‘உக்ரைனுக்குச் செல்ல வேண்டாம்; அங்கு இருக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்!’

இந்தியத் தூதரகம் எச்சரிப்பதன் பின்னணி என்ன?
‘உக்ரைனுக்குச் செல்ல வேண்டாம்; அங்கு இருக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்!’

உக்ரைனுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என்றும்; அங்கு தங்கியிருக்கும் இந்தியர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியேற வேண்டும் என்றும் உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியிருக்கிறது.

கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் ரஷ்யப் படைகளுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்துவரும் நிலையில், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள டோனெட்ஸ்க், லுகான்ஸ்க், தெற்குப் பகுதியில் உள்ள கெர்ஸான் மற்றும் ஸாப்போரிஸியா ஆகிய பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்துவிட்டதாக சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார். மேலும், அந்தப் பகுதிகளில் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக நேற்று அறிவித்தார். ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட க்ரைமியா மற்றும் செவஸ்டோபோல் பிராந்தியங்களைச் சேர்ந்த க்ராஸ்னடார், பெல்கொரோட், பிரையான்ஸ்க், வொரோனெஸ், குர்ஸ்க், ரஸ்தோவ் ஆகிய பகுதிகளுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரஷ்யப் பிரதமர் மிகையீல் மிஷுஸ்டினின் தலைமையில் ஒரு சிறப்பு ஒருங்கிணைப்பு கவுன்சிலை உருவாக்கி போர் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் புதின் உத்தரவிட்டிருக்கிறார்.

இதையடுத்து அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். குறிப்பாக, அதிக மக்கள்தொகை கொண்ட கெர்ஸான் பகுதியிலிருந்து மக்கள் படகுகள் மூலம் அவசர அவசரமாக வெளியேறும் காட்சிகள் நேற்று வைரலாகின. ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், அப்பகுதிகளில் என்ன விதமான நடவடிக்கைகளை ரஷ்ய ராணுவம் மேற்கொள்ளும் என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. ரஷ்யாவின் இந்த அறிவிப்பை உக்ரைன் கடுமையாகக் கண்டித்திருக்கிறது. இது உக்ரைனியர்களின் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதற்கான முயற்சி என்று உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மிகையிலோ போடோல்யாக் கூறியிருக்கிறார்.

உக்ரைனில் நிலவரம் மேலும் மோசமடைந்திருக்கும் நிலையில், ‘உக்ரைனில் பாதுகாப்பு நிலவரம் மோசமடைந்திருக்கும் நிலையில், அந்நாட்டுக்குச் செல்ல வேண்டாம் என இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. தற்போது உக்ரைனில் இருக்கும் மாணவர்கள் உள்ளிட்ட இந்தியக் குடிமக்கள், எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் ட்வீட் செய்திருக்கிறது.

உக்ரைன் மீது பிப்ரவரி 24-ல் ரஷ்யா தாக்குதல் தொடங்கியதைத் தொடர்ந்து, அங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் படித்துவந்த மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள், மத்திய அமைச்சர்கள் எனப் பலர் ஒருங்கிணைந்து நடத்திய மீட்புப் பணிகள் பெரும் கவனம் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in