தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு முதல்முறையாக ஆப்கன் சென்றது இந்தியக் குழு

தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு முதல்முறையாக ஆப்கன் சென்றது இந்தியக் குழு

ஆப்கனை கடந்த ஆண்டு தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர், இந்திய அரசின் குழு முதன் முறையாக அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

தாலிபான்களின் மூத்த உறுப்பினர்களை சந்திப்பதற்காகவும், அந்த நாட்டில் செய்யப்பட்டு வரும் மனிதாபிமான நிவாரண முயற்சிகளை மேற்பார்வையிடுவதற்காகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் குழு ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அஷ்ரஃப் கனியின் அரசு கவிழ்ந்து தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் இந்திய குழுவின் முதல் பயணம் இதுவாகும்.

தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர் ஆப்கானிஸ்தானில் உள்ள தனது தூதரகத்தை இந்தியா மூடியது. அந்த நாட்டில் இருந்த ஆயிரக்கணக்கான இந்திய மக்களை ராணுவ விமானங்கள் மூலமாக அழைத்து வந்தது. மற்ற உலக நாடுகளைப் போலவே ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் அமைப்பை இதுவரை இந்தியா அங்கீகரிக்கவில்லை. இந்த சூழலில்தான் இந்திய குழுவினர் காபூலில் தாலிபான் மூத்த தலைவர்களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த குழு ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்படும் இந்தியாவின் மனிதாபிமான உதவிப்பணிகளை மேற்பார்வையிடும் என்றும், நிவாரண விநியோகத்தில் ஈடுபட்டுள்ள சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்திக்கும் என்றும், இந்திய திட்டங்கள் செயல்படுத்தப்படும் பல்வேறு இடங்களுக்குச் சென்று பார்வையிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்கூட்டியே அறிவிக்கப்படாத இந்தப் பயணத்துக்கு தாலிபான்கள் தரப்பிலிருந்து பாதுகாப்பு உத்தரவாதம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in