சாய் சரணை ஒரு மர்ம நபர் துப்பாகியால் சுட்டார். இதில் காயமடைந்த சாய் சரண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரச் சுட்டுக்கொன்றது யார் எனும் தகவல் இதுவரை வெளியாகவில்லை. அந்தச் சம்பவத்தின் சுவடுகள் மறைவதற்குள் மற்றொரு இந்தியர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.